25 கிமீ மைலேஜ், 160 எச்பி பவர்... அக்.17ல் வரும் ரெனோ டஸ்ட்டர் ஹைப்ரிட் முதல் லாட் விற்று தீர்ந்தது!
மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் புதிய தலைமுறை ரெனோ டஸ்ட்டர் மாடலின் ஸ்ட்ராங் ஹைபிரிட் மாடல் வரும் அக்டோபர் 17 அன்று விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது. ஏற்கனவே 1.0 லிட்டர் மற்றும் 1.3 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் தேர்வுகளுடன் அறிமுகம் செய்யப்பட்ட டஸ்ட்டர் வரிசையில், இந்த செல்ஃப்-சார்ஜிங் ஹைபிரிட் மாடல் மூன்றாவது எஞ்சின் தேர்வாக அமையும்.
இந்த ஹைப்ரிட் டஸ்ட்டர் எஸ்யூவியில் 1.8 லிட்டர் 4 சிலிண்டர் பெட்ரோல் எஞ்சினுடன் ரெனோவின் இ-டெக் (E-Tech) ஹைபிரிட் தொழில்நுட்பம் இணைக்கப்பட்டுள்ளது. இதில் 20 பிஎச்பி திறன் கொண்ட ஸ்டார்ட்டர் ஜெனரேட்டர் மற்றும் 49 பிஎச்பி திறன் கொண்ட டிராக்ஷன் மோட்டார் என இரண்டு எலக்ட்ரிக் மோட்டார்கள் வழங்கப்படுகின்றன. அத்துடன் 1.4 kWh பேட்டரி பேக் இடம்பெற்றுள்ளது. இந்த ஒட்டுமொத்த அமைப்பும் இணைந்து 160 பிஎச்பி பவரையும். 172 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும்.

இந்தியாவில் உள்ள நடுத்தர அளவு ஹைபிரிட் எஸ்யூவி பிரிவிலேயே இதுதான் மிகவும் சக்திவாய்ந்த மாடலாக இருக்கும். கிளட்ச் இல்லாத மல்டி-மோடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மூலம் சக்கரங்களுக்கு ஆற்றல் செலுத்தப்படும். நகரப் போக்குவரத்து நெரிசலின் போது 80 சதவீத பயணத்தை எலக்ட்ரிக் மோடிலேயே மேற்கொள்ள முடியும் என ரெனோ தெரிவிக்கிறது. இதனால் லிட்டருக்கு 22 முதல் 25 கிமீ வரை மைலேஜ் கிடைக்க வாய்ப்புள்ளது.
வெளிப்புற டிசைனைப் பொறுத்தவரை, டெயில்கேட்டில் வழங்கப்பட்டுள்ள HYBRID பேட்ஜ் தவிர வழக்கமான டஸ்ட்டர் மாடலின் தோற்றத்திலேயே இது வர இருக்கிறது. இந்த காரில் ரெனோவின் முத்தாய்ப்பான கிரில், எல்இடி பகல்நேர விளக்குகள், 18 அங்குல அலாய் வீல்கள் மற்றும் கனெக்டெட் எல்இடி டெயில் லைட்டுகள் ஆகியவை இதன் முக்கிய டிசைன் அம்சங்களாக கவர்கின்றன.
உள்புறத்தில் கூகுள் இயங்குதளத்துடன் கூடிய 10.1 அங்குல தொடுதிரையுடன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், வயர்லெஸ் ஸ்மார்ட்போன் கனெக்டிவிட்டி, காற்றோட்ட வசதி கொண்ட முன்புற இருக்கைகள், லெவல்-2 அடாஸ் (ADAS) பாதுகாப்பு தொழில்நுட்பம், பனோரமிக் சன்ரூஃப் மற்றும் 360-டிகிரி கேமரா போன்ற வசதிகள் இடம்பெற்றுள்ளன.
தற்போது பெட்ரோல் மாடல்கள் ரூ.10.49 லட்சம் முதல் ரூ.18.69 லட்சம் வரையிலான எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்படும் நிலையில், ஹைபிரிட் வேரியண்ட்டுகள் வழக்கமான மாடல்களை விட ரூ.1.5 லட்சம் முதல் ரூ.2 லட்சம் வரை கூடுதல் விலையில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. சந்தையில் மாருதி சுஸுகி கிராண்ட் விட்டாரா மற்றும் டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் ஆகிய செல்ஃப் சார்ஜிங் ஹைபிரிட் கார்களுக்கு இது நேரடி போட்டியாக அமையும்.
இந்த ஆண்டில் உற்பத்தி செய்வதற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட அனைத்து டஸ்ட்டர் ஹைப்ரிட் கார்களுக்கும் ஏற்கனவே முன்பதிவு செய்யப்பட்டு விட்டது. எனவே, இந்த மாடலுக்கு முன்பதிவு தற்காலிகமா நிறுத்தப்பட்டு இருக்கிறது. வரும் அக்டோபர் 17ந் தேதி விலை அறிவிப்புக்கு பின்னர் டெலிவிரி கொடுக்கும் பணிகளும் துவங்கப்படும்.
முதல் லாட்டில் புக்கிங் செய்த வாடிக்கையாளர்களுக்கு டெலிவிரி கொடுத்து முடிந்த பின்னர் வரும் புக்கிங்கை வைத்து அடுத்த லாட் உற்பத்தி தொடங்கும். அதன்பின்னர்தான், விலையை பார்த்து வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு டெலிவிரி கிடைக்கும் என்பதால், இனி புக்கிங் செய்யும் வாடிக்கையாளர்கள் புத்தாண்டுக்கு பின்னரே டெலிவிரி பெற முடியும் என்ற நிலை உள்ளது.


Click it and Unblock the Notifications


