விலை வெறும் 7.5 லட்சம் தான்.. ஆனால் இந்த எஸ்யூவியோட பவரை அடிச்சிக்க முடியாது
என்னதான் இந்திய கார்களை பட்ஜெட்டிற்காக வாங்கினாலும் ஜெர்மன் கார்கள் மீது இந்தியர்களுக்கு தனி மோகம் உண்டு. ஆனால் அவற்றின் தொடக்க விலையே அதிகமாக இருப்பதோடு, பயன்பாட்டு செலவு மற்றும் பராமரிப்புச் செலவும் அதிகம். இதனாலேயே நிறைய வாடிக்கையாளர்கள் ஸ்கோட அல்லது ஃபோக்ஸ்வாகன் கார்களைத் தவிர்த்து விட்டு இந்திய பிராண்டின் கார்களை வாங்குகிறார்கள்.
ஆனால் இதற்கு ஒரு முற்றுப் புள்ளி வைக்க கடந்தாண்டு முடிவெடுத்தது ஸ்கோடா. பராமரிப்புச் செலவு அல்லது பயன்பாட்டுச் செலவுகளை ஒன்றும் செய்ய முடியாது. ஆனால் தொடக்க விலையை கணிசமாகக் குறைக்க வேண்டும். அளவில் சிறிய கார் மூலம் அதனை செய்ய முடிவெடுத்தது ஸ்கோடா. அதன் விளைவு தான் இன்று விற்பனையில் இருக்கும் ஸ்கோடாவின் கைலாக் எஸ்யூவி கார்.

சப்-காம்பேக்ட் எஸ்யூவி என்பதால் 8 லட்சம் ரூபாய்க்கு உள்ளான தொடக்க விலையில் இந்த காரை ஸ்கோடாவால் வெளியிட முடிந்தது. குறைவான விலையில் காரணமாக ஸ்கோடாவின் மற்ற கார்களை வாங்குவதை விட இருமடங்கு வாடிக்கையாளர்கள் இந்த கைலாக் காரை வாங்கி வருகிறார்கள். கடந்த 2026 ஏப்ரலில் மட்டும் சுமார் 4,089 கைலாக் கார்களை விற்பனை செய்துள்ளது ஸ்கோடா.
இது நல்ல விற்பனை அளவு தான் என்றாலும் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடும் போது 23.77 சதவீதம் குறைவாகும். 2025 ஏப்ரலில் சுமார் 5,364 கைலாக் எஸ்யூவி கார்களை ஸ்கோடா இந்தியாவில் விற்பனை செய்திருந்தது. கைலாக் காரால் குறைந்த விற்பனையை அந்நிறுவனம் மிட்-சைஸ் எஸ்யூவியான குஷாக் ஈடுசெய்து வருகிறது. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 783 குஷாக் கார்களை மட்டுமே ஸ்கோடா விற்பனை செய்திருந்தது.

சில மாதங்களுக்கு முன்பு இந்தக் காரினை பல்வேறு புதிய அம்சங்கள் மற்றும் புதிய டிசைனுடன் ஸ்கோடா அப்டேட் செய்தது. அதன் விளைவாக குஷாக் காரின் விற்பனை கடந்த ஏப்ரல் மாதம் அதிகரித்து 1,851 யூனிட்டுகளாக இருக்கிறது. கடந்தாண்டு ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடும் போது இது 136 சதவீதம் விற்பனை உயர்வாகும்.
குஷாக் எஸ்யூவிக்கு இணையான செடான் வகை காரா ஸ்லாவியா 830 யூனிட்டுகளே கடந்த மாதம் விற்பனையாகியிருக்கிறது. கடந்தாண்டுடன் ஒப்பிடும் போது கணிசமான அளவு விற்பனை குறைவாகும். இதனைத் தவிர்த்து 116 யூனிட்டுகள் கோடியாக் என்ற ப்ரீமியம் எஸ்யூவியையும் கடந்த ஏப்ரல் மாதம் ஸ்கோடா விற்பனை செய்திருக்கிறது.
ஒட்டுமொத்தமாக கடந்த ஏப்ரல் மாதம் 6,886 கார்களை ஸ்கோடா விற்பனை செய்துள்ளது. கடந்தாண்டு ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடும் போது இது 5.70 சதவீதம் குறைவான விற்பனையாகும். கடந்தாண்டு ஏப்ரல் மாதம் 7,302 கார்களை ஸ்கோடா விற்பனை செய்திருந்தது. இந்தியாவில் ஒரே ஆண்டில் ஒரு லட்சம் கார்களை விற்பனை செய்ய வேண்டும் என்று இலக்கு நிர்ணயித்து செயல்பட்டு வருகிறது ஸ்கோடா. அதற்கான துருப்புச் சீட்டாக கைலாக் எஸ்யூவியையே அந்நிறுவனம் பார்க்கிறது.
வாடிக்கையாளர்கள் விரும்பும் வகையிலும் தொடர்ந்து இந்த சப்-காம்பேக்ட் எஸ்யூவியை ஸ்கோடா அப்டேட் செய்தும் வருகிறது. சில மாதங்களுக்கு முன்பு தான் புதிய விதமான வசதிகள் காம்பினேஷனுடன் கிளாஸிக் பிளஸ் மற்றும் பிரஸ்டீஜ் பிளஸ் ஆகிய புதிய கைலாக் வேரியன்ட்களை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது அந்நிறுவனம்.
அடுத்த சில மாதங்களில் ஸ்போர்ட்டியான லுக் கொண்ட கைலாக் ஸ்போர்ட்லைன் வேரியன்டை வெளியிடவும் ஸ்கோடா தயாராகி வருகிறது. இந்த கைலாக் சப்-காம்பேக்ட் எஸ்யூவி காரை 7.59 லட்சம் ரூபாய் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் தொடங்கி இந்தியாவில் வாடிக்கையாளர்கள் வாங்கலாம். அதேபோல் புதிதாக அப்டேட் செய்யப்பட்ட மிட்-சைஸ் எஸ்யூவியான குஷாக்கை 10.69 லட்சம் ரூபாய் என்ற விலையில் தொடங்கி நாம் வாங்க முடியும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இதற்கு முன்பே நாங்கள் கூறியது தான், இப்போதைய நிலையில் சப்-காம்பேக்ட் எஸ்யூவி மாடல்கள் தான் ஒவ்வொரு நிறுவனத்திற்கும் இந்தியாவில் துருப்புச் சீட்டாக இருக்கிறது. அதனை எப்படி அந்தந்த நிறுவனங்கள் பயன்படுத்துகின்றனவோ அதன் அடிப்படையில் விற்பனை கூடும் அல்லது குறையும். அதிக அளவில் இல்லையென்றாலும் வாடிக்கையாளர்களிடம் ஸ்கோடா கைலாக் நல்ல வரவேற்பையே பெற்றிருக்கிறது.
எனவே இந்தக் காருக்கு புதிய இன்ஜின் தேர்வுகளைக் கொடுப்பது, புதிய வசதிகளுடன் அப்டேட் செய்வது, விதவிதமான காம்பினேஷன்களில் புதிய வேரியன்ட்களை வெளியிடுவது என தொடர்ந்து கைலாக்கை ஸ்கோடா ஃப்ரஷ்ஷாக வைக்கும் பட்சத்தில் இதன் விற்பனை தொடர்ந்து உயர்வதை அந்நிறுவனம் உறுதி செய்யலாம். அதோடு தங்கள் இலக்கான 1 லட்சம் யூனிட்டுகள் விற்பனை என்ற இலக்கையும் எளிதாக எட்டலாம்.


Click it and Unblock the Notifications