600 கிமீ ரேஞ்சு.. 28 நிமிடங்களில் சார்ஜிங்.. வெளியாகிறது புதிய 7 சீட்டர் எலெக்ட்ரிக் எஸ்யூவி!

'பீக்' (Peaq) என்ற பெயரில் புதிய எலெக்ட்ரிக் எஸ்யூவி ஒன்றை ஜூன் 23ம் தேதியன்று சர்வதேச அளவில் அறிமுகப்படுத்தவிருக்கிறது ஸ்கோடா. அதற்கு முன்பாக தற்போது அந்தக் காரின் டிசைன் ஸ்கெட்ச்களை வெளியிட்டிருக்கிறது. இதுவரை ஸ்கோடா உருவாக்கிய கார்களிலேயே விலையுயர்ந்த ஒன்றாக இந்த பீக் எஸ்யூவி இருக்கும். 2022ம் ஆண்டில் இருந்த கான்செப்ட் வடிவில் காட்சிப்படுத்தப்பட்டு வந்த 'விஷன் 7S' (Vision 7S) என்ற மாடலின் தயாரிப்பு நிலை வடிவம்தான் பீக்.

வழக்கமாக தங்களுடைய எஸ்யூவிக்களுக்கு 'K' என்ற ஆங்கில எழுத்தில் தொடங்கும் பெயரையே ஸ்கோடா பயன்படுத்தும். இந்தியாவில் அந்நிறுவனம் விற்பனை செய்யும் கைலாக் (Kylaq) மற்றும் குஷாக் (Kushaq) ஆகியவை கூட அந்த விதியைப் பின்பற்றியே இருக்கும். கைலாக் எஸ்யூவிக்கு இந்தியாவில் பெயர் போட்டியை அறிவித்த போதும் கூட 'K' எழுத்தில் தொடங்க வேண்டும் என ஸ்ட்ரிக்ட்டாக அறிவித்திருந்தது ஸ்கோடா. முதல் முறையாக அந்த வழக்கத்தை மாற்றி 'K' என்ற எழுத்தில் தொடங்காத பெயரை புதிய எஸ்யூவிக்கு ஸ்கோடா பயன்படுத்தியிருக்கிறது.

Skoda Peaq Design

ஸ்கோடா வெளியிட்டிருக்கும் டிசைன் ஸ்கெட்ச்களில் பார்க்கும் போது நல்ல பெரிய காராகவே இருக்கிறது பீக் எலெக்ட்ரிக் எஸ்யூவி. இந்தக் காரானது 4,874 மிமீ நீளம் மற்றும் 2,965 மிமீ வீல்பேஸைக் கொண்டதாக இருக்கும் என்பதனை முன்பே ஸ்கோடா உறுதி செய்திருப்பது குறிப்பிடத்தக்கது. 5 சீட்டர் மற்றும் 7 சீட்டர் வடிவில் இந்த ஃபிளாகஷிப் எலெக்ட்ரிக் எஸ்யூவியை வெளியிடவிருப்பதாக ஸ்கோடா தெரிவித்துள்ளது. 5 சீட்டர் வடிவில் சுமார் 1,010 லிட்டர் பூட் ஸ்பேஸை இந்தக் கார் கொண்டிருக்குமாம்.

ஃபோக்ஸ்வாகன் குழுமத்தின் MEB எலெக்ட்ரிக் வாகன பிளாட்ஃபார்மையே புதிய பீக் எஸ்யூவிக்குப் பயன்படுத்தியிருக்கிறது ஸ்கோடா. 60, 90 மற்றும் 90x என மூன்று வேரியன்ட்களாக இந்த எலெக்ட்ரிக் எஸ்யூவி வெளியாகவிருக்கிறது. 60 வேரியன்டில் 63 kWh பேட்டரி பேக்கும், 90 வேரியன்ட்களில் 91 kWh பேட்டரி பேக்கும் பயன்படுத்தப்பட்டிருக்கும். இரண்டு பேட்டரி பேக்குகளும் முறையே 460 கிமீ மற்றும் 600 கிமீ வரையிலான ரேஞ்சைக் கொண்டிருக்கும்.

Skoda Peaq Spy

இந்த பேட்டரி பேக்குகளை 10 முதல் 80 சதவீதம் வரை வெறும் 28 நிமிடங்களில் சார்ஜும் செய்து விட முடியுமாம், அதிவேக DC சார்ஜர்களைப் பயன்படுத்தும் போது. முதலிரண்டு வேரியன்ட்களிலும் ரியர் வீல் டிரைவ் வசதியையும், டாப் எண்டு 90x வேரியன்டில் ஆல் வீல் டிரைவ் வசதியையும் கொடுக்கவுள்ளது ஸ்கோடா. மூன்றுமே வெவ்வேறு அளவில் பவர் மற்றும் டார்க்கை வெளிப்படுத்தும் வகையிலான எலெக்ட்ரிக் மோட்டார் செட்டப்பைக் கொண்டிருக்கும்.

60 வேரியன்டானது சிறிய பேட்டரி பேக்குடன் 204 hp பவரை வெளிப்படுத்தும் திறன் கொண்ட எலெக்ட்ரிக் மோட்டார் செட்டப்புடன், மணிக்கு அதிகபட்சமாக 160 கிமீ வேகத்தில் செல்லும் திறனைப் பெறும். 90 மற்றும் 90x வேரியன்ட்களானது பெரிய பேட்டரி பேக்குடன் 286 hp பவர் மற்றும் 299 hp பவரை வெளிப்படுத்தும் எலெக்ட்ரிக் மோட்டார் செட்டப்புகளைப் பெற்றிருக்கும். இவை அதிகபட்சமாக மணிக்கு 180 கிமீ வேகத்தில் செல்லும் திறனையும் கொண்டிருக்கும்.

இந்த பீக் எலெக்ட்ரிக் எஸ்யூவியின் கேபினை இன்னும் ஸ்கோடா அறிமுகப்படுத்தவில்லை. எனினும் 13.6 இன்ச் போர்ட்ரெயிட் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மற்றும் 10 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் ஆகிய அம்சங்கள் இதில் கொடுக்கப்பட்டிருக்கின்றன. இது தவிர பிராக்டிகாலிட்டி மற்றும் சொகுசுக்காக நிறைய ப்ரீமியம் வசதிகளையும் இந்த எலெக்ட்ரிக் எஸ்யூவியில் ஸ்கோடா கொடுக்கவிருக்கிறது. வயர்லெஸ் சார்ஜிங், எலெக்ட்ரோகுரோமிக் பனோரமிக் சன்ரூஃப், AR ஹெட்ஸ்-அப் டிஸ்பிளே ஆகிய மேம்பட்ட அம்சங்களும் இருக்கும்.

இந்தியாவில் இந்தக் காரை ஸ்கோடா வெளியிடுமா? தற்போது வரை இந்தியாவில் இந்த ஃபிளாக்ஷிப் எலெக்ட்ரிக் காரை வெளியிடுவது குறித்து எந்தவொரு கருத்தையும் ஸ்கோடா தெரிவிக்கவில்லை. இந்த பீக் எலெக்ட்ரிக் எஸ்யூவியை, கோடியாக் எரிபொருள் காருக்கான எலெக்ட்ரிக் இணையாக எடுத்துக் கொள்ளலாம். கோடியாக் காரை இந்தியாவில் ஸ்கோடா விற்பனை செய்து வரும் நிலையில், இந்த பீக் எலெக்ட்ரிக் எஸ்யூவியை வெளியிடவும் வாய்ப்புகள் இருக்கின்றன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: உடனடியாக இந்தக் கார் இந்தியாவிற்கு வராது என்றே தெரிகிறது. இந்தியாவில் ஸ்கோடாவின் முதல் எலெக்ட்ரிக் காரின் வெளியீட்டிற்கே சில ஆண்டுகள் ஆகும். குஷாக் எஸ்யூவியின் அளவிலேயே புதிய எலெக்ட்ரிக் கார் ஒன்றை இந்திய வெளியீட்டிற்காக உருவாக்கி வருகிறது ஸ்கோடா. குஷாக்கின் எலெக்ட்ரிக் வடிவமாகக் கூட இருக்கலாம். உள்நாட்டிலேயே தயாரிக்கும் வகையில் திட்டமிட்டு வருகிறது. 2028ல் இந்தப் புதிய எலெக்ட்ரிக் காரின் வெளியீடு இந்தியாவில் எதிர்பார்க்கப்படுகிறது.

Article Published On: Friday, June 5, 2026, 8:25 [IST]
English summary
Skoda peaq electric suv design sketches revealed ahead of june 23 debut
மேலும்... #skoda #electric car
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out