ரூ.3 லட்சம் தள்ளுபடியுடன் மிகவும் மலிவான விலையில் விற்பனை செய்யப்படும் எஸ்யூவி கார்.
புதிய கார்களை ஆட்டோமொபைல் நிறுவனங்கள் அப்டேட் செய்யும் போது, அப்டேட்டிற்கு முந்தைய கார்களை ஓரளவு நல்ல சலுகைகளுடன் வாடிக்கையாளர்கள் வாங்க முடியும். அப்படி ஸ்கோடாவின் குஷாக் மிட்-சைஸ் எஸ்யூவி மாடல் நிறைய சலுகைகளுடன் தற்போது விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கடந்த மார்ச் மாதம் தான் மேம்படுத்தப்பட்ட குஷாக் ஃபேஸ்லிப்ட் மாடலை இந்தியாவில் வெளியிட்டது ஸ்கோடா. இதனால் இதற்கு முந்தைய மாடலுக்கு நிறைய சலுகைகள் கொடுக்கப்பட்டுள்ளன.
2025ம் ஆண்டு தயாரிக்கப்பட்ட குஷாக் மாடலுக்கே அதிகளவிலான சலுகைகளை இந்த ஏப்ரல் மாதம் வழங்கியிருக்கிறது ஸ்கோடா. சுமார் ரூ.3 லட்சம் வரையிலான சலுகை விலையில் இந்த மாடலை நாம் வாங்க முடியும். அப்டேட்டிற்கு முந்தைய இந்த பழைய ஸ்கோடா குஷாக் மாடலானது ரூ.10.61 லட்சம் முதல் ரூ.18.43 லட்சம் வரையிலான எக்ஸ்-ஷோரூம் விலையில் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இந்த விலையில் ரூ.2 லட்சம் வரையில் தள்ளுபடி செய்கிறது ஸ்கோடா. அத்துடன் ரூ.50,000 வரையிலான எக்சேஞ்சு போனஸ் மற்றும் ரூ.50,000 வரையிலான கார்ப்பரேட் அல்லது லாயல்டி போனஸும் வழங்கப்படுகிறது. மொத்தமாக ரூ.3 லட்சம் மதிப்புடைய சலுகைகளை நாம் பெற முடியும். நாம் தேர்ந்தெடுக்கும் வேரியன்டைப் பொறுத்து இந்த சலுகை மதிப்புகளிலும் மாற்றம் இருக்கும்.
இதுவே 2026ம் ஆண்டு தயாரிக்கப்பட்ட, சமீபத்திய அப்டேட்டிற்கு முந்தைய குஷாக் மாடலுக்கு ரூ.1.05 லட்சம் வரையிலான சலுகைகளை இந்த ஏப்ரல் மாதம் வழங்குகிறது ஸ்கோடா. இதில் பணத் தள்ளுபடியாக ரூ.30,000, எக்ஸ்சேஞ்சு போனஸாக ரூ.25,000 மற்றும் கார்ப்பரேட் அல்லது லாயல்டி போனஸாக ரூ.50,000 ஆகியவை அடங்கும்.

இந்த சலுகைகளுக்காக, புதிய குஷாக் மாடலில் கொடுக்கப்பட்டிருக்கும் சில புதிய அம்சங்களை நீங்கள் மிஸ் செய்ய வேண்டியிருக்கும். ஆனால், மெக்கானிக்கலாக இரண்டு கார்களும் ஒரே மாதிரி தான் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. அதே இன்ஜின் மற்றும் கியர்பாக்ஸ் தேர்வுகள் தான். ஆனால், 6 ஸ்பீடு டார்க் கன்வர்ட்டர் கியர்பாக்ஸை நீங்கள் தேர்தெடுக்கிறீர்கள் என்றால் கொஞ்சம் யோசியுங்கள். ஏனெனில், புதிய காரில் இதற்கு மாற்றாக 8 ஸ்பீடு டார்க் கன்வர்ட்டர் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸைக் கொடுத்துள்ளது ஸ்கோடா.
பழைய குஷாக்கை வாங்குதனால் வாடிக்கையாளர்கள் என்னென்ன புதிய அம்சங்களை மிஸ் செய்வார்கள்?
புதிய குஷாக்கின் டிசைன் முந்தைய குஷாக்குடன் ஒப்பிடும் போது சற்று மேம்பட்டதாக இருக்கும். இதனால் மாடர்னான மற்றும் ஸ்டைலான லுக்கை மிஸ் செய்ய வேண்டியிருக்கும். உயர்நிலை வேரியன்ட்களைத் தேர்ந்தெடுக்கிறீர்கள் என்றால் பனோரமிக் சன்ரூஃப் வசதி கிடைக்காது. சிங்கிள் பேன் சன்ரூஃபே இருக்கும். 10.25 இன்ச் டிரைவர்ஸ் டிஸ்பிளேவிற்கு பதிலாக, 8 இன்ச் யூனிட்டே கொடுக்கப்பட்டிருக்கும்.
புதிய மாடலின் பின்பக்கம் சீக்வென்ஷியல் இன்டிகேட்டர்களுடன், கனெக்டட் LED லைட் பார் உள்ளது. முந்தைய மாடலில் ஸ்டாண்டர்டான பின்பக்க விளக்கு செட்டப்பே இருக்கும். 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் வேரியன்ட்களில் பின்பக்க வீல்களுக்கு டிரம் பிரேக்கே இருக்கும், புதிய காரில் டிஸ்க் பிரேக் கொடுக்கப்பட்டுள்ளது. இவை தவிர ரியர் சீட் மஸாஜர் மற்றும் முன்பக்க பார்க்கிங் சென்சார்கள் ஆகிய வசதிகளை பழைய குஷாக்கை வாங்குவதன் மூலம் இழக்க வேண்டியிருக்கும்.
இதற்கெல்லாம் ஈடுகட்டும் வகையிலேயே தள்ளுபடி விலையில் முந்தைய மாடல் காரை வாடிக்கையாளர்கள் வாங்க முடிகிறது. மேம்படுத்தப்பட்ட புதிய குஷாக் ஃபேஸ்லிப்ட் மாடலானது ரூ.10.69 லட்சம் முதல் ரூ.18.99 லட்சம் வரையிலான எக்ஸ்-ஷோரூம் விலையில் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. முந்தைய மாடலை விட ரூ.94,000 வரை கூடுதலான விலையை புதிய குஷாக் கொண்டுள்ளது.
இந்தியாவில் ஹூண்டய் கிரெட்டா, கியா செல்டோஸ், ஃபோக்ஸ்வாகன் டைகூன், மாருதி கிராண்டு விட்டாரா, மாருதி விக்டோரிஸ், டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர், டாடா சியரா, ரெனோ டஸ்டர் மற்றும் ஹோண்டா எலிவேட் ஆகிய மிட்-சைஸ் எஸ்யூவி மாடல்களுக்குப் போட்டியாக விற்பனையாகி வருகிறது ஸ்கோடா குஷாக்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: வசதிகளைப் பெரிதாக எதிர்பார்க்காமல் அடிப்படை வேரியன்ட் அல்லது தொடக்கநிலை வேரியன்டை வாங்க விரும்பும் வாடிக்கையாளர்கள் முந்தைய மாடல் குஷாக்கையே வாங்கலாம். இதன் மூலம் பெருமளவில் பணத்தை சேமிக்க முடியும். ஆனால், கூடுதல் வசதிகளுக்காக உயர்நிலை வேரியன்டை விரும்பும் வாடிக்கையாளர்கள், புதிய குஷாக்கை ஒரு படி கீழான வேரியன்டையே கூட வாங்கலாம் என்பதே எங்களின் கருத்தாக இருக்கிறது.


Click it and Unblock the Notifications








