டாடா காருக்கு போட்டியாக வருகிறது என்றாலே ஸ்பெஷல் தான்! இன்னும் சில தினங்களில் அறிமுகம்!
ஸ்கோடா ஆட்டோ (Skoda Auto) நிறுவனம் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட குஷாக் ஃபேஸ்லிஃப்ட் (Kushaq Facelift) காரின் முதல் டீசரை வெளியிட்டுள்ளது. இந்த ஸ்கோடா எஸ்யூவி கார் இந்த மாதம் அதாவது ஜனவரி 19 அல்லது 20ஆம் தேதிகளில் அறிமுகமாகலாம் என்பதை டீசர் உறுதிப்படுத்துகிறது. இந்த டீசரில் புதிய குஷாக் காரின் தோற்றம் எதுவும் காட்டப்படவில்லை.
மறைப்பினுள் மூடப்பட்ட நிலையில், புதிய குஷாக் கார் காட்டப்பட்டுள்ளது. விற்பனையில் ஹூண்டாய் க்ரெட்டா (Hyundai Creta), கியா செல்டோஸ் (Kia Seltos), மாருதி சுஸுகி கிராண்ட் விட்டாரா (Maruti Suzuki Grand Vitara), ஹோண்டா எலிவேட் (Honda Elevate) மற்றும் டாடா சியரா (Tata Sierra) போன்ற கார் மாடல்களுக்கு குஷாக் போட்டியாக உள்ளது.

இத்தகைய பலத்த போட்டி மிகுந்த மார்க்கெட்டில் விற்பனை செய்யப்படும் இந்த காரின் புதிய ஃபேஸ்லிஃப்ட் வெர்சனில் வெளிப்புறத்தில் சிறிய மாற்றங்கள் செய்யப்படலாம் எனத் தெரிகிறது. குறிப்பாக முன்பகுதியிலும், பின்பகுதியிலும் மாற்றங்கள் இருக்கும். புதியதாக வடிவமைக்கப்பட்ட முகப்பு விளக்குகள், பம்பரில் டிசைன் மாற்றங்கள் மற்றும் பெரிதாக்கப்பட்ட பட்டாம்பூச்சி வடிவிலான கிரில் அமைப்புடன் மெல்லிய எல்இடி பகல்நேர விளக்குகள் எதிர்பார்க்கப்படுகின்றன.
மேலும், காரின் பின்பகுதியில் மெல்லிய டெயில்லேம்ப்கள், ஒன்றோடு ஒன்று இணைக்கப்பட்டதாக மேம்படுத்தப்படலாம். இதற்கு முன்னதாக சோதனை ஓட்டத்தின் போது அடையாளம் காணப்பட்டு இருந்த குஷாக் ஃபேஸ்லிஃப்ட் கார்களில், 17 அங்குல மேட்-பிளாக் அலாய் சக்கரங்கள் காணப்பட்டன. காரின் பக்கவாட்டுத் தோற்றத்தில் பெரிய மாற்றங்கள் இருக்காது என இதுவரையில் வெளியான ஸ்பை படங்கள் தெரிவிக்கின்றன.

புதிய குஷாக் ஃபேஸ்லிஃப்ட் காரின் உட்புற கேபின் ஆனது அதிக வசதிகளுடன் வருவதற்கான வாய்ப்புள்ளது. போட்டியாளர்களை சமாளிக்க, உயர்தர வேரியண்ட்களில் பனோரமிக் சன்ரூஃப் சேர்க்கப்படும் என்பதை ஸ்பை படங்கள் உறுதி செய்துள்ளன. தற்போதுள்ள குஷாக் காரில் ஒற்றை சன்ரூஃப் மட்டுமே உள்ளது, ஆனால் பனோரமிக் சன்ரூஃப் வாடிக்கையாளர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுமட்டுமின்றி, குஷாக் ஃபேஸ்லிஃப்ட் மேற்கூறப்பட்ட மற்ற போட்டி கார்கள் எதிலிலும் இல்லாத வகையில் முதல்முறையாக பின்பக்க இருக்கைகளுக்கு மசாஜ் வசதியைப் பெறலாம். புதிய டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் மற்றும் இன்ஃபோடெயின்மென்ட் திரைக்கு புதிய கிராபிக்ஸ் மற்றும் 1.5 TSI டர்போ என்ஜின் வேரியண்ட்களுக்கு பின்பக்க டிஸ்க் பிரேக்குகள் ஆகியவை மற்ற குறிப்பிடத்தக்க அம்சங்களாக வழங்கப்படலாம்.
மேம்படுத்தப்பட்ட ஏர்-கண்டிஷனிங் சிஸ்டமும் எதிர்பார்க்கப்படுகிறது. பாதுகாப்பு அம்சங்களைப் பொறுத்தவரை, லெவல்-2 அடாஸ் (Advanced Driver Assistance Systems - ADAS) படிப்படியாக அனைத்து MQB-A0-IN தள அடிப்படையிலான ஸ்கோடா கார்களிலும் அறிமுகப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான போட்டி கார்கள் ஏற்கனவே ADAS தொகுப்பை வழங்கும் நிலையில், குஷாக் இதில் இணையும்.
மேலும், 360 டிகிரி கேமராவும் இந்த அமைப்பில் சேர்க்கப்படும் என முன்பே வெளியான தகவல்கள் தெரிவிக்கின்றன. என்ஜின் மற்றும் கியர்பாக்ஸ் விருப்பங்களில் தற்போதுள்ள ஆப்ஷன்களே தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன்படி, 1.0 லிட்டர் டர்போ-பெட்ரோல் (115hp, 178Nm) மற்றும் 1.5 லிட்டர் டர்போ-பெட்ரோல் (150hp, 250Nm) என்ஜின்கள் புதிய ஸ்கோடா குஷாக் ஃபேஸ்லிஃப்ட் காரிலும் கிடைக்கும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: 2021ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்ட குஷாக்கின் ஆயுட்காலத்தை நீட்டிக்கும் விதமாக இது ஒரு பெரிய புதுப்பித்தலாக இருக்கும் என எதிர்பார்க்கிறோம். இந்திய சந்தையில் மிட்-சைஸ் எஸ்யூவி கார்கள் பிரிவில் போட்டி கடுமையாகியுள்ள நிலையில், ஸ்கோடா குஷாக் இந்த ஃபேஸ்லிஃப்ட் அப்கிரேட் மூலம் தன்னை வலுவாக நிலைநிறுத்திக் கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேம்படுத்தப்பட்ட அம்சங்களும் வடிவமைப்பும், குஷாக்கை இந்த பிரிவில் ஒரு கவர்ச்சிகரமான தேர்வாக மாற்றும்.


Click it and Unblock the Notifications








