பிரபலமான அருவியின் பெயரில் வர போகும் புதிய கார்! இந்த பேருக்காவே நிறைய பேர் போட்டி போட்டுகிட்டு வாங்க போறாங்க!
சர்வதேச சந்தைகளில் பழைய தலைமுறை ரெனால்ட் டஸ்டர் (Renault Duster) கார் விற்பனையில் இருந்தபோது, அதன் அடிப்படையில் உருவாக்கப்பட்ட பிக்அப் டிரக் (Pickup Truck) ஒன்றும் விற்பனை செய்யப்பட்டது. ரெனால்ட் டஸ்டர் ஓரோச் (Renault Duster Oroch) என்ற பெயரில், இந்த பிக்அப் டிரக் விற்பனையாகி வந்தது.
தென் அமெரிக்க கண்டத்தில் உள்ள நாடுகளான பிரேசில், அர்ஜென்டினா, கொலம்பியா, பெரு மற்றும் சிலி போன்ற நாடுகளில், ரெனால்ட் டஸ்டர் ஓரோச் விற்பனை செய்யப்பட்டது. இந்த சூழலில் தற்போது புதிய தலைமுறை ரெனால்ட் டஸ்டர் கார் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. எனவே இதன் அடிப்படையில் புதிய பிக்அப் டிரக் ஒன்றை ரெனால்ட் நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது.

சர்வதேச சந்தைகளில் ரெனால்ட் டஸ்டர் காரின் 7 சீட்டர் வெர்ஷன் ரெனால்ட் போரெல் (Renault Boreal) என்ற பெயரில் விற்பனையாகி வருகிறது. இதற்கும், புதிதாக விற்பனைக்கு வரவுள்ள பிக்அப் டிரக்கிற்கும் ஏராளமான ஒற்றுமைகள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரெனால்ட் போரெல் காரின் நீளம், அகலம் மற்றும் உயரம் முறையே 4,556 மிமீ, 1,841 மிமீ மற்றும் 1,650 மிமீ ஆக உள்ளன.
அதே நேரத்தில் ரெனால்ட் போரெல் காரின் வீல்பேஸ் நீளம் 2,702 மிமீ ஆகவும், க்ரவுண்ட் க்ளியரன்ஸ் 213 மிமீ ஆகவும் இருக்கிறது. ஆனால் புதிய பிக்அப் டிரக்கின் நீளம் மற்றும் வீல்பேஸ் நீளம் இதை விட மிகவும் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரெனால்ட் நயகரா (Renault Niagara) என்ற பெயரில் இந்த புதிய பிக்அப் டிரக் விற்பனைக்கு வருவது தற்போது அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

முன்னதாக கடந்த 2023ம் ஆண்டில், ரெனால்ட் டஸ்டர் நயகரா என்ற பெயரில், புதிய பிக்அப் டிரக் கான்செப்ட் ஒன்றை, ரெனால்ட் நிறுவனம் காட்சிக்கு வைத்திருந்தது. தற்போது அதே பெயரில் இந்த புதிய பிக்அப் டிரக் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படுவது அதிகாரப்பூர்வமாக உறுதியாகியுள்ளது.
தென் அமெரிக்க நாடுகளில் விற்பனை செய்வதற்காக அர்ஜென்டினாவில் இந்த பிக்அப் டிரக் உற்பத்தி செய்யப்படவுள்ளது. ஆனால் இந்தியாவில் இந்த பிக்அப் டிரக் விற்பனைக்கு வருமா? என்பது தொடர்பாக அதிகாரப்பூர்வமான தகவல் எதுவும் இன்னும் வெளியாகவில்லை. முன்பெல்லாம் பிக்அப் டிரக் போன்ற 'லைப்ஸ்டைல்' (Lifestyle) செக்மெண்ட் வாகனங்களுக்கு, இந்தியாவில் பெரிதாக வரவேற்பு இருக்காது.
ஆனால் தற்போது இந்த சூழல் மாறி வருகிறது. லைப்ஸ்டைல் செக்மெண்ட் வாகனங்களை அதிகம் பேர் வாங்க தொடங்கியுள்ளனர். எனவே எதிர்காலத்தில் இந்த பிக்அப் டிரக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. ஆனால் இதை நாம் கொஞ்சம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
ரெனால்ட் டஸ்டர் நயகரா பிக்அப் டிரக்கில் 1.3 லிட்டர் டர்போ பெட்ரோல், 1.8 லிட்டர் ஸ்ட்ராங் ஹைப்ரிட் பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன்கள் (Engine Options) வழங்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. அத்துடன் 10.1 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், 10.25 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் போன்ற வசதிகளையும் (Features) இது கொண்டிருக்கலாம்.
மேலும் பனரோமிக் சன்ரூஃப், லெவல் 2 அடாஸ் பாதுகாப்பு தொகுப்பு, 360 டிகிரி கேமரா மற்றும் மசாஜ் வசதியுடன் கூடிய முன் பக்க இருக்கைகள் போன்ற வசதிகளையும், ரெனால்ட் டஸ்டர் நயகரா பிக்அப் டிரக் கொண்டிருக்கலாம் என தற்போது வெளியாகி வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: புதிய தலைமுறை ரெனால்ட் டஸ்டர் கார் இந்திய சந்தையில் வெகு சமீபத்தில்தான் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இதற்கு அடுத்தபடியாக இதன் 7 சீட்டர் வெர்ஷனை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்ய ரெனால்ட் நிறுவனம் தயாராகி வருகிறது. இந்த வரிசையில் ரெனால்ட் டஸ்டர் நயகரா பிக்அப் டிரக்கும் இந்தியாவில் விற்பனைக்கு வந்தால் நன்றாக இருக்கும் என நாங்கள் கருதுகிறோம்.


Click it and Unblock the Notifications