ரெண்டு எஸ்யூவி கார்களும் பார்க்க ஒரே மாதிரி தான் இருக்கும்! ஆனா கொஞ்ச உன்னிப்பா கவனிச்சா வித்தியாசம் தெரியும்!
ஃபோக்ஸ்வேகன் (Volkswagen) நிறுவனம் அதன் டைகுன் (Taigun) எஸ்யூவி காரை ஃபேஸ்லிஃப்ட் (Facelift)-க்கு அப்கிரேட் செய்து சமீபத்தில் வெளியீடு செய்ததை பற்றி கேள்விப்பட்டு இருப்பீர்கள் என நினைக்கிறேன். இந்தியாவில் எஸ்யூவி (SUV) ரக கார்களுக்கே நல்ல வரவேற்பு கிடைத்து வருவதை உணர்ந்து சில வருடங்களுக்கு முன் அறிமுகம் செய்த டைகுன் காரின் விற்பனையை மேலும் அதிகரிக்கும் விதமாக அதற்கு மிட்-லைஃப் ஃபேஸ்லிஃப்ட் அப்கிரேடை ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் வழங்கி உள்ளது.
இந்த காருக்கு விற்பனையில் போட்டியாக ஸ்கோடா ஆட்டோ (Skoda Auto) நிறுவனம் அதன் குஷாக் (Kushaq) காரின் ஃபேஸ்லிஃப்ட் அப்கிரேடை கடந்த மார்ச் மாதத்தில் அறிமுகம் செய்தது. விற்பனையில் போட்டியாக இருப்பினும், குஷாக் காருக்கும், டைகுன் காருக்கும் நிறைய ஒற்றுமைகள் உள்ளன. ஏனெனில், இந்த இரு ஐரோப்பியன்-ஸ்டைல் எஸ்யூவி கார்களும் ஒரே மாதிரியான எம்.க்யூ.பி-இந்தியா (MQB-IN) பிளாட்ஃபாரத்தில் உருவாக்கப்படுகின்றன. இருப்பினும் அதேநேரம், இவை இரண்டிற்கும் இடையே சில வேற்றுமைகளும் உள்ளன. அவை என்னென்ன என்பதை பற்றி தான் இனி இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம்.

வெளிப்புற தோற்றம்: ஒரே மாதிரியான பிளாட்ஃபாரத்தில் உருவாக்கப்படுவதால் இந்த இரு எஸ்யூவி கார்களும் நீளம், அகலம் உள்ளிட்ட பரிமாண அளவுகளில் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாக இருப்பினும், தோற்றத்தில் சில வித்தியாசங்கள் உடன் உருவாக்கப்படுகின்றன. கடந்த மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்ட குஷாக் ஃபேஸ்லிஃப்ட் காரில் புதிய டிசைனிலான எல்இடி ஹெட்லைட்கள் வழங்கப்பட்டுள்ளன.
எல்இடி ஹெட்லைட்கள் இரண்டையும் இணைக்கும் விதமாக டிஆர்எல்-கள் முன்பக்க கிரில்லின் மீது வழங்கப்பட்டுள்ளது. பெரிய அளவிலான முன்பக்க பம்பரில் ஃபாக் விளக்குகள் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. அலுமினியத்திலான கிளாடிங்குகள் காரின் பக்கவாட்டில் வழங்கப்பட்டுள்ளன. பின்பக்கத்திலும் டெயில்லைட்கள் இரண்டும் ஒன்றோடு ஒன்று இணைக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ளன. டெயில்லைட்களுக்கு அருகே சதுர வடிவிலான இண்டிகேட்டர் விளக்குகள் இடம்பெற்றுள்ள நிலையில், காரின் பின்பக்கத்தில் ஸ்கோடா லோகோ ஒளிரக்கூடியதாக உள்ளது.

மறுப்பக்கம், டைகுன் ஃபேஸ்லிஃப்ட் காரின் முன்பக்கத்தில் சிறிய அளவில் கருப்பு நிறத்தில் கிரில் வழங்கப்பட்டுள்ளது. ஃபாக் விளக்குகளுடன் தன்னிச்சையாக அட்ஜெஸ் ஆகக்கூடிய ஹெட்லைட்கள் இந்த காரில் கொடுக்கப்பட்டுள்ளன. அனைத்து விதமான காலநிலைகளுக்கும் ஏற்ற ஹெட்லைட்கள் இரண்டையும் இணைக்கக்கூடிய எல்இடி டிஆர்எல்-கள் க்ரில்லின் மீது வழங்கப்பட்டுள்ளன. அதேபோல், டைகுன் ஃபேஸ்லிஃப்ட் காரின் பின்பக்கத்திலும் டெயில்லைட்கள் இரண்டும் இணைக்கப்பட்டுள்ள நிலையில், அவற்றிற்கு பக்கத்தில் சதுர வடிவிலான இண்டிகேட்டர்கள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் ஒளிரக்கூடிய ஃபோக்ஸ்வேகன் லோகோவும் இடம்பெற்றுள்ளது.
தொழிற்நுட்ப அம்சங்கள்: குஷாக் ஃபேஸ்லிஃப்ட் காரில் சிங்கிள்-பேன் சன்ரூஃப், 16-இன்ச் அலாய் சக்கரங்கள், எல்இடி ஹெட்லைட்கள், சதுர வடிவிலான இண்டிகேட்டர்கள், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல், பின் இருக்கை பயணிகளுக்கும் ஏசி மற்றும் பின்பக்க விண்ட்ஷீல்டில் வைபர் உடன் டீஃபாகர் உள்ளிட்டவை கிடைக்கும். அதுவே ஃபோக்ஸ்வேகன் டைகுன் ஃபேஸ்லிஃப்ட் காரிலும் குஷாக்கின் கிட்டத்தட்ட அனைத்து வசதிகளும் கிடைக்கும்.
ஆனால், இந்த காரின் விலை குறைவான வேரியண்ட்களில் சிங்கிள்-பேன் சன்ரூஃப் கிடைக்காது; அதனை பெற நீங்கள் குறைந்தது ஹைலைன் பிளஸ் (Highline Plus) வேரியண்ட்டை ஆவது வாங்க வேண்டும். ஆனால், டைகுனின் அனைத்து வேரியண்ட்களிலும் வழங்கப்பட்டுள்ள கனெக்டட் எல்இடி டிஆர்எல்-கள் குஷாக் ஃபேஸ்லிஃப்ட் காரின் எண்ட்ரி-லெவல் வேரியண்ட்களில் கிடைக்காது.
ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் (Automatic Gearbox): புதிய குஷாக் ஃபேஸ்லிஃப்ட் காரில் 8-ஸ்பீடு டார்க் கன்வெர்டர் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன் ஆனது ஆரம்ப நிலை எண்ட்ரி-லெவல் வேரியண்ட்டில் இருந்தே வழங்கப்பட்டுள்ளது. ஆனால், இதனை டைகுன் ஃபேஸ்லிஃப்ட் காரில் சில இலட்ச ரூபாய்கள் அதிகமான ஹைலைன் வேரியண்ட்டில் இருந்தே பெற முடியும்.
இந்த புதிய டார்க் கன்வெர்டர் கியர்பாக்ஸ் ஆப்ஷன் ஆனது நகரத்திற்குள் போக்குவரத்து நெரிசல்களுக்கு மத்தியில் காரை ஓட்டுவதற்கு ஏற்றதாக உள்ளது. முன்பு வழங்கப்பட்ட 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் உடன் ஒப்பிடுகையில், இது மென்மையான கியர் மாற்றங்களுக்கு வழிவகுக்கக் கூடியதாக உள்ளது. குஷாக் மற்றும் டைகுன் என இரண்டு கார்களிலும் விலைமிக்க டாப் வேரியண்ட்களில் டிஎஸ்ஜி (DSG) ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷனும் வழங்கப்படுகிறது.
பின் இருக்கை மசாஜ் & பூட் ஸ்பேஸ்: குஷாக் ஃபேஸ்லிஃப்ட் காரில் பின் இருக்கைகளில் மசாஜ் (Massage) வசதியை ஸ்கோடா அறிமுகம் செய்த நிலையில், ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் டைகுன் ஃபேஸ்லிஃப்ட் காரில் அதனை வழங்கவில்லை. பூட் ஸ்பேஸ் அளவை பொறுத்தவரையில், குஷாக் ஃபேஸ்லிஃப்ட் காரில் 491 லிட்டர்கள் கொள்ளளவில் பூட் ஸ்பேஸ் வழங்கப்படும் நிலையில், டைகுன் ஃபேஸ்லிஃப்ட்டில் சற்று சிறியதாக 385 லிட்டர்கள் கொள்ளளவில் வழங்கப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: புதிய ஸ்கோடா குஷாக் ஃபேஸ்லிஃப்ட் மற்றும் ஃபோக்ஸ்வேகன் டைகுன் ஃபேஸ்லிஃப்ட் என இரண்டும் கார் ஆர்வலர்களின் விருப்பமான கார்களாக விளங்குகின்றன. அந்த அளவிற்கு இவை இரண்டின் பவர்டிரெயின் மெக்கானிசம் ஐரோப்பிய தரத்திற்கு இணையானதாக உள்ளது. இருப்பினும், தொழிற்நுட்ப அம்சங்களில் டைகுன் ஃபேஸ்லிஃப்ட் காரை காட்டிலும் குஷாக் ஃபேஸ்லிஃப்ட் ஒருபடி மேலே உள்ளது என்பதை இந்த ஒப்பீட்டின் மூலம் அறிய முடிகிறது.


Click it and Unblock the Notifications








