ரெனோ டஸ்ட்டரில் விலை குறைவான டர்போ எஞ்சின் வருகிறது: விலை ரூ.1.5 லட்சம் வரை குறைய வாய்ப்பு
புதிய தலைமுறை மாடலாக வந்த ரெனோ டஸ்ட்டர் (Renault Duster) எஸ்யூவி குறிப்பிட்ட வாடிக்கையாளர் வட்டத்தை பெற்று வருகிறது. குறிப்பாக, இதன் சக்திவாய்ந்த டர்போ பெட்ரோல் எஞ்சின் பலரையும் கவர்ந்துள்ளது. இந்நிலையில், டஸ்ட்டர் எஸ்யூவியை இன்னும் அதிகமான வாடிக்கையாளர்களிடம் கொண்டு சேர்க்க ரெனோ நிறுவனம் புதிய திட்டத்தை முன்னெடுத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
தற்போது விற்பனையில் இருக்கும் 1.3 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சினுக்கு மாற்றாக, புதிய 1.3 லிட்டர் எம்பிஎஃப்ஐ (MPFi) டர்போ பெட்ரோல் எஞ்சினைஅறிமுகப்படுத்த ரெனோ திட்டமிட்டுள்ளது தெரிய வந்துள்ளது. இதன் மூலம் டஸ்ட்டரின் குறிப்பிட்ட வேரியண்ட்டுகளின் விலையைக் கணிசமாக குறையும் வாய்ப்பு இருக்கிறது.

புதிய எஞ்சின்?
தற்போது டஸ்ட்டரில் பயன்படுத்தப்படும் 1.3 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் டிஜிடிஐ (TGDi) தொழில்நுட்பத்தைக் கொண்டுள்ளது. இதற்கு மாற்றாக புதிய எம்பிஎஃப்ஐ டர்போ எஞ்சினை கொண்டு வர ரெனோ திட்டமிட்டுள்ளது. இந்த புதிய எஞ்சின் தயாரிப்புச் செலவு குறைவாக இருக்கும் என்பதால் விலையையும் குறைத்து நிர்ணயிக்க முடியும்.
இந்த புதிய எஞ்சின் குறிப்பாக ஆரம்ப நிலை மற்றும் நடுத்தர வேரியண்ட்டுகளில் அறிமுகம் செய்யப்படும். இதன் மூலம் விலை காரணமாக அதிக சக்திவாய்ந்த எஞ்சின் கொண்ட டஸ்ட்டரை வாங்க முடியாமல் இருக்கும் வாடிக்கையாளர்களையும் கவர முடியும். இருப்பினும், எந்தெந்த வேரியண்ட்டுகளில் இந்த எஞ்சின் வழங்கப்படும் என்பது இன்னும் உறுதியாகவில்லை.
புதிய எம்பிஎஃப்ஐ டர்போ எஞ்சினின் பவர் மற்றும் டார்க் திறன் குறித்த அதிகாரப்பூர்வ தகவல்களை ரெனோ இதுவரை வெளியிடவில்லை. தற்போதைய 1.3 லிட்டர் டிஜிடிஐ டர்போ பெட்ரோல் எஞ்சின் 163 எச்பி பவரையும், 280 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்துகிறது. ஆனால், புதிய டர்போ எஞ்சின் செயல்திறன் இதிலிருந்து சற்று குறைவாக இருக்கும் என தெரிகிறது.
ரூ.1.5 லட்சம் வரை விலை குறையும்?
புதிய எஞ்சின் கொண்ட வேரியண்ட்டுகள் தற்போதைய 1.3 லிட்டர் டர்போ பெட்ரோல் வேரியண்ட்டுகளைக் காட்டிலும் ரூ.1 லட்சம் முதல் ரூ.1.5 லட்சம் வரை குறைவான விலையில் அறிமுகமாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்த தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், நிறுவனம் இன்னும் விலையை உறுதிப்படுத்தவில்லை.
தற்போதைய டஸ்டரின் 1.3 லிட்டர் டர்போ பெட்ரோல் வேரியண்ட்டுகளின் விலை ரூ.12.99 லட்சத்தில் தொடங்குகிறது. புதிய எஞ்சின் அறிமுகமானால், இந்த விலையை விடக் குறைவான தொகையில் டஸ்ட்டரை வாங்குவதற்கான வாய்ப்பு உருவாகும். இதனால் நடுத்தர பட்ஜெட் எஸ்யூவி வாங்குபவர்களுக்கு சிறந்த தேர்வு கிடைக்கும்.
எஞ்சின் தேர்வுகள்
தற்போது ரெனோ டஸ்டரில் 1.0 லிட்டர் மற்றும் 1.3 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின்கள் வழங்கப்படுகின்றன. 1.0 லிட்டர் எஞ்சின் 100 எச்பி பவரையும், 160 என்எம் டார்க்கையும் வழங்குகிறது. இதில் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மட்டுமே வழங்கப்படுகிறது.
அடுத்து 1.3 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் 163 எச்பி பவர் மற்றும் 280 என்எம் டார்க் திறனைக் கொண்டுள்ளது. இதில் 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் 6 ஸ்பீடு டிசிடி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகள் உள்ளன. புதிய எம்பிஎஃப்ஐ டர்போ பெட்ரோல் எஞ்சினிலும் இதே கியர்பாக்ஸ் தேர்வுகள் கிடைக்குமா என்பது தெரியவில்லை.
ஹைபிரிட் மாடலுக்கும் வரவேற்பு
பெட்ரோல் எஞ்சின்களைத் தவிர்த்து, ரெனோ டஸ்ட்டரில் 1.8 லிட்டர் ஸ்ட்ராங் ஹைபிரிட் பவர்டிரெய்னும் இடம்பெற்றுள்ளது. இதில் இரண்டு மின்சார மோட்டார்கள் மற்றும் 1.4 கிலோவாட் ஹவர் பேட்டரி இணைக்கப்பட்டுள்ளது. நகரப் போக்குவரத்தில் 80 சதவீதம் வரை மின்சாரத்தில் பயணிக்க முடியும் என ரெனோ தெரிவித்துள்ளது.
இந்த ஹைபிரிட் மாடல் எரிபொருள் சிக்கனத்தை விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு முக்கியமான தேர்வாக அமையும். குறிப்பாக மாருதி கிராண்ட் விட்டாரா, டொயோட்டா ஹைரைடர் போன்ற ஹைபிரிட் எஸ்யூவிகளுக்குப் போட்டியாக டஸ்ட்டர் உருவெடுத்துள்ளது. இதனால் ரெனோ நிறுவனத்தின் எஸ்யூவி விற்பனை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
புதிய 1.3 லிட்டர் எம்பிஎஃப்ஐ டர்போ பெட்ரோல் எஞ்சின் அறிமுகமானால், ரெனோ டஸ்ட்டரின் விலையில் முக்கிய மாற்றம் ஏற்படும். குறிப்பாக, அதிக சக்தி கொண்ட எஸ்யூவியை குறைந்த விலையில் வாங்க விரும்புபவர்களுக்கு இது நல்ல வாய்ப்பாக இருக்கும்.
Source: Autocarindia


Click it and Unblock the Notifications


