ரெனால்ட் கம்பெனி இனி அவ்வளவு தான்னு சொன்னாங்க... திடீரென குவியும் கஸ்டமர்ஸ்!
2026 மே மாதத்தில், ரெனால்ட் இந்தியா நிறுவனம் தனது கார்கள் விற்பனையில் 4,113 யூனிட்களைப் பதிவு செய்துள்ளது. இது 2025 மே மாதத்தில் 2,502 யூனிட்களாக பதிவான எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில் 64% குறிப்பிடத்தக்க ஆண்டுக்கு ஆண்டு வளர்ச்சியைப் காட்டுகிறது. இதன் மூலம், பிரெஞ்சு கார் தயாரிப்பு நிறுவனமான ரெனால்ட் 2025 செப்டம்பரில் இருந்து கார்கள் விற்பனையில் அடைய துவங்கிய வளர்ச்சியில் தொடர்ச்சியாக ஒன்பதாவது மாதத்தைக் நிறைவு செய்துள்ளது.
அதிகாரப்பூர்வ VAHAN தரவுகளின்படி, 2026 மே மாதத்தில் நேர்மறையான சில்லறை விற்பனை வளர்ச்சியை அடைந்த ஒரு சில கார் உற்பத்தி நிறுவனங்களில் ரெனால்ட்டும் அடங்கும். 2025 செப்டம்பர் முதல் 2026 மே வரையிலான காலகட்டத்தில் இந்த நிறுவனத்தின் ஒட்டுமொத்த கார்கள் விற்பனை எண்ணிக்கை 38,225 யூனிட்களாக உயர்ந்துள்ளது.

இது முந்தைய ஆண்டின் இதே ஒன்பது மாத காலத்துடன் ஒப்பிடுகையில் 46% உயர்வை குறிக்கிறது. இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் நிலவும் கடும் போட்டிக்கு மத்தியில் இந்த தொடர்ச்சியான விற்பனை அதிகரிப்பு கிடைத்துள்ளதாக ரெனால்ட் தெரிவித்துள்ளது. உள்நாட்டு வாடிக்கையாளர்களின் அடிப்படை தேவையைத் தக்கவைக்க, உள்ளூரில் தயாரிக்கப்பட்ட கார்களின் டெலிவிரிகளையும், அவை கிடைக்கும் தன்மையையும் சரிசெய்வதில் ரெனால்ட் நிறுவனம் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறது.
உலகளாவிய 'futuREady' திட்டத்தின்படி 2030ஆம் ஆண்டுக்குள் 36 புதிய கார் மாடல்களை அறிமுகப்படுத்தி, உலகளவில் 20 இலட்சம் கார்கள் விற்பனையை எட்டுவதை ரெனால்ட் இலக்காகக் கொண்டுள்ளது. இந்தப் பெரிய திட்டத்தின் ஒரு பகுதியாக, ஐரோப்பிய சந்தைகளில் 2030க்குள் 100% எலக்ட்ரிக் மற்றும் ஹைப்ரிட் கார்கள் விற்பனையை அடைவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

இதற்காக, உலகளவில் எலெக்ட்ரிக் வாகனங்களின் வரிசையை கணிசமாக விரிவுப்படுத்துவதற்கும் அதிக முக்கியத்துவம் அளிக்கிறது. மேலும், மென்பொருள் சார்ந்த வாகனங்களை (SDVs) அறிமுகப்படுத்துவதிலும் ரெனால்ட் மும்முரமாக உள்ளது. கூகுள் அடிப்படையிலான நுண்ணறிவு கொண்ட இயங்குதளத்தை அறிமுகப்படுத்தி, இதன் மூலம் ஓவர்-தி-ஏர் (FOTA) அப்டேட்கள் மற்றும் மேம்பட்ட AI (செயற்கை நுண்ணறிவு) சப்போர்ட் அம்சங்களை ரெனால்ட் வழங்க உள்ளது.
மேலும், 14 சர்வதேச தயாரிப்பு வெளியீடுகளைத் திட்டமிட்டுள்ள ரெனால்ட், 2030ஆம் ஆண்டுக்குள் அதன் உலகளாவிய விற்பனையில் பாதியை ஐரோப்பாவுக்கு வெளியே இருந்து ஈட்டுவதை இலக்காகக் கொண்டுள்ளது. உள்ளூரில், ரெனால்ட் இந்தியா தனது கார்கள் வரிசையை 2030ஆம் ஆண்டுக்குள் 7 புதிய கார் மாடல்கள் மூலம் விரிவுபடுத்தும் திட்டத்தில் உள்ளது.
இதில் ICE (உள் எரிப்பு இயந்திரம்), ஹைப்ரிட் மற்றும் EV (எலெக்ட்ரிக் வாகனம்) கார்கள் அடங்கும். 90% வரை உள்ளூர்மயமாக்கப்பட்ட உற்பத்திக்கு முக்கியத்துவம் அளித்து, சென்னையின் பிரம்மாண்ட வடிவமைப்பு மையத்தை தனது இந்திய வியாபார யுக்திக்கு ஆதாரமாக ரெனால்ட் கொண்டுள்ளது. இதன் மூலம், இந்தியா ஒரு முதன்மை ஏற்றுமதி மையமாக நிலைநிறுத்தப்பட உள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: உள்நாட்டு விற்பனைக்காகவும், வெளிநாட்டு ஏற்றுமதிகளுக்காகவும் RGEP மற்றும் RGMP என்ற இரண்டு புதிய வாகன தளங்களை ரெனால்ட் பயன்படுத்துகிறது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ரெனால்ட் டஸ்டர் தற்போது விற்பனையில் உள்ளது. இதைத் தொடர்ந்து, புதிய பிரிட்ஜர் என்கிற சப்-காம்பாக்ட் எஸ்யூவி கார் மற்றும் ஒரு பெரிய, 3-வரிசை எஸ்யூவி கார் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
ரெனால்ட் 'சூப்பர் ஹைப்ரிட்' தொழில்நுட்பத்தை உருவாக்கி வருகிறது, இது ரெனால்ட்டின் எலெக்ட்ரிக் கார்களில் 150-200 கி.மீ ரேஞ்சை வழங்கும். அதோடு, தனது முதல் எலெக்ட்ரிக் காரையும் (க்விட் EV ஆக இருக்கலாம்) அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. தற்போதைய டிரைபர் MPV காரில் தொழிற்சாலையில் பொருத்தப்பட்ட இரட்டை சிலிண்டர் CNG கிட்கள் வழங்கப்படுகின்றன.
தலைப்பில் தவறுதலாக 'திடிரென' என குறிப்பிடப்பட்டது, 'திடீரென' சரியாக மாற்றப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications