ஸ்கோடா ஆக்டேவியா ஆர்எஸ் காருக்கு மீண்டும் புக்கிங்... 50 யூனிட்டுகள் மட்டுமே... இந்த முறையும் விட்றாதீங்க!
பெர்ஃபார்மென்ஸ் வகையறாவில் உள்ள ஸ்கோடா ஆக்டேவியா ஆர்எஸ் காருக்கு இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் தொடர்ந்து பெரிய அளவிலான வரவேற்பு இருந்து வருவது அறிந்ததே. இந்த கார் எப்போதுமே குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே விற்பனைக்கு கொண்டு வரப்படுவதும், அதனை அடித்து பிடித்து வாடிக்கையாளர்கள் முன்பதிவு செய்வதும் நடைமுறையாகவே இருந்து வருகிறது.
இந்த நிலையில், கடந்த ஆண்டு இந்தியாவிற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட முதல் லாட்டில் புக்கிங் செய்ய முடியாதவர்களுக்கு இப்போது மீண்டும் ஒரு வாய்ப்பை ஸ்கோடா ஆட்டோ அறிவித்துள்ளது. அதன்படி, தற்போது ஸ்கோடா ஆக்டேவியா ஆர்எஸ் காருக்கு மீண்டும் புக்கிங் திறக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டாவது லாட்டில் மொத்தமாகவே 50 யூனிட்டுகள் மட்டுமே விற்பனை செய்யப்பட உள்ளன.

ஸ்கோடா ஆக்டேவியா ஆர்எஸ் காரின் முதல் லாட்டுக்கான முன்பதிவு கடந்த ஆண்டு நடந்தது. அப்போது வெறும் 100 கார்கள் மட்டுமே விற்பனைக்கு ஒதுக்கப்பட்டிருந்தன. ஆனால், காரை வாங்குவதில் ஆர்வம் காட்டியவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. சுமார் 350 முன்பதிவுகள் கிடைத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனால் ஏற்கனவே பதிவு செய்திருந்த வாடிக்கையாளர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் இரண்டாவது லாட் கார்கள் ஒதுக்கப்படும் என்று தெரிகிறது. முதல் லாட்டில் 100 கார்கள் விற்பனை செய்யப்பட்ட நிலையில், அதைவிட பாதி அளவு மட்டுமே இப்போது ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இப்போது முன்பதிவு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி கொடுக்கும் பணிகள் அக்டோபர் மாதத்தில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த ஆண்டு இந்தியாவில் விற்பனைக்கு வந்தபோது ஸ்கோடா ஆக்டேவியா ஆர்எஸ் ரூ.49.99 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலை நிர்ணயிக்கப்பட்டது. தற்போதைய இரண்டாவது லாட்டில் ஒதுக்கீடு செய்யப்பட்ட கார்களுக்கு பழைய விலையே தொடருமா அல்லது கூடுதல் விலை நிர்ணயிக்கப்படுமா என்பது குறித்து தகவல் இல்லை. மேலும், இந்த கார் தொடர்ந்து முழுமையாக கட்டமைக்கப்பட்ட நிலையில், இறக்குமதி செய்து விற்பனை செய்யப்படுவதும் குறிப்பிடத்தக்கது.
வாடிக்கையாளர்கள் இந்த அளவுக்கு ஆர்வம் காட்டுவதற்கு ஆக்டேவியா ஆர்எஸ் காரின் மிகப்பெரிய பலமே அதன் செயல்திறன் என்பது மிக முக்கிய விஷயமாக கூறலாம். இதில் 2.0 லிட்டர், 4 சிலிண்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 265 எச்பி பவரையும், 370 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். இதனுடன் 7 ஸ்பீடு டிஎஸ்ஜி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.

இந்த கார் 0-100 கிமீ வேகத்தை வெறும் 6.4 வினாடிகளில் எட்டும் திறன் கொண்டதாக ஸ்கோடா கூறுகிறது. அதிகபட்ச வேகம் எலக்ட்ரானிக் முறையில் 250 கிமீ வேகம் என்ற அளவில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இதே 2.0 லிட்டர் டர்போ எஞ்சின் ஃபோக்ஸ்வேகன் கோல்ஃப் ஜிடிஐ காரிலும் பயன்படுத்தப்படுகிறது.
இந்த ஆக்டேவியா ஆர்எஸ் கார் பெர்ஃபார்மென்ஸ் மட்டுமின்றி, வழக்கமான சாதாரண ஆக்டேவியாவை விட ஸ்போர்ட்டியான தோற்றத்தை கொண்டுள்ளது. கருப்பு வண்ண கிரில், புதிய வடிவிலான பம்பர்கள், 19 இன்ச் டூயல் டோன் அலாய் வீல்கள், டூயல் சைலென்ஸர் மற்றும் பூட்-லிட் ஸ்பாய்லர் ஆகியவை இதன் ஸ்போர்ட்டி தோற்றத்திற்கு வலுசேர்க்கின்றன.
உட்புறத்தை பொறுத்தவரையில், முழுவதும் கருப்பு வண்ண இன்டீரியர் தீம் கொடுக்கப்பட்டுள்ளது. பெரிய தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 10 ஏர்பேக்குகள், லெவல் 2 அடாஸ் ஆகியவையும் முக்கிய அம்சங்களாக இருக்கின்றன.


Click it and Unblock the Notifications
