வெறும் 20 நிமிடங்களில் விற்று தீர்ந்த கார் மறுபடியும் வருது! இந்த வருஷம் நம்ம எல்லாருக்கும் ரெண்டு தீபாவளி!
செக் குடியரசு நாட்டை சேர்ந்த ஸ்கோடா நிறுவனம் கடந்த 2025ம் ஆண்டு அக்டோபர் மாதம் ஸ்கோடா ஆக்டேவியா ஆர்எஸ் (Skoda Octavia RS) காரை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்தது. இது இந்தியாவில் உற்பத்தி செய்யப்படவில்லை. மாறாக முழுமையாக கட்டமைக்கப்பட்ட நிலையில், இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டது.
இந்திய சந்தைக்கு வெறும் 100 ஆக்டோவியா ஆர்எஸ் கார்களை மட்டுமே ஸ்கோடா நிறுவனம் ஒதுக்கியிருந்தது. இந்த 100 கார்களும், முன்பதிவு (Booking) தொடங்கப்பட்ட வெறும் 20 நிமிடங்களில் விற்பனையாகி விட்டன. இத்தனைக்கும் ஸ்கோடா நிறுவனம் ஆக்டேவியா ஆர்எஸ் காரின் எக்ஸ்-ஷோரூம் விலையை (Ex-showroom Price) 49.99 லட்ச ரூபாயாக நிர்ணயம் செய்திருந்தது.

இது செயல்திறன் மிக்க செடான் ரக கார் ஆகும். அத்துடன் குறைவான எண்ணிக்கையில் மட்டுமே கிடைக்கும் என்பதால், அரிதான ஒரு காராகவும் கருதப்படுகிறது. இவை அனைத்தும் ஒன்று சேர்ந்து, வெறும் 20 நிமிடங்களிலேயே, இந்தியாவிற்கு ஒதுக்கப்பட்ட 100 ஸ்கோடா ஆக்டேவியா ஆர்எஸ் கார்களையும் விற்பனையாக செய்து விட்டன.
இந்த சூழலில், ஸ்கோடா ஆக்டேவியா ஆர்எஸ் காரின் 2வது தொகுப்பு இந்தியாவிற்கு எப்போது வரும்? என்ற எதிர்பார்ப்பு வாடிக்கையாளர்கள் மத்தியில் இருக்கிறது. இதற்கு தற்போது நமக்கு பதில் கிடைத்துள்ளது. ஸ்கோடா ஆக்டேவியா ஆர்எஸ் காரின் 2வது தொகுப்பு, நடப்பு 2026ம் ஆண்டின் 4வது காலாண்டில் (Q4) விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதாவது நடப்பு 2026ம் ஆண்டின் அக்டோபர்-டிசம்பர் இடையிலான காலகட்டத்தில், ஸ்கோடா ஆக்டேவியா ஆர்எஸ் காரின் 2வது தொகுப்பு இந்தியாவிற்கு வரலாம். இந்தியாவில் வரும் நவம்பர் மாதம் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. பொதுவாக ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகை சமயத்தில் ஏராளமான புதிய வாகனங்கள் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும்.
இந்த சமயத்தில் மக்கள் அதிக அளவில் வாகனங்களை வாங்குவார்கள் என்பதால்தான், தீபாவளி பண்டிகை சமயத்தில், ஏராளமான புதிய வாகனங்கள் விற்பனைக்கு களமிறக்கப்படுகின்றன. ஸ்கோடா நிறுவனமும் இதை மனதில் வைத்துதான், வரும் தீபாவளி பண்டிகை சமயத்தில், ஆக்டேவியா ஆர்எஸ் காரின் 2வது தொகுப்பை விற்பனைக்கு அறிமுகம் செய்ய ஸ்கோடா திட்டமிட்டுள்ளது.
இது குறித்து கார்டாக் தளம் செய்தி வெளியிட்டுள்ளது. ஆனால் 2வது தொகுப்பில் இந்தியாவிற்கு எத்தனை ஸ்கோடா ஆக்டேவியா ஆர்எஸ் கார்கள் ஒதுக்கப்படும் என்பது உறுதியாக தெரியவில்லை. ஆனால் முதல் தொகுப்பில் வெறும் 100 கார்கள் மட்டும் ஒதுக்கப்பட்டது போல் அல்லாமல், இம்முறை சற்று அதிக எண்ணிக்கையிலான கார்கள் ஒதுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஸ்கோடா ஆக்டேவியா ஆர்எஸ் காரின் செயல்திறனை பொறுத்தவரையில் 263 ஹெச்பி பவரையும், 370 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடிய 2.0 லிட்டர் டிஎஸ்ஐ டர்போசார்ஜ்டு பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் உடன் 7 ஸ்பீடு டிஎஸ்ஜி ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.
நாங்கள் ஏற்கனவே குறிப்பிட்டதை போல், இது செயல்திறன் மிக்க செடான் கார் ஆகும். எனவே பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிலோ மீட்டர்கள் என்ற வேகத்தை வெறும் 6.4 வினாடிகளிலேயே இந்த கார் எட்டி விடும். அதே நேரத்தில் இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 250 கிலோ மீட்டர்களாக உள்ளது.
சக்தி வாய்ந்த இன்ஜின் ஆப்ஷன் உடன், 12.9 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், 10 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே, ஹெட்ஸ் அப் டிஸ்ப்ளே, 360 டிகிரி கேமரா, 10 ஏர்பேக்குகள் மற்றும் லெவல் 2 அடாஸ் போன்ற அதிநவீன வசதிகளையும் (Features) ஸ்கோடா ஆக்டேவியா ஆர்எஸ் கொண்டுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: ஸ்கோடா ஆக்டேவியா ஆர்எஸ் காரின் 2வது தொகுப்பிற்காக இந்திய வாடிக்கையாளர்கள் பலரும் ஆவலுடன் காத்து கொண்டுள்ளனர். எனவே ஸ்கோடா நிறுவனம் இம்முறை அதிக எண்ணிக்கையிலான ஆக்டேவியா ஆர்எஸ் கார்களை இந்திய வாடிக்கையாளர்களுக்கு ஒதுக்க வேண்டும் என டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளம் கருதுகிறது.


Click it and Unblock the Notifications