மாருதி, டாடாவுக்கு போட்டியாக 4.50 லட்சம் ரூபாய்க்கு புதிய காரை வெளியிடும் நிறுவனம்!
இந்தியாவில் இருபது ஆண்டுகளுக்கும் மேலாக கார்களை விற்பனை செய்து வரும் ஐரோப்பிய நிறுவனம் ரெனோ. டஸ்டர் வடிவில் பத்தாண்டுகளுக்கு முன்பு இந்த நிறுவனத்துக்கு இந்திய சந்தையில் ஒரு பிரேக்த்ரூ கிடைத்தது. அதன் பின்பு பெரியளவில் ரெனோவின் கார்கள் எதுவும் சோபிக்கவில்லை. இடையில் ஒரு குறைவான விலை ஹேட்ச்பேக் காரும் ரெனோவின் பெயர் சொல்லும் ஒன்றாக மாறியது.
குறிப்பாக மாருதியின் பட்ஜெட் கார்களுடனே ஸ்பேரிங் விட்டுக் கொண்டிருந்தது அந்தக் கார். அது வேறெதுவும் இல்லை, ரெனோவின் க்விட் தான். சிறிய ரக தொடக்கநிலை கார்களில் மாருதியை அடித்துக் கொள்ள முடியாது. ஆனால் வெளியான புதிதில் மாருதியின் ஆல்டோ, எஸ்-பிரஸ்ஸோ உள்ளிட்ட கார்களுக்கே டஃப் கொடுத்து விற்பனையாகி வந்தது க்விட். ஆனால் அது நீண்ட காலம் நீடிக்கவில்லை.

இந்த நிலையில் க்விட்டை மீண்டும் லைம்லைட்டிற்குக் கொண்டு வந்து விற்பனையை அதிகரிக்க அதன் ஃபேஸ்லிப்ட் வெர்ஷனை வரும் ஜூலை 3ம் தேதியன்று வெளியிடவிருக்கிறது ரெனோ. சும்மா ஏனோ தானோவென்று சில டிசைன் மாற்றங்கள், சில வசதிகள் மேம்பாடுகளை மட்டும் கொடுக்காமல், க்விட்டை முழுவதுமாக ஒரு புதிய காராக மாற்றி ரெனோ களமிறக்கவிருக்கிறது.
நமக்குக் கிடைத்திருக்கும் தகவல்களின்படியும், ரெனோ க்விட் ஃபேஸ்லிப்டின் ஸ்பைஷாட் புகைப்படங்களின் மூலம் இந்தப் புதிய கார் எப்படி இருக்கும் என்பதை நம்மால் யூகிக்க முடிகிறது. ஐரோப்பாவில் ரெனோவின் துணை நிறுவனமாக டாசியா என்ற நிறுவனம் செயல்பட்டு வருகிறது. க்விட்டின் எலெக்ட்ரிக் வெர்ஷனாக, ஸ்பிரிங் (Spring) என்ற பெயரில் அந்நிறுவனம் விற்பனை செய்து வருகிறது.

எலெக்ட்ரிக் கார் என்றாலும், பார்ப்பதற்கு கொஞ்சம் எரிபொருள் கார் போலான டிசைனையே டாசியா ஸ்பிரிங் கொண்டிருக்கும். அதே டிசைனை புதிய க்விட்டிற்கும் ரெனோ கொடுக்கவுள்ளது. முழுவதும் மறைக்கப்பட்ட வகையிலேயே, க்விட் ஃபேஸ்லிப்ட் சோதனை செய்யப்பட்டாலும், படுக்கை வசமான Y போன் LED DRL-கள், பின்பக்க விளக்குகள் மற்றும் பம்பர்கள் ஆகியவை ஸ்பிரிங் காரின் டிசைனை புதிய க்விட் ஒத்திருப்பதைக் காட்டிக் கொடுத்துவிட்டன.
உட்புறமும் க்விட்டை ரெனோ புதிதாக மறுவடிவமைப்பு செய்திருப்பதாகவே தெரிகிறது. குறிப்பாக புதிய 10 இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், புதிய டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் ஆகிய அம்சங்கள் கொடுக்கப்பட்டிருப்பதை ஸ்பைஷாட் புகைப்படங்கள் மூலம் நாம் தெரிந்து கொள்ள முடிந்தது. மேலும், பாதுகாப்பு என்று வரும் போது 6 ஏர்பேக்குகளை ஸ்டாண்டர்டாக புதிய க்விட்டில் ரெனோ கொடுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
மெக்கானிக்கலாக புதிய க்விட்டும் தற்போதைய இன்ஜின் மற்றும் கியர்பாக்ஸ் செட்டப்புகளையே பயன்படுத்தும் என்றே தெரிகிறது. தற்போதைய காரில் 1.0 லிட்டர், 3 சிலிண்டர், NA பெட்ரோல் இன்ஜின் கொடுக்கப்பட்டுள்ளது. 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் AMT கியர்பாக்ஸ் தேர்வுகளைக் கொண்டிருக்கும் இந்த இன்ஜின், 68 hp பவரை உற்பத்தி செய்யும் திறனைக் கொண்டுள்ளது.
மேற்கூறிய மாற்றங்களுடன் தற்போது விற்பனை செய்யப்படுவதை விட சற்று கூடுதல் விலையில் புதிய க்விட் வெளியிடப்படலாம் எனத் தெரிகிறது. தற்போது 4.30 லட்சம் ரூபாய் முதல் 5.88 லட்சம் ரூபாய் வரையிலான விலையில் இந்தியாவின் மிகவும் விலை குறைவான கார்களில் ஒன்றாக ரெனோ க்விட் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. புதிய காரின் தொடக்க விலையும் 5 லட்சம் ரூபாய்க்கு உள்ளாகவே இருக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: பட்ஜெட் விலையில் கார் வாங்க நினைப்பவர்கள் மற்றும் இருசக்கர வாகனங்களில் இருந்து நான்கு சக்கர வாகனத்திற்கு மாற விரும்புபவர்களுக்கு ரெனோ க்விட் ஒரு சிறப்பான தேர்வாக இருக்கும். புதிய அப்டேட்கள் இன்னும் வாங்கத் தூண்டும் காராக க்விட்டை ரெனோ மாற்றவிருக்கிறது. ரெனோவின் சமீபத்திய செயல்பாடுகளைப் பார்க்கும் போது, புதிய க்விட் வாடிக்கையாளர்களை திருப்திப்படுத்தும் வகையில் இருக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications