ஸ்கோடாவின் புதிய 7 சீட்டர் எஸ்யூவி இந்தியாவில் வெளியானது
இந்தியாவில் புதிய ஸ்கோடா கோடியாக் RS எஸ்யூவியை வெளியிட்டுள்ளது ஸ்கோடா. கடந்த சில வாரங்களுக்கு முன்பு இந்தக் காருக்கான முன்பதிவை அந்நிறுவனம் தொடங்கிய நிலையில் தற்போது வெளியிட்டுள்ளது. ஏற்கனவே ஸ்டாண்டர்டு கோடியாக் எஸ்யூவி இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், தற்போது அதன் ஸ்போர்ட்டியான வெர்ஷனாக கோடியாக் RS எஸ்யூவி கார் வெளியாகியுள்ளது.
எதிர்பார்க்கப்பட்டதைப் போலவே ஸ்டாண்டர்டு கோடியாக் மாடலை விட கொஞ்சம் கூடுதலான விலையிலேயே புதிய கோடியாக் RS எஸ்யூவி வெளியாகியிருக்கிறது. ஸ்டாண்டர்டு கோடியாக் காரானது மூன்று வேரியன்ட்களாக 36.99 லட்சம் ரூபாய் முதல் 46.99 லட்சம் ரூபாய் வரையிலான எக்ஸ்-ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், புதிய ஸ்போர்ட்டியான கோடியாக் RS காரை ஒரே வேரியன்டாக 66.99 லட்சம் ரூபாய் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் இந்தியாவில் வெளியிட்டுள்ளது ஸ்கோடா.

இந்த பெரிய விலை வித்தியாசத்திற்கு அந்நிறுவனம் இரண்டு மாடல்களையும் இந்தியாவில் எந்த வகையில் தயாரிக்கிறது என்பதும் முக்கியமான காரணமாக இருக்கிறது. ஸ்டாண்டர்டு கோடியாக் எஸ்யூவியை CKD முறையில் இந்தியாவில் அசெம்பிள் செய்து விற்பனை செய்து வருகிறது ஸ்கோடா. ஆனால், புதிய கோடியாக் RS காரை முழுவதுமாக இறக்குமதி செய்து விற்பனை செய்கிறது. இதனால் கூடுதல் வரி காரணமாக விலையும் கூடுதலாக உள்ளது.
இந்தப் புதிய கோடியாக் RS மாடலை இப்போது நாம் நினைத்தாலும் வாங்க முடியாது. காரணம், இதன் முதல் பேட்ஜ் முன்பதிவு தொடக்கப்பட்ட சில நிமிடங்களிலேயே விற்றுத் தீர்ந்துவிட்டது. இந்த ஸ்போர்ட்டியான எஸ்யூவிக்கு இந்திய வாடிக்கையாளர்களிடையே எவ்வளவு டிமாண்டு இருக்கும் எனத் தெரியாத காரணத்தினால் 50 யூனிட்டுகளை மட்டுமே ஒதுக்கியிருந்தது ஸ்கோடா. ஜூன் 22ம் தேதியன்று முன்பதிவு தொடங்கப்பட்ட நிலையில், ஆறு நிமிடங்களிலேயே அனைத்து யூனிட்டுகளும் விற்றுத் தீர்ந்துவிட்டதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஸ்டாண்டர்டு கோடியாக் காரில் இருந்து பல்வேறு வகையிலும் கோடியாக் RS வேறுபட்டிருக்கிறது. குறிப்பாக கார் முழுவதும் ஆங்காங்கே RS பேட்ஜ், ஸ்போர்ட்டியான சீட்கள் மற்றும் சில மேம்பட்ட மெக்கானிக்கல் அம்சங்களையும் ஸ்கோடா கொடுத்திருக்கிறது. குறிப்பாக ஸ்டாண்டர்டு கோடியாக் எஸ்யூவியை விட அதிக பவர் மற்றும் டார்க்கை வெளிப்படுத்தும் திறன் கொண்ட இன்ஜினை புதிய கோடியாக் RS கார் கொண்டிருக்கிறது.
இந்த ப்ரீமியம் 7 சீட்டர் எஸ்யூவியில், E888, 2.0 லிட்டர், 4 சிலிண்டர், டர்போ பெட்ரோல் இன்ஜினைப் பயன்படுத்தியிருக்கிறது ஸ்கோடா. 7 ஸ்பீடு டூயல் கிளட்ச் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டிருக்கும் இந்த இன்ஜினானது 265 hp பவர் மற்றும் 400 Nm டார்க்கை உற்பத்தி செய்யும் திறனைக் கொண்டுள்ளது.
இந்தியாவில் வெளியிடப்பட்டதிலேயே மிகவும் வேகமான ஸ்கோடா கார் என இந்த ஸ்போர்ட்டியான கோடியாக் RS எஸ்யூவியை குறிப்பிடுகிறது அந்நிறுவனம். இந்த ப்ரீமியம் எஸ்யூவியானது மேற்கூறிய பவர்ட்ரெயினுடன் மணிக்கு 100 கிமீ வேகத்தை 6.3 நொடிகளில் எட்டும் திறனைக் கொண்டுள்ளது. மேலும், அதிகபட்சமாக மணிக்கு 231 கிமீ வேகத்தில் செல்லும் திறனையும் இந்த ப்ரீமியமான 7 சீட்டர் எஸ்யூவி கொண்டிருப்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஸ்டாண்டர்டான கார்களைத் தவிர்த்து, இதுபோன்ற ஸ்போர்ட்டியான மற்றும் ஸ்பெஷலான கார்களை முழுவதுமாக இறக்குமதி செய்து விற்பனை செய்வதை ஸ்கோடா மற்றும் ஃபோக்ஸ்வாகன் நிறுவனங்கள் கடந்த சில ஆண்டுகளாக வழக்கமாக்கியிருக்கின்றன. மேலும், அந்தக் கார்களுக்கு இந்தியாவில் வாடிக்கையாளர்களிடையே நல்ல டிமாண்டும் இருந்து வருகிறது. இதேபோல் தான், கடந்தாண்டு ஃபோக்ஸ்வாகன் நிறுவனம் ஸ்போர்ட்டியான கோல்ஃப் GTI காரையும் முழுவதுமாக இறக்குமதி செய்து குறிப்பிட்ட அளவில் மட்டும் இந்தியாவில் விற்பனை செய்தது.


Click it and Unblock the Notifications