இந்தியாவில் வெளியாகும் புதிய 7 சீட்டர் எஸ்யூவி நல்ல இடவசதியுடன் ப்ரீமியமான வசதிகளுடன்
கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் இந்தியாவில் டஸ்டர் மிட்-சைஸ் எஸ்யூவியை வெளியிட்டது ரெனோ. அடுத்ததாக ரெனோ இந்தியாவில் வெளியிடவிருக்கும் ஒரு எஸ்யூவி பிக்ஸ்டர் (Bigster). டஸ்டர் 5 சீட்களைக் கொண்ட எஸ்யூவியாக விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், 7 சீட்கள் கொண்ட எஸ்யூவியாக, நல்ல இடவசதி கொண்ட காராக பிக்ஸ்டர் இருக்கும்.
கடந்த சில ஆண்டுகளாகவே பிக்ஸ்டர் எஸ்யூவியை இந்தியாவில் வெளியிட ரெனோ திட்டமிட்டு வருகிறது. முதலில் டஸ்டர் அதன் பின்பு பிக்ஸ்டர் என்பது தான் திட்டம். அதன்படி டஸ்டர் வெளியாகிவிட்டது. அடுத்து பிக்ஸ்டர் தான். ஐரோப்பாவில் ரெனோவின் துணை நிறுவனம் பிக்ஸ்டர் என்ற எஸ்யூவியை விற்பனை செய்து வருகிறது. அது டஸ்டரை விட சற்று பெரிய கார் தான் என்றாலும், அதுவும் ஒரு 5 சீட்டர் கார் தான்.

அதிக லக்கேஜ் ஸ்பேஸை வேண்டும் வாடிக்கையாளர்களுக்காக அதிகளவு பூட் ஸ்பேஸ் கொண்ட காராக டாசியா பிக்ஸ்டர் ஐரோப்பாவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அந்தக் காரின் அடிப்படையிலேயே இந்தியா உள்ளிட்ட நாடுகளில் விற்பனை செய்யும் நோக்கத்துடன் புதிய 7 சீட்டர் எஸ்யூவியாக ரெனோ பிக்ஸ்டர் உருவாக்கப்பட்டு வருகிறது.
இந்தப் புதிய 7 சீட்டர் எஸ்யூவை ஏற்கனவே ரெனோ இந்தியாவில் சோதனை செய்யத் தொடங்கிவிட்டது. கடந்த மாதங்களில் பலமுறை இந்தக் கார் இந்திய சாலைகளில் சோதனை செய்யப்பட்ட போது ஸ்பைஷாட்களில் சிக்கியிருக்கிறது. இதனையடுத்து விரைவிலேயே, இந்தாண்டு இறுதிக்குள் அல்லது 2027ன் தொடக்கத்தில் இந்த பெரிய எஸ்யூவியை இந்தியாவில் ரெனோ வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இணையத்தில் பரவி வரும் ஸ்பைஷாட் புகைப்படங்களைக் கொண்டு பார்க்கும் போது டாசியா பிக்ஸ்டரை அப்படியே இந்தியாவில் ரெனோ சோதனை செய்து வருவது தெரிகிறது. மாற்றமில்லாமல் அதே டிசைனுடனேயே தான் புதிய காரை ரெனோ வெளியிடுமா அல்லது டஸ்டரைப் போல இந்திய மாடலில் சில ப்ரீமியமான டிசைன் மாற்றங்களை மாற்றங்களை மேற்கொள்ளுமா என்பது வெளியீடு நெருங்கும்போது தான் உறுதியாகத் தெரியவரும்.
பவர்ட்ரெயின் தேர்வுகளைப் பொறுத்தவரை டஸ்டரில் தற்போது பயன்படுத்தப்பட்டு வரும் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 1.3 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் தேர்வுகளே புதிய பிக்ஸ்டரிலும் கொடுக்கப்பட்டிருக்கும். இத்துடன் 1.8 லிட்டர் பெட்ரோல் ஹைபிரிட் பவர்ட்ரெயினையும் வெளியீட்டின் போதே பிக்ஸ்டர் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு முன்பாகவே இந்த ஸ்ட்ராங் ஹைபிரிட் பவர்ட்ரெயின் டஸ்டர் எஸ்யூவியில் கொடுக்கப்பட வாய்ப்புகள் உள்ளது.
பெர்ஃபாமன்ஸ் (160 hp பவர்/ 172 Nm டார்க்) மற்றும் மைலேஜ் இரண்டும் சேர்ந்த கலவையாக இந்த ஸ்ட்ராங் ஹைபிரிட் பவர்ட்ரெயின் இருக்கும். ப்ரீமியமான எஸ்யூவிக்களில் கொடுக்கப்படும் மேம்பட்ட அம்சங்களை இந்த பிக்ஸ்டர் எஸ்யூவியிலும் நாம் எதிர்பார்க்கலாம். குறிப்பாக பெரிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மற்றும் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், பனோரமிக் சன்ரூஃப், டூயல் ஸோன் கிளைமேட் கண்ட்ரோல், லெவல் 2 ADAS உள்ளிட்ட மேம்பட்ட அம்சங்களை பிக்ஸ்டரிலும் எதிர்பார்க்கலாம்.
டஸ்டரை விட 300 மிமீ வரை நீளமாக 4.6 மீ அளவில் புதிய பிக்ஸ்டர் இருக்கும். இந்த அளவுடன், இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு வரும் 7 சீட்டர் எஸ்யூவிக்களான மஹிந்திரா XUV 7XO, டாடா சஃபாரி, ஹூண்டாய் அல்கஸார் மற்றும் எம்ஜி ஹெக்டர் உள்ளிட்ட கார்களுக்குப் போட்டியாக புதிய ரெனோ பிக்ஸ்டர் விற்பனை செய்யப்படும். 13 லட்சம் ரூபாய்க்கு மேலான தொடக்க விலையை இந்தக் கார் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ரெனோவின் இந்திய லைன்-அப்பில் மற்றொரு ப்ரீமியமான காராக இந்த பிக்ஸ்டர் எஸ்யூவி இருக்கும். இந்தக் காரின் வெளியீட்டிற்குப் பிறகு, இந்தியாவில் முக்கியமான எஸ்யூவி பிரிவுகள் அனைத்திலும் ரெனோவின் ஒரு கார் விற்பனையில் இருக்கும். டஸ்டரை அடிப்படையாகக் கொண்ட கார் என்பதால், வாடிக்கையாளர்களைக் கவர்வதற்கும் வாய்ப்புகள் இருக்கிறது.


Click it and Unblock the Notifications