நகரின் பரபரப்பான சாலையில் சுற்றி திரிந்த கார்! யார் கண்ணிலும் படாமல் போய்டலாம்னு பார்த்தாங்க!
புதிய ரெனால்ட் டஸ்டர் (Renault Duster) கார் சமீபத்தில் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இந்த நிலையில், டஸ்டர் கார் ஒன்று முழுவதும் மறைக்கப்பட்ட நிலையில் சோதனை ஓட்டத்தில் உட்படுத்தப்பட்டு உள்ளது. அதாவது, ஏற்கனவே விற்பனைக்கு வந்துவிட்ட கார் முழுவதும் மறைக்கப்பட்ட நிலையில் பொது சாலையில் ஓட்டிப் பார்க்கப்பட்டு தயாரிப்பு நிறுவனத்தால் சோதனை செய்யப்பட்டுள்ளது. இது ஏன்? எதற்காக? என்பதை பற்றி தான் இனி இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம்.
ரெனால்ட் நிறுவனம் புதிய டஸ்டர் காரை கடந்த மார்ச் 17ஆம் தேதி விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. 2022ஆம் ஆண்டில் விற்பனை நிறுத்தப்பட்ட ரெனால்ட் டஸ்டர் கிட்டத்தட்ட 4 வருடங்களுக்கு பிறகு மீண்டும் இந்தியாவில் களமிறக்கப்பட்டுள்ளது. அறிமுகத்திற்கு முன்னதாக பலமுறை புதிய டஸ்டர் சோதனை ஓட்டங்களுக்கு உட்படுத்தப்பட்டு இருந்தது. ஆனால், தற்போது அறிமுகத்திற்கு பிறகு புதிய டஸ்டர் மீண்டும் சோதனை ஓட்டத்தில் உட்படுத்தப்பட்டு உள்ளது.

இதற்கு காரணம், புதிய டஸ்டரில் கொண்டுவரப்படும் புதிய என்ஜின் ஆப்ஷன் ஆகும். புதிய டஸ்டர் காரை இப்போதைக்கு 1 லிட்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் மற்றும் 1.3 லிட்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் என இரு விதமான என்ஜின் ஆப்ஷன்களில் மட்டுமே ரெனால்ட் அறிமுகப்படுத்தி உள்ளது. இருப்பினும், விரைவில் 3வது என்ஜின் ஆப்ஷனாக 1.8 லிட்டர் என்ஜினையும் புதிய டஸ்டரில் அறிமுகப்படுத்த உள்ளதாக கடந்த மார்ச் 17ஆம் தேதி அறிமுகத்தின் போதே ரெனால்ட் தெரிவித்து இருந்தது.
புதிய 1.8 லிட்டர் பெட்ரோல் என்ஜின் உடன் டஸ்டர் கார் ஆனது ஹைப்ரீட் (Hybrid) கார் ஆக அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதன் அறிமுகம் இந்த ஆண்டு இறுதியில் தீபாவளிக்கு முன்னதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், புதிய டஸ்டர் ஹைப்ரீட் காரை பொது சாலைகளில் ஓட்டிப் பார்த்து சோதனை செய்யும் பணிகளை இப்போதே ரெனால்ட் துவங்கியுள்ளது.

இதனை உறுதிப்படுத்தும் படங்கள் ஆர்யன் ரகுராம் என்பவரது ஃபேஸ்புக் (Facebook) பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த படங்களை வைத்து பார்க்கும்போது இந்த சோதனை ஓட்டம் பெங்களூருவில் இரவு நேரத்தில் நடத்தப்பட்டுள்ளது. புதிய டஸ்டர் கார்கள் சென்னைக்கு அருகே ஓரகடம் பகுதியில் உள்ள ரெனால்ட்டின் தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்படும் நிலையில், இந்த சோதனை ஓட்டம் பெங்களூருவில் நடத்தப்பட்டுள்ளது.
இந்த சோதனை ஓட்டத்தில் புதிய டஸ்டர் கார் முழுவதுமாக மறைப்புகளால் மறைக்கப்பட்டுள்ளது. தற்போதைய அதே தோற்றத்தில் புதிய ஹைப்ரீட் பவர்டிரெயின் உடன் புதிய டஸ்டர் ஹைப்ரீட் கார் அறிமுகம் செய்யப்படும் என நாம் எதிர்பார்த்துக் கொண்டிருந்த நிலையில், மறைக்கப்பட்ட நிலையில் தற்போது அந்த கார் சோதனை செய்யப்பட்டிருப்பது டஸ்டர் ஹைப்ரீட் காரின் தோற்றத்தில் சில மாற்றங்கள் கொண்டுவரப்படலாம் என்பதை காட்டுகிறது.
இந்த சோதனை ஓட்டம் தொடர்பாக தற்போது வெளியாகி இருக்கும் படம் ஒன்றில் காரின் உட்புறத்தையும் பார்க்க முடிகிறது. அதில், காரின் டாஷ்போர்டில் 10.1 இன்ச்சில் இன்ஃபோடெயின்மென்ட் தொடுத்திரை மற்றும் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் திரை ஆகியவை காட்சியளிக்கின்றன. புதிய டஸ்டர் ஹைப்ரீட் காரில் 1.8 லிட்டர் நேச்சுரலி-அஸ்பிரேட்டட் பெட்ரோல் என்ஜின் உடன் 1.4kWh திறன் கொண்ட பேட்டரி உடன் எலெக்ட்ரிக் மோட்டார் (Electric Motor) வழங்கப்பட உள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: தீபாவளிக்கு இன்னும் மாதக்கணக்கில் உள்ள நிலையில், அதற்குள்ளாகவே புதிய டஸ்டர் ஹைப்ரீட் காரின் சோதனை ஓட்டத்தில் ஈடுப்பட்டிருப்பது ரெனால்ட் நிறுவனத்திற்கு இதில் உள்ள ஈடுப்பாட்டை காட்டுகிறது. ரெனால்ட் நிறுவனத்தின் ஆராய்ச்சி & கண்டுப்பிடிப்பு மையம் சென்னையில் இருந்தாலும், தொழிற்நுட்ப மையம் பெங்களூருவில் உள்ளதால் இந்த சோதனை ஓட்டம் பெங்களூருவில் நடத்தப்பட்டுள்ளதாக கருதுகிறோம்.


Click it and Unblock the Notifications








