6 ஏர்பேக்குகள் இருந்தும் கிராஷ் டெஸ்டில் சிக்கல்! ரெனோ கைகர் காரின் கதவு திறந்ததால் அதிர்ச்சி!!
இந்தியாவில் தயாரிக்கப்பட்டு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் ரெனோ கைகர் (Renault Kiger) கார், தென்னாப்பிரிக்காவில் நடத்தப்பட்ட குளோபல் என்சிஏபி (Global NCAP) மோதல் சோதனையில் 4 நட்சத்திர பாதுகாப்பு மதிப்பீட்டைப் பெற்றுள்ளது. இருப்பினும், சோதனையின்போது காரின் கதவு திறந்தது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக, 6 ஏர்பேக்குகள் கொண்ட புதிய கைகர் காருக்கே இந்த நிலை ஏற்பட்டிருப்பது கவனிக்கத்தக்கது. பெரியவர்களுக்கான பாதுகாப்பில் 4 நட்சத்திரங்களும், குழந்தைகளுக்கான பாதுகாப்பில் 3 நட்சத்திரங்களும் கிடைத்துள்ளன. ஆனால், மோதலின்போது காரின் கட்டமைப்பு மற்றும் கதவின் செயல்பாடு சில பாதுகாப்பு கேள்விகளை எழுப்பியுள்ளன.

குளோபல் என்சிஏபி வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, முன்பக்க மோதல் சோதனையின்போது கைகர் காரின் அடிப்பகுதியில் உள்ள கால் வைக்கும் பகுதியும் (Footwell), ஒட்டுமொத்த காரின் உடற்கூடும் (Bodyshell) நிலையற்றதாக மதிப்பிடப்பட்டுள்ளன. அதிகப்படியான மோதல் அழுத்தத்தைத் தாங்கும் திறன் போதுமானதாக இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பக்கவாட்டு மோதல் சோதனையின்போது காரின் ஒரு கதவு தானாகவே திறந்துள்ளது. இதற்காக பாதுகாப்பு மதிப்பெண்ணில் ஒரு புள்ளி குறைக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில், பயணிகளின் தலை, வயிறு மற்றும் இடுப்புப் பகுதிகளுக்கு நல்ல பாதுகாப்பு கிடைத்துள்ளது. மார்புப் பகுதிக்கான பாதுகாப்பு போதுமான அளவில் இருந்ததாகக் கூறப்பட்டுள்ளது.
குழந்தைகளுக்கான பாதுகாப்பு சோதனையில் முடிவுகள் எதிர்பார்ப்பை முழுமையாக பூர்த்தி செய்யவில்லை. மூன்று வயது குழந்தையை ஒத்திருக்கும் பொம்மையின் தலை முன்பக்க மோதலின்போது காரின் உட்புறத்தில் மோதியுள்ளது. பக்கவாட்டு மோதலில் தலையின் பாதுகாப்பு குறைபாடு காரணமாக அந்தச் சோதனைக்கான மதிப்பெண்கள் முழுமையாகக் குறைக்கப்பட்டுள்ளன.
மறுபுறம், இந்த சோதனையின்போது பயன்படுத்தப்பட்ட 18 மாத குழந்தையை ஒத்திருக்கும் பொம்மைக்கு முன்பக்க மற்றும் பக்கவாட்டு மோதல் சோதனைகள் இரண்டிலும் முழுமையான பாதுகாப்பு கிடைத்துள்ளது. மேலும், பாதசாரிகள் பாதுகாப்புக்கான யுஎன்127 விதிமுறைகளையும் கைகர் பூர்த்தி செய்துள்ளது. எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கன்ட்ரோல் மற்றும் சீட்பெல்ட் எச்சரிக்கை வசதிகளும் விதிமுறைகளுக்கு இணங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
இதற்கு முன்பு இரண்டு ஏர்பேக்குகள் கொண்ட பழைய கைகர் மாடலும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. அப்போது பெரியவர்களுக்கான பாதுகாப்பில் 2 நட்சத்திரங்களும், குழந்தைகளுக்கான பாதுகாப்பில் ஒரு நட்சத்திரமும் மட்டுமே கிடைத்தன. புதிய மாடலில் பாதுகாப்பு அம்சங்கள் அதிகரிக்கப்பட்டதால் மதிப்பீடும் கணிசமாக முன்னேறியுள்ளது.
தென்னாப்பிரிக்காவில் சோதனை செய்யப்பட்ட புதிய கைகர் காரில் 6 ஏர்பேக்குகள், இஎஸ்சி (ESC), ஐஎஸ்ஓஃபிக்ஸ் (ISOFIX) குழந்தைகள் இருக்கை இணைப்புகள் ஆகியவை வழங்கப்பட்டுள்ளன. பாதசாரிகள் பாதுகாப்பு அம்சங்களும் மேம்படுத்தப்பட்டுள்ளன. இருப்பினும், இந்த வசதிகள் இருந்தும் மோதல் சோதனையில் சில குறைபாடுகள் வெளிப்பட்டுள்ளன.
இதேபோன்ற பாதுகாப்பு சோதனையில் நிஸான் மேக்னைட் கார் 5 நட்சத்திரங்களைப் பெற்றிருந்தது. இரண்டு கார்களிலும் மூன்று வயது குழந்தையின் தலை மோதலின்போது கதவு சட்டகத்தில் பட்டுள்ளது. இருப்பினும், கைகர் காரின் உடற்கூடு நிலையற்றதாக இருந்ததும், கதவு திறந்ததும் அதன் மதிப்பெண்ணைப் பாதித்துள்ளன.
ரெனோ கைகர் காரின் பாதுகாப்பு மதிப்பீடு இரண்டு நட்சத்திரங்களிலிருந்து நான்கு நட்சத்திரங்களாக உயர்ந்திருப்பது வரவேற்கத்தக்க முன்னேற்றமாக பார்க்கப்படுகிறது. அதேநேரத்தில், கதவு திறக்கும் பிரச்சினையும், காரின் உடற்கூடு குறித்த கேள்விகளும் கவனிக்கப்பட வேண்டிய விஷயங்களாக மாறி இருக்கின்றன.


Click it and Unblock the Notifications


