சீப்பான விலையில் ஒரேயொரு காரை தான் இறக்கிச்சு, விற்பனை கிட்டத்தட்ட டபுள் மடங்கு எகிறிடுச்சு!!
ஸ்கோடா இந்தியா (Skoda India) நிறுவனம் 2026 ஜனவரி மாதத்தில் 5,739 கார்களை விற்பனை செய்துள்ளது. இது 2025 ஜனவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் சுமார் 39% வளர்ச்சி ஆகும். ஏனெனில், அந்த மாதத்தில் 4,133 கார்களை மட்டுமே இந்தியாவில் ஸ்கோடா விற்பனை செய்திருந்தது. மேம்படுத்தப்பட்ட அம்சங்கள் மற்றும் புதிய தொழில்நுட்பங்களுடன் கூடிய குஷாக் ஃபேஸ்லிஃப்ட் (Kushaq Facelift) அறிமுகப்படுத்தப்பட்டதாலேயே இந்த வளர்ச்சி சாத்தியமானது.
செக் குடியரசு நாட்டை சேர்ந்த கார் உற்பத்தியாளரான ஸ்கோடா, இந்தியாவில் கடந்த மாதம் வலுவான விற்பனையைப் பதிவு செய்துள்ளது. இதன் பிரபலமான மிட்-சைஸ் செடான் (Sedan) ரக காரான ஸ்லாவியா (Slavia), இந்தியாவின் நம்பர் 1 எக்ஸிகியூட்டிவ் செடான் காராக உயர்ந்து நிற்கிறது. ஸ்கோடாவின் லேட்டஸ்ட் எஸ்யூவி (SUV) ரக காரான கைலாக் (Kylaq) ஒட்டுமொத்தமாக 50,000 யூனிட்கள் விற்பனை மைல்கல்லைக் கடந்த ஜனவரி மாதத்தில் கடந்துள்ளது.

இவை 2026இல் ஸ்கோடா பிராண்டிற்கு ஒரு நல்ல தொடக்கத்தை அளித்துள்ளன. இதன் மூலம் அடைந்த மகிழ்ச்சியில் ஸ்கோடா நிறுவனம் காரின் கணிசமான செலவுகளை குறைத்து, மன அமைதி மற்றும் மேம்பட்ட உரிமையாளர் அனுபவத்தை உறுதி செய்யும் 'சூப்பர் கேர்' (Supre Care) திட்டத்தை அறிவித்துள்ளது.
மேலும், 'யூ நெவர் டிரைவ் அலோன்' (You Never Drive Alone) என்ற புதிய பிரச்சாரத்தையும் அறிமுகப்படுத்தியுள்ளது. இதுதொடர்பான விளம்பர காணொளியை கூட பார்த்திருப்பீர்கள் என நினைக்கிறேன். ஸ்கோடா நிறுவனத்தின் மலிவு விலை காரான கைலாக் எஸ்யூவிக்காகவே இந்த புதிய பிரச்சாரத்தை ஸ்கோடா துவங்கியுள்ளது.

இந்த 2026ஆம் ஆண்டில் ஸ்கோடா மொத்தம் 10 புதிய தயாரிப்புகளை அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளது. இதில் புதிய குஷாக் ஃபேஸ்லிஃப்ட் காரின் வெளியீடு முதன்மையானதாகும். ஸ்லாவியா ஃபேஸ்லிஃப்ட் (Slavia Facelift), புதுப்பொலிவிலான கோடியாக் (Kodiaq) மற்றும் ஆக்டேவியா ஆர்எஸ் (Octavia RS) காரின் வருகை, கைலாக் மற்றும் ஸ்லாவியாவிற்கான புதிய வேரியண்ட்கள் ஆகியவை அடுத்தடுத்த திட்டங்களில் அடங்கும்.
கைலாக், ஆக்டேவியா ஆர்எஸ் மற்றும் கோடியாக் கார் மாடல்களுக்காக ஸ்கோடா பல விருதுகளையும் அங்கீகாரங்களையும் பெற்றுள்ளது. ஃபோக்ஸ்வாகன் (Volkswagen) குழுமத்தின் கீழ் செயல்படும் ஸ்கோடா ஆட்டோ பிராண்ட், கடந்த 25 ஆண்டுகளாக இந்தியாவில் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் சில கார்களுக்கு போதிய வரவேற்பு கிடைக்கவில்லை என்றாலும், சில கார்கள் துவக்கத்திலேயே சிறப்பான வரவேற்பை பெற்றுள்ளன.

குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால், இந்தியாவில் குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டு வெளியிடப்பட்ட ஆக்டேவியா ஆர்எஸ், வெறும் 20 நிமிடங்களில் விற்றுத் தீர்ந்தது. ஃபோக்ஸ்வாகன் நிறுவனம், இந்திய சந்தைக்காக பிரத்யேகமாக அடாஸ் (ADAS) தொழில்நுட்பத்தை உருவாக்கி வருகிறது; இது டைகுன் ஃபேஸ்லிஃப்ட் (Taigun Facelift) காரின் வெளியீட்டில் அறிமுகப்படுத்தப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஸ்கோடாவின் இந்த வலுவான ஜனவரி மாத விற்பனை, பிராண்டின் மீதான வாடிக்கையாளர் நம்பிக்கையை எடுத்துக்காட்டுகிறது. திட்டமிடப்பட்ட பல தயாரிப்பு புதுப்பிப்புகள் மற்றும் புதிய தொழில்நுட்பங்களுடன், ஸ்கோடா இந்திய சந்தையில் தனது இருப்பை வலுப்படுத்தவும், 2025ஆம் ஆண்டிற்கு இணையான விற்பனையை மீண்டும் பெறவும் இலக்கு வைத்துள்ளது.
சமீபத்தில் இறுதி செய்யப்பட்ட இந்தியா-ஐரோப்பிய ஒன்றியம் வர்த்தக ஒப்பந்தம், சிபியூ (CBU) வழியே பல புதிய உலகளாவிய கார் மாடல்களை இந்தியாவில் அறிமுகப்படுத்த ஸ்கோடாவுக்கு உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது. சிபியூ வழி என்பது முழுவதுமாக முழு காராக உருவாக்கப்பட்டு வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுவது ஆகும்.


Click it and Unblock the Notifications









