வெறும் ஆறே நிமிடங்களில் விற்று தீர்ந்த காரின் டெலிவரி தொடங்கியது...
இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருந்த ஸ்கோடா கோடியாக் ஆர்எஸ் (Skoda Kodiaq RS) கார் வெகு சமீபத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இது ஏற்கனவே விற்பனையில் இருந்து வரும் ஸ்கோடா கோடியாக் காரின் செயல்திறன் மிக்க வெர்ஷன் ஆகும்.
இந்திய சந்தைக்கு ஸ்கோடா நிறுவனம் 50 கோடியாக் ஆர்எஸ் கார்களை மட்டுமே ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த 50 கார்களும் வெறும் 6 நிமிடங்களிலேயே விற்று தீர்ந்து விட்டன. ஸ்கோடா கோடியாக் ஆர்எஸ் காருக்கு முன்பதிவுகளை ஏற்கும் பணிகள் கடந்த ஜூன் 22ம் தேதி தொடங்கியது. முன்பதிவு தொடங்கப்பட்ட வெறும் 6 நிமிடங்களிலேயே 50 ஸ்கோடா கோடியாக் ஆர்எஸ் கார்களும் புக்கிங் செய்யப்பட்டு விட்டன.

இதை தொடர்ந்து ஸ்கோடா நிறுவனம் கோடியாக் ஆர்எஸ் கார்களை வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி செய்யும் பணிகளை தற்போது தொடங்கியுள்ளது. ஸ்கோடா கோடியாக் ஆர்எஸ் காரின் எக்ஸ்-ஷோரூம் விலை 66.99 லட்ச ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது மொத்தம் 4 கலர் ஆப்ஷன்களில் கிடைக்கும்.
அவை ஸ்டீல் க்ரே, மூன் ஒயிட், வெல்வெட் ரெட் மற்றும் மேஜிக் பிளாக் ஆகியவை ஆகும். ஸ்கோடா கோடியாக் ஆர்எஸ் காரில் 2.0 லிட்டர் 4 சிலிண்டர் டிஎஸ்ஐ பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. அதிகபட்சமாக 261 பிஹெச்பி பவர் மற்றும் 400 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடிய வகையில் இந்த இன்ஜின் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது.

இது ஸ்கோடா கோடியாக் ஸ்டாண்டர்டு வெர்ஷனை விட 60 பிஹெச்பி பவர் மற்றும் 80 என்எம் டார்க் அதிகம் ஆகும். ஸ்கோடா கோடியாக் ஆர்எஸ் காரில் 7 ஸ்பீடு ட்யூயல் க்ளட்ச் டிரான்ஸ்மிஷன் இணைக்கப்பட்டுள்ளது. இன்ஜின் உருவாக்கும் சக்தியானது 4x4 சிஸ்டம் மூலம் காரின் 4 சக்கரங்களுக்கும் அனுப்பப்படுகிறது.
ஸ்கோடா கோடியாக் ஆர்எஸ் காரில், 12.9 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், 10.25 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், பனரோமிக் சன்ரூஃப், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம், 9 ஏர்பேக்குகள், 360 டிகிரி கேமரா மற்றும் அடாப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல் போன்ற வசதிகள் எல்லாம் வழங்கப்பட்டுள்ளன.
அத்துடன் மேட்ரிக்ஸ் எல்இடி ஹெட்லைட்கள் மற்றும் ரெட் பிரேக் காலிபர்கள் உடன் 20 இன்ச் அலாய் வீல்கள் போன்ற வசதிகளும் ஸ்கோடா கோடியாக் ஆர்எஸ் காரில் கொடுக்கப்பட்டுள்ளன. எனவே வாடிக்கையாளர்கள் வழங்கும் பணத்திற்கு மதிப்பு வாய்ந்த தயாரிப்பாக ஸ்கோடா கோடியாக் ஆர்எஸ் கார் கருதப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: ஸ்கோடா நிறுவனம் தற்போது கோடியாக் ஆர்எஸ் காரின் முதல் தொகுப்பை மட்டுமே இந்தியாவில் விற்பனை செய்துள்ளது. எதிர்காலத்தில் ஸ்கோடா கோடியாக் ஆர்எஸ் காரின் 2வது தொகுப்பு இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும். அப்போது தற்போதைய அளவான 50 கார்களை காட்டிலும், இந்திய சந்தைக்கு அதிக கோடியாக் ஆர்எஸ் கார்களை ஸ்கோடா நிறுவனம் ஒதுக்கீடு செய்யும் என டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளம் கருதுகிறது.
அதற்கு முன்னதாக ஸ்கோடா ஆக்டேவியா ஆர்எஸ் (Skoda Octavia RS) காரின் 2வது தொகுப்பு இன்னும் ஒரு சில மாதங்களில் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது. முதல் தொகுப்பில் இந்திய சந்தைக்கு 100 ஆக்டேவியா ஆர்எஸ் கார்களை ஸ்கோடா நிறுவனம் ஒதுக்கீடு செய்திருந்தது. இம்முறை அதை விட அதிக கார்கள் ஒதுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications