அம்பாஸிடர், ஆம்னி மாதிரி பிரபலமாக இருந்த காரை மீண்டும் கொண்டு வந்த முன்னணி நிறுவனம்! இந்திய மார்க்கெட் அதிருது
ஃபிரான்ஸை சேர்ந்த ரெனால்ட் (Renault) நிறுவனம் இந்திய சந்தையில் சமீப காலமாக தத்தளித்து கொண்டிருந்தது. ஆனால் ரெனால்ட் நிறுவனத்தின் விற்பனை எண்ணிக்கை இந்தியாவில் தற்போது கிடுகிடுவென உயர தொடங்கியுள்ளது. இதற்கு ரெனால்ட் டஸ்டர் (New-gen Renault Duster) காரின் 'கம்பேக்' மிக முக்கியமான காரணமாக கருதப்படுகிறது.
ரெனால்ட் நிறுவனம் இந்திய சந்தையில் கடந்த 2025ம் ஆண்டு ஏப்ரல் மாதம் வெறும் 2,602 கார்களை மட்டுமே விற்பனை செய்திருந்தது. ஆனால் இந்த எண்ணிக்கை, நடப்பு 2026ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 5,413 ஆக உயர்ந்துள்ளது. அதாவது இம்முறை 2,811 கார்கள் அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளன.

இதன் மூலம் ரெனால்ட் நிறுவனம் இந்திய சந்தையில் 108 சதவீத வளர்ச்சியை பதிவு செய்து அசத்தியுள்ளது. புதிய தலைமுறை ரெனால்ட் டஸ்டர் காரின் வருகைதான் இதற்கு மிக முக்கியமான காரணமாக கருதப்படுகிறது. ரெனால்ட் டஸ்டர் கார், மிட்-சைஸ் எஸ்யூவி (Mid-size SUV) ரகத்தை சேர்ந்தது ஆகும்.
இந்திய சந்தையில் கடந்த 2012ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட ரெனால்ட் டஸ்டர் கார், கடந்த 2022ம் ஆண்டு வரை விற்பனையில் இருந்தது. இடைப்பட்ட 10 ஆண்டுகளில், இந்திய வாடிக்கையாளர்களின் நன்மதிப்பை ரெனால்ட் டஸ்டர் பெற்றது. இந்திய சந்தையில் ரெனால்ட் வளர்ச்சியடைந்ததற்கு, டஸ்டர் மிக முக்கியமான காரணங்களில் ஒன்றாகும்.

இடையில் சுமார் 4 ஆண்டுகள் இந்திய சந்தையில் ரெனால்ட் டஸ்டர் விற்பனையில் இல்லை. இருப்பினும் நடப்பு 2026ம் ஆண்டு மார்ச் மாதம், புதிய தலைமுறை ரெனால்ட் டஸ்டர் கார், இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இதன் காரணமாகவே இந்திய சந்தையில் ரெனால்ட் நிறுவனத்தின் விற்பனை எண்ணிக்கை வெகுவாக உயர்ந்துள்ளது.
சென்னையில் (Chennai) உள்ள ரெனால்ட் நிறுவனத்தின் தொழிற்சாலையில்தான் புதிய தலைமுறை ரெனால்ட் டஸ்டர் கார் உற்பத்தி செய்யப்படுகிறது. இங்கிருந்து டஸ்டர் காரை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் பணிகளையும் ரெனால்ட் நிறுவனம் தொடங்கியுள்ளது. இதன் காரணமாக ரெனால்ட் நிறுவனத்தின் ஏற்றுமதியும் வெகுவாக உயர்ந்துள்ளது.
ரெனால்ட் நிறுவனம் கடந்த 2025ம் ஆண்டு ஏப்ரல் மாதம் இந்தியாவில் இருந்து வெறும் 378 கார்களை மட்டுமே ஏற்றுமதி செய்திருந்தது. ஆனால் நடப்பு 2026ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 991 கார்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. அதாவது இம்முறை 613 ரெனால்ட் டஸ்டர் கார்கள் அதிகமாக ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.
ஈடி ஆட்டோ தளத்தில் வெளியாகியுள்ள ரெனால்ட் நிறுவனத்தின் சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report) மூலமாக இந்த தகவல் நமக்கு தெரிய வந்துள்ளது. ரெனால்ட் நிறுவனம் இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் 4 கார்களை விற்பனை செய்து வருகிறது. அவை புதிய தலைமுறை ரெனால்ட் டஸ்டர், ரெனால்ட் கைகர் (Renault Kiger), ரெனால்ட் ட்ரைபர் (Renault Triber) மற்றும் ரெனால்ட் க்விட் (Renault Kwid) ஆகியவை ஆகும்.
இதில், புதிய தலைமுறை ரெனால்ட் டஸ்டர், நாங்கள் ஏற்கனவே குறிப்பிட்டபடி, மிட்-சைஸ் எஸ்யூவி ரகத்தை சேர்ந்தது. அதே நேரத்தில் ரெனால்ட் கைகர் கார், சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி (Sub-4 Metre Compact SUV) ரகத்தை சேர்ந்தது ஆகும். மறுபக்கம் ரெனால்ட் ட்ரைபர் கார், எம்பிவி (MPV) ரகத்தை சேர்ந்ததாகவும், ரெனால்ட் க்விட் கார், ஹேட்ச்பேக் (Hatchback) ரகத்தை சேர்ந்ததாகவும் உள்ளது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்திய சந்தையில் எதிர்காலத்தில் ரெனால்ட் நிறுவன கார்களின் விற்பனை எண்ணிக்கை மேலும் உயரும் என நாங்கள் கருதுகிறோம். ஏனெனில் புதிய தலைமுறை ரெனால்ட் ட்ரைபர் காரின் டெலிவரி பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. அத்துடன் இதன் 7 சீட்டர் வெர்ஷனையும் ரெனால்ட் நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது.
மேலும் ரெனால்ட் பிரிட்ஜர் (Renault Bridger) என்ற சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி காரையும் ரெனால்ட் நிறுவனம் விற்பனைக்கு கொண்டு வரவுள்ளது. இது நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல், டர்போ பெட்ரோல், சிஎன்ஜி, ஹைப்ரிட் மற்றும் எலெக்ட்ரிக் என பல்வேறு பவர்ட்ரெயின் ஆப்ஷன்களுடன் விற்பனை செய்யப்படவுள்ளது. எனவே எதிர்காலத்தில் ரெனால்ட் நிறுவன கார்களின் விற்பனை எண்ணிக்கை வெகுவாக உயரும் என நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.


Click it and Unblock the Notifications