சென்னைக்கு அருகே உருவாக்கப்படும் ரெனால்ட் கார் இதுதானா! எல்லாரும் தூங்கிய பின் இரவில் நடத்தப்பட்ட சோதனை ஓட்டம்
நீண்ட காத்திருப்புக்கு பிறகு, கார் பிரியர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட புதிய ரெனால்ட் டஸ்டர் (Renault Duster) ஜனவரி 26 அன்று சென்னையில் இருந்து இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. 2023ஆம் ஆண்டில் போர்ச்சுகல் நாட்டில் டஸ்டரின் டச்சியா பதிப்பு உலகளவில் அறிமுகமானதில் இருந்தே இந்தியாவில் இதன் அறிமுகம் பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியது.
கடந்த குடியரசு தினத்தின்போது வெளியீடு செய்யப்பட்ட இந்தியாவிற்கான புதிய டஸ்டர், மிக விரைவில் விலைகள் அறிவிக்கப்பட்டு அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்த நிலையில், அறிமுகத்திற்கு முன்பாக புதிய டஸ்டர் கார் ஒன்று சென்னைக்கு அருகே பொது சாலையில் எந்தவித மறைப்பும் இல்லாமல் ஓட்டிப் பார்க்கப்பட்டு சோதனை செய்யப்பட்டுள்ளது.

கார் ஏற்கனவே வெளியீடு செய்யப்பட்டு விட்டதால், எந்த மறைப்பும் இன்றி புதிய டஸ்டர் இந்த சோதனை ஓட்டத்தில் உட்படுத்தப்பட்டுள்ளது. சென்னைக்கு அருகே ஓரடகத்தில் உள்ள ரெனால்ட்-நிசான் நிறுவனங்களின் கூட்டணி தொழிற்சாலையில் புதிய டஸ்டர் உருவாக்கப்படும் நிலையில், தொழிற்சாலைக்கு அருகே இரவு நேரத்தில் இந்த சோதனை ஓட்டம் நடத்தப்பட்டுள்ளது.
ரெனால்ட் நிறுவனத்தின் கூற்றுப்படி, இந்தியாவிற்கான டஸ்டர் உலகின் சிறந்த மாடலாகும். இதன் உலகளாவிய எந்தப் பதிப்பிலும் இல்லாத பல அம்சங்கள் மற்றும் உபகரணங்களுடன் இது முழுமையாக நிரம்பியுள்ளது. மேலும், இது மிகவும் அதிநவீன தோற்றத்தையும் உணர்வையும் கொண்டுள்ளது. தற்போதைய ஸ்பை படங்களில், டஸ்டர் காக்கி பச்சை நிறத்தில், எந்த மறைப்பும் இல்லாமல் சாலையில் செல்வதைக் காண முடிகிறது.

இதன் பின்புற மற்றும் பக்கவாட்டு வளைவுகள், ஒன்றோடு ஒன்று இணைக்கப்பட்ட LED டெயில்லைட்டுகள், ஸ்டைலான பம்பர்கள் மற்றும் பெரிய 18-இன்ச் அலாய் சக்கரங்கள் (225-பிரிவு டயர்களுடன்) வழங்கும் கம்பீரமான தோற்றத்தை ஸ்பை படங்கள் தெளிவாகக் காட்டுகின்றன. இதன் உயரமான கூரை தண்டவாளங்கள் (ரூஃப் ரெயில்கள்) பயன்படுத்தக்கூடியவை; இவை சுமைகளையும் தாங்கும் திறன் கொண்டவை.
புதிய டஸ்டரின் பெட்டி போன்ற உருவம் ஆனது இந்தியாவில் எஸ்யூவி கார்கள் வாங்குபவர்களை ஈர்க்கும் பழைய பாணியில் மஸ்குலரான எஸ்யூவி அழகை பிரதிபலிக்கிறது. முன்பு இருந்த ரெனால்ட் கேப்ச்சர் (Capture) கார் மாடலால் ஈர்க்க முடியாததை இது அடையக்கூடும். பின்பக்க குவாட்டர் கிளாஸ் உட்பட பெரிய கண்ணாடிப் பகுதி, சிறந்த வெளிச்சத்தையும் காற்றையும் வழங்கும். பல விதமான ஆக்சஸரீகளையும் டஸ்டரின் தோற்றத்தை மேம்படுத்த ரெனால்ட் வழங்குகிறது.
உட்புறத்தில், புதிய டஸ்டரில் 10-இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் திரை உள்ளது. இது கூகுள் ஓஎஸ் இயங்குதளத்தில் உள்ளமைக்கப்பட்ட பயன்பாடுகளுடன் வருகிறது; இது ஆண்ட்ராய்டு ஆட்டோ தேவையை நீக்குகிறது. மேலும், 10.25-இன்ச் TFT இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் திரை, வயர்லெஸ் சார்ஜிங் பேட், வெண்டிலேட்டட் வசதி கொண்ட முன் இருக்கைகள், பனோரமிக் சன்ரூஃப், எலெக்ட்ரிக் டெயில்கேட் மற்றும் ADAS (Advanced Driver-Assistance Systems) போன்ற மேம்பட்ட அம்சங்களும் புதிய டஸ்டரில் வழங்கப்பட்டுள்ளன.
புதிய ரெனால்ட் டஸ்டரில் மூன்று கவர்ச்சிகரமான என்ஜின் ஆப்ஷன்கள் வழங்கப்பட்டுள்ளன. 100 பிஎஸ் திறன் கொண்ட 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜினுடன் இதன் வேரியண்ட்களின் வரிசை தொடங்குகிறது. உயர் வேரியண்ட்கள், 6-ஸ்பீடு டிசிடி கியர்பாக்ஸ் உடன் இணைக்கப்பட்ட 1.3 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் உடனும் கிடைக்கும்.
இந்த டர்போ என்ஜின் அதிகப்பட்சமாக 163 பிஎஸ் மற்றும் 280 என்.எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது. இது செக்மென்டிலேயே சிறந்த செயல்திறனை வழங்குகிறது. மேலும், 1.4 kWh பேட்டரி பேக்குடன் அதிகப்பட்சமாக 160 பிஎஸ் ஆற்றலை வெளியிடக்கூடிய 1.6 லிட்டர் பெட்ரோல் ஹைப்ரிட் என்ஜின் மூன்றாவது ஆப்ஷனாகும்.
புதிய ரெனால்ட் டஸ்டர் ஆனது 4.2மீ முதல் 4.4மீ வரையில் நீளம் கொண்ட எஸ்யூவி கார்கள் பிரிவில் சியரா, க்ரெட்டா, செல்டோஸ், கிராண்ட் விட்டாரா, ஹைரைடர், விக்டோரிஸ், கர்வ், எலிவேட், அஸ்டர், டைகுன், குஷாக், பசால்ட் மற்றும் ஏர்கிராஸ் உள்ளிட்ட 14 கார் மாடல்களுக்கு போட்டியாக களமிறங்குகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ரெனால்ட் டஸ்டரின் உறுதியான அறிமுக தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. இந்த காரின் ஹைப்ரிட் அல்லாத வேரியண்ட்களின் டெலிவரிகள் 2026 மார்ச்சில் தொடங்கும் என்றும், ஹைப்ரிட் வேரியண்ட்கள் தீபாவளி சமயத்தில் டெலிவிரிக்கு கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. பொதுச் சாலைகளில் இந்த காரின் மஸ்குலரான மற்றும் பெட்டி போன்ற வடிவம் சாலையில் சிறப்பான ரைடிங் பொசிஷனை வெளிப்படுத்துகிறது.


Click it and Unblock the Notifications








