மொத்த உலகத்துக்கும் இந்தியால இருந்துதான்... 6 லட்ச ரூபா காரை பற்றி வெளியான புதிய தகவல்...
பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ரெனால்ட் நிறுவனம் இந்திய சந்தையில் பிரிட்ஜர் (Renault Bridger) என்ற புதிய காரை விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது. பெட்ரோல், சிஎன்ஜி, ஹைப்ரிட் மற்றும் எலெக்ட்ரிக் என பல்வேறு வெர்ஷன்களில் இந்த கார் விற்பனை செய்யப்படவுள்ளது. இது சப்-காம்பேக்ட் எஸ்யூவி ரகத்தை சேர்ந்த கார் ஆகும்.
இந்திய சந்தையில் டாடா நெக்ஸான் (Tata Nexon), மாருதி சுஸுகி பிரெஸ்ஸா (Maruti Suzuki Brezza), மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் (Maruti Suzuki Fronx), கியா சொனெட் (Kia Sonet), ஹூண்டாய் வெனியூ (Hyundai Venue), மஹிந்திரா எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ (Mahindra XUV 3XO) போன்ற கார்கள் உடன், ரெனால்ட் பிரிட்ஜர் போட்டியிடும்.

இந்திய சந்தையில் ரெனால்ட் பிரிட்ஜர் காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை வெறும் 6 அல்லது 7 லட்ச ரூபாய் என்ற அளவில் மட்டுமே நிர்ணயம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சூழலில், ரெனால்ட் பிரிட்ஜர் காரை பற்றிய புதிய தகவல் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.
இதன்படி பார்த்தால் இந்தியாதான் ரெனால்ட் பிரிட்ஜர் காரின் ஏற்றுமதி மையமாக இருக்க போகிறது. அதாவது இடது கை டிரைவிங் கொண்ட சந்தைகளுக்கும், வலது கை டிரைவிங் கொண்ட சந்தைகளுக்கும் இந்தியாவில் இருந்துதான் ரெனால்ட் பிரிட்ஜர் கார்கள் ஏற்றுமதி செய்யப்படவுள்ளன. இது குறித்து கார்வாலே தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

ரெனால்ட் நிறுவனம் இந்திய சந்தையில் தற்போது புத்துணர்ச்சியுடன் செயல்பட்டு வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை மொத்தம் 3 கார்களை மட்டுமே ரெனால்ட் நிறுவனம் விற்பனை செய்து வந்தது. அவை ரெனால்ட் க்விட் (Renault Kwid), ரெனால்ட் கைகர் (Renault Kiger) மற்றும் ரெனால்ட் ட்ரைபர் (Renault Triber) ஆகியவை ஆகும்.
ஆனால் கடந்த ஒரு சில வாரங்களுக்கு முன்பு புதிய தலைமுறை ரெனால்ட் டஸ்டர் (Renault Duster) காரை, ரெனால்ட் நிறுவனம் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்தது. இது கடந்த 2012ம் ஆண்டில் இருந்து 2022ம் ஆண்டு வரை என மொத்தம் 10 ஆண்டுகள் இந்தியாவில் விற்பனையில் இருந்த கார் ஆகும். தற்போது சுமார் 4 ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு, அதன் புதிய தலைமுறை மாடல் மீண்டும் விற்பனைக்கு வந்துள்ளது.
இதை தொடர்ந்துதான் ரெனால்ட் பிரட்ஜர் கார் விற்பனைக்கு வரவுள்ளது. அத்துடன் ரெனால்ட் டஸ்டர் காரின் 7 சீட்டர் வெர்ஷன் (தற்போது விற்பனையில் இருப்பது 5 சீட்டர் மாடல்) ஆகியவை எல்லாம் விற்பனைக்கு வரவுள்ளன. எனவே இந்திய சந்தையில் விற்பனையில் சாதனைகளை படைக்க வேண்டும் என்ற ஒரு முடிவோடுதான் ரெனால்ட் நிறுவனம் உள்ளது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: ரெனால்ட் மட்டுமல்லாது, அதன் கூட்டணி நிறுவனமான நிஸான் நிறுவனமும், இந்திய சந்தையில் புத்துணர்ச்சியுடன்தான் செயல்பட்டு வருகிறது. ரெனால்ட் நிறுவனத்தின் ட்ரைபர் அடிப்படையில் நிஸான் க்ராவைட் கார் சமீபத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. அதை தொடர்ந்து ரெனால்ட் டஸ்டர் காரின் அடிப்படையில் நிஸான் டெக்டான் காரும் விரைவில் விற்பனைக்கு வரவுள்ளது. அதேபோல் ரெனால்ட் பிரிட்ஜர் காரின் நிஸான் வெர்ஷனும் விற்பனைக்கு வரும் என நாங்கள் கருதுகிறோம்.


Click it and Unblock the Notifications