சிஎன்ஜி கார் வாங்குனா இவ்ளோ மைலேஜ் கிடைக்குமா.. அடிச்சு பிடிச்சு வாங்கிப் போடும் மக்கள்!
தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக டீசலை பின்தள்ளி அதிக வாடிக்கையாளர்கள் விரும்பும் எரிபொருளாக இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது CNG. அட ஆமாங்க, இனி பெட்ரோல்/ டீசல் கார்கள் என்று சொல்லாமல், பெட்ரோல்/ CNG கார்கள் என்றே சொல்லலாம். 2025ம் நிதியாண்டில் தான் முதல் முறையாக இரண்டாவது அதிக பயன்பாடு கொண்ட எரிபொருளானது CNG. கடந்த மார்ச் 31ல் நிறைவடைந்த 2026ம் நிதியாண்டில் டீசல் மற்றும் CNG-க்கு இடையிலான இடைவெளி மேலும் அதிகரித்துள்ளது.
கடந்த நிதியாண்டு விற்பனை செய்யப்பட்ட கார்களில் 47.48% பெட்ரோல் கார்கள் தான். 2025ம் நிதியாண்டுடன் ஒப்பிடும் போது கடந்த நிதியாண்டில் இது 3% குறைவு. டீசல் கார்களின் விற்பனையில் பெரிய அளவில் மாற்றம் இல்லை. 2025ம் நிதியாண்டில் 18.23% ஆக இருந்தது, 2026ம் நிதியாண்டில் 18.08% ஆக கொஞ்சம் மட்டுமே குறைந்திருக்கிறது.

CNG எரிபொருள் கார்களின் விற்பனை தான் குறிப்பிட்டத்தக்க அளவு உயர்ந்திருக்கிறது. 2025ம் நிதியாண்டில் இதன் அளவு 19.60% ஆக இருந்த நிலையில், 2026ம் நிதியாண்டில் 21.98% ஆக உயர்ந்திருக்கிறது. அடுத்ததாக ஹைபிரிட் கார்களின் விற்பனைப் பங்கு 8.73%-தத்தில் இருந்து 8.21% ஆக மாறியிருக்கிறது. எலெக்ட்ரிக் கார்கள் முன்பை விட கிட்டத்தட்ட இருமடங்கு விற்பனைப் பங்குகளைப் பெற்றுள்ளன.
2025ம் நிதியாண்டில் 2.61% ஆக இருந்த எலெக்ட்ரிக் கார்கள் விற்பனை, 2026ம் நிதியாண்டில் 4.25% ஆக உயர்ந்திருக்கிறது. இந்தியாவில் எலெக்ட்ரிக் கார்களின் விற்பனையை டாடா மோட்டார், எம்ஜி மோட்டார், மஹிந்திரா ஆகிய நிறுவனங்களும், CNG கார்கள் விற்பனையை மாருதி சுஸூகி, டாடா மோட்டார்ஸ் ஆகிய நிறுவனங்களும் முன்னெடுத்து வருகின்றன. தங்கள் லைன்அப்பில் டீசல் எரிபொருள் இல்லாத காரணத்தினால் மிகவும் வீரியமாகவே CNG கார்கள் விற்பனையை முன்னெடுத்து வருகிறது மாருதி.

கடந்த ஒரு நிதியாண்டில் மட்டும் சுமார் 47 லட்சம் கார்கள் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டுள்ளன. அதில் 10.34 லட்சம் கார்கள் CNG எரிபொருளில் இயங்கக்கூடியவையாக இருக்கின்றன. சில ஆண்டுகளுக்கு முன்பு வரை CNG கார்களின் விற்பனை 10 முதல் 13% ஆகவே இருந்தது. தற்போது அது 22%-தத்தை எட்டியிருக்கிறது.
ஏன் CNG கார்களை வாங்க வேண்டும்?
CNG எனக் குறிப்பிடும் போது, முழுமையாக CNG எரிபொருளில் மட்டுமே இயங்கும் கார்களை நாம் குறிப்பிடவில்லை. CNG மற்றும் பெட்ரோல் என இரண்டு வகையான எரிபொருள்களிலும் அந்தக் காரை நாம் இயக்கிக் கொள்ள முடியும். CNG எரிபொருளானது பெட்ரோலில் கார் இயக்குவதை விட கிட்டத்தட்ட பாதி மட்டுமே பயன்பாட்டுச் செலவைக் கொண்டது. CNG பெட்ரோலை விட அதிக மைலேஜ் தருவதுடன், பெட்ரோலை விட குறைவான விலையிலேயே CNG எரிபொருள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
பெட்ரோல் கார்களை விட CNG கார்கள் ரூ.50,000 முதல் ரூ.1 லட்சம் வரை கூடுதல் விலையைக் கொண்டிருந்தாலும், நீண்ட காலப் பயண்பாட்டை வைத்துப் பார்க்கும் போது CNG கார்கள் வாடிக்கையாளர்களுக்கு லாபமே. வேகமாக உயர்ந்து வரும் பெட்ரோல் விலையும் CNG கார்களை நோக்கி வாடிக்கையாளர்களைத் தள்ளுகிறது.
சில ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததைப் போல இல்லாமல் தற்போது CNG கார்கள் மேம்பட்டிருக்கின்றன. அண்டர்பாடியில் CNG டேங்க், ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வு மற்றும் டர்போ பெட்ரோல் இன்ஜினுடனும் CNG பயன்பாடு எனப் பல வகையிலும் CNG கார்கள் மேம்பட்டிருக்கின்றன. இதுவும் வாடிக்கையாளர்கள் அதிகளவிலான CNG கார்களைத் தேர்ந்தெடுக்க கூடுதல் உந்துதலை வழங்குகிறது.
மாருதி நிறுவனம் இந்தியாவில் தாங்கள் விற்பனை செய்து வரும் பெரும்பான்மையான கார் மாடல்களுக்கு CNG கிட்ட ஃபேக்டரிலேயே வழங்குகிறது. டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தங்களது பட்ஜெட் கார் மாடல்களான நெக்ஸான், பன்ச், டியாகோ மற்றும் ஆல்ட்ராஸ் ஆகியவற்றில் CNG ஆப்ஷனை வழங்கி வருகிறது. ஹூண்டாய் நிறுவனமும் கிராண்டு i10 நியா, ஆரா மற்றும் எக்ஸ்டர் ஆகிய தொடக்கநிலை கார் மாடல்களில் CNG பவர்ட்ரெயின் ஆப்ஷனை வழங்குகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: பெர்ஃபாமன்ஸ் என்று வரும் போது CNG-யால் பெட்ரோல் அல்லது டீசல் கார்களுக்கு ஈடுகொடுக்க முடியாது தான். ஆனால், பயன்பாட்டுச் செலவு என்று வரும் போது CNG தான் வின்னர். மேலும், பெரும்பாலும் பட்ஜெட் கார்கள் மற்றும் தொடக்கநிலை கார் மாடல்களிலேயே CNG தேர்வு அதிகளவில் கொடுக்கப்பட்டும் வருகிறது. ரூ.5 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரையிலான விலையல் CNG கார்களை நாம் வாங்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








