கைலாக் எஸ்யூவியில் 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜினைக் கொடுத்து அப்டேட் செய்யும் ஸ்கோடா?
இந்தியாவில் ஸ்கோடாவிற்கு சிறிய வெற்றியைக் கொடுத்திருக்கிறது கைலாக் (Kylaq). சப்-காம்பேக்ட் எஸ்யூவி பிரிவில் வெளியிடப்பட்டிருக்கும் இந்தக் கார் ஸ்கோடாவின் மற்ற கார்களை விட அதிகம் விற்பனைாகும் ஒன்றாக மாறியிருக்கிறது. இதன் காரணமாக இந்த சப்-காம்பேக்ட் எஸ்யூவியை தொடர்ந்து வாடிக்கையாளர்கள் விரும்பும் வகையில் மாற்றுவதற்கு அப்டேட் செய்வதற்கும் ஸ்கோடா ஆர்வமாக இருக்கிறது.
இந்தாண்டு ஜனவரி மாதம் கைலாக் எஸ்யூவியை அப்டேட் செய்தது ஸ்கோடா. அதுவரை கிளாஸிக், சிக்னேச்சர், சிக்னேச்சர் பிளஸ் மற்றும் பிரஸ்டீஜ் என நான்கு வேரியன்ட்களாக மட்டுமே கைலாக் விற்பனை செய்யப்பட்டு வந்தது. ஜனவரி மாத அப்டேட்டில், இந்த எஸ்யூவியின் லைன்-அப்பில் கிளாஸிக் பிளஸ் மற்றும் பிரஸ்டீஜ் பிளஸ் என இரண்டு புதிய வேரியன்ட்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.

இந்தப் புதிய வேரியன்ட்களின் அறிமுகத்தோடு சில புதிய வசதிகள் காம்பினேஷனை ஸ்கோடாவால் கைலாக் லைன்-அப்பில் கொடுக்க முடிந்தது. இந்தப் புதிய வேரியன்ட்களை அறிமுகப்படுத்தும் போதே, ஸ்போர்ட்லைன் என்ற வேரியன்டின் வெளியீடு குறித்த தகவல்களையும் தெரிவித்திருந்தது ஸ்கோடா. இந்நிலையில் இந்தப் புதிய கைலாக் ஸ்போர்ட்லைன் வேரியன்டை செப்டம்பரில் இந்தியாவில் அந்நிறுவனம் வெளியிடவிருப்பதாகத் ஸ்கோடா இந்தியாவின் பிராண்டு இயக்குநர் ஆசிஷ் குப்தா தெரிவித்திருக்கிறார்.
இந்தியாவில் தாங்கள் விற்பனை செய்து வரும் ஸ்லாவியா மற்றும் குஷாக் ஆகிய மிட்-சைஸ் கார்களில் ஸ்போர்ட்லைன் வேரியன்டை லைன்-அப்பில் வைத்திருக்கிறது ஸ்கோடா. கைலாக் மாடலின் ஸ்போர்ட்லைன் வேரியன்டானது மற்ற வேரியன்ட்களில் இருந்து மாறுபடும் வகையில் ஸ்போர்ட்டியான டிசைன் மாற்றங்களைக் கொண்டிருக்கவிருக்கிறது. ஆனால் ஸ்போர்ட்டியான பெர்ஃபான்சைக் கொடுக்கும் வகையில் பவர்ட்ரெயினில் எந்த மாற்றமும் இருக்காது என்றே தெரிகிறது.

காரின் வெளிப்புறம் பல்வேறு இடங்களில் பிளாக் ட்ரீட்மென்டை ஸ்போர்ட்லைன் வேரியன்டில் ஸ்கோடா கொடுக்கலாம். அதேபோல் காரின் உட்புறமும் முழுவதுமாக கருப்பு நிறத்தில் கொடுப்பதோடு, கிளட்ச், ஆக்சிலரேட்டர் மற்றும் பிரகேக்குகளுக்கு அலுமினியம் பெடல்களையும் புதிய கைலாக் ஸ்போர்ட்லைன் வேரியன்டில் ஸ்கோடா கொடுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலே கூறியது போல பெர்ஃபாமன்ஸ் ரீதியாக எந்த மாற்றமும் இருக்காது. மற்ற வேரியன்ட்களில் பயன்படுத்தப்பட்டு வரும் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் தேர்வே புதிய காரிலும் இருக்கும். இத்துடன் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் கொடுக்கப்பட்டிருக்கும். ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸில் மாற்றம் இருக்கலாம். தற்போது 6 ஸ்பீடு டார்க் கன்வர்ட்டர் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கைலாக்கில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
சமீபத்தில் குஷாக் எஸ்யூவியை அப்டேட் செய்த போது, அதில் கொடுக்கப்பட்டு வந்த 6 ஸ்பீடு டார்க் கன்வர்ட்டர் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸுக்கு மாற்றாக, 8 ஸ்பீடு டார்க் கன்வர்ட்டர் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸைக் கொடுத்து அப்டேட் செய்திருந்தது ஸ்கோடா. அதே கியர்பாக்ஸை புதிய கைலாக்கிலும் ஸ்கோடா கொடுக்கத் தொடங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்போது இல்லையென்றாலும் விரைவில் 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸை கைலாக் எஸ்யூவியில் ஸ்கோடா கொடுப்பது உறுதி.
1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜினையும் கைலாக்கில் ஸ்கோடா கொடுத்தால் நன்றாக இருக்கும் என நிறைய வாடிக்கையாளர்கள் கருதுகிறார்கள். இது குறித்து கேட்கப்பட்ட போது, இந்த பவர்ஃபுல்லான இன்ஜினை கைலாக் எஸ்யூவியில் கொடுப்பதைக் குறித்து பரிசீலனை செய்து வருகிறோம் எனச் சொல்லியிருக்கிறார் ஆசிஷ் குப்தா. இதனால் அடுத்த ஃபேஸ்லிப்ட் அப்டேட்களின் போது டாப் எண்டு வேரியன்டிலாவது 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜினை கைலாக் லைன்-அப்பில் ஸ்கோடா கொடுக்கலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.
ஸ்போர்ட்லைன் வேரியன்டை தற்போது இருக்கும் சிக்னேச்சர் பிளஸ் மற்றும் பிரஸ்டீஜ் ஆகிய வேரியன்ட்களுக்கு இடைப்பட்டே வெளியிடவிருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்திருக்கிறது. இதனால் காரின் ஒட்டுமொத்த விலையில் எந்த மாற்றமும் இருக்காது. தற்போது 7.59 லட்சம் ரூபாய் முதல் 12.99 லட்சம் ரூபாய் வரையிலான எக்ஸ்-ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது இந்த சப்-காம்பேக்ட் எஸ்யூவி.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: கொஞ்சம் கொஞ்சமாக வாடிக்கையாளர்கள் விரும்பும் வகையிலான மேம்பாடுகளைக் கொடுப்பதன் மூலம் கைலாக் எஸ்யூவியின் விற்பனையை தொடர்ந்து அதிகரிக்கத் திட்டமிட்டு வருகிறது ஸ்கோடா. தற்போது சராசரியாக 5,000 யூனிட்டுகள் என்ற அளவில் ஒவ்வொரு மாதமும் விற்பனையாகி வருகிறது இந்தக் கார். சரியான காம்பினேஷனைப் பிடித்தால் இன்னும் அதிகமாகவும் விற்பனையாகும் திறன் கைலாக் எஸ்யூவிக்கு இருக்கிறது.


Click it and Unblock the Notifications