650 கிமீ ரேஞ்சுடன்.. இன்னோவாவை விட பெரிய 7 சீட்டர் எலெக்ட்ரிக் கார் வெளியானது

ஸ்கோடா நிறுவனம் தங்களுடைய புதிய ஃபிளாக்ஷிப் எலெக்ட்ரிக் எஸ்யூவியான பீக் EV (Peaq EV)-யை அறிமுகப்படுத்தியிருக்கிறது. அடிப்படையில் இருந்தே ஒரு எலெக்ட்ரிக் காராக உருவாக்கப்பட்ட பீக் EV, 7 சீட்கள் லேஅவுட்டுடன், ஒப்பீட்டளவில் இன்னோவாவை சற்று பெரிய காராக சர்வதேச சந்தையில் அறிமுகமாகியிருக்கிறது. இந்த ஃபிளாக்ஷிப் எலெக்ட்ரிக் காரை இந்தியாவில் வெளியிட ஸ்கோடா திட்டங்கள் வைத்துள்ளது. பீக் EV-யின் சிறப்பம்சங்கள் மற்றும் அதன் இந்திய வெளியீட்டுத் திட்டங்கள் குறித்து இங்கே நாம் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

ஸ்கோடா பீக் EV: எலெக்ட்ரிக் மோட்டார், பேட்டரி மற்றும் ரேஞ்சு

60, 90 மற்றும் 90X என மூன்று வேரியன்ட்களாக பீக் EV-யை அறிமுகப்படுத்தியிருக்கிறது ஸ்கோடா. 60 வேரியன்ட் தான் அடிப்படையான ஒன்று. இந்த வேரியன்டில் 63 kWh பேட்டரி பேக்கும், 204 hp பவரை உற்பத்தி செய்யும் திறன் கொண்ட (ரியர் வீல் டிரைவ்) எலெக்ட்ரிக் மோட்டார் செட்டப்பும் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பவர்ட்ரெயினானது 459 கிமீ வரையிலான சான்றளிக்கப்பட்ட ரேஞ்சைக் கொண்டுள்ளது.

Skoda Peaq EV

இடைநிலை 90 வேரியன்டில், பெரிய 91 kWh பேட்டரி பேக் கொடுக்கப்பட்டிருக்கிறது. இத்துடன் 286 hp பவரை உற்பத்தி செய்யும் திறன் கொண்ட (ரியர் வீல் டிரைவ்) எலெக்ட்ரிக் மோட்டார் செட்டப்பையே இந்த வேரியன்டும் கொண்டுள்ளது. இந்த வேரியன்ட் தான் அதிகபட்சமாக 647 கிமீ வரையிலான ரேஞ்சைக் கொடுக்கும் திறனைக் கொண்டிருக்கிறது.

டாப் எண்டான 90X வேரியன்டிலும், 91 kWh பேட்டரி பேக் தான். ஆனால் இரண்டு எலெக்ட்ரிக் மோட்டார்களுடன் ஆல் வீல் டிரைவ் வசதியைக் கொண்டுள்ளது இந்த உயர்நிலை வேரியன்ட். இதன் எலெக்ட்ரிக் மோட்டார் செட்டப்பானது 299 hp பவரை உற்பத்தி செய்யும் திறனைக் கொண்டுள்ளது. இந்த மூன்று வேரியன்ட்களில் பவர்ஃபுல்லான ஒன்று இந்த 90X தான். மேலும் இந்த வேரியன்டானது 613 கிமீ வரையிலான சான்றளிக்கப்பட்ட ரேஞ்சையும் கொண்டிருக்கிறது.

Skoda Peaq EV Back

ஸ்கோடா பீக் EV: எலெக்ட்ரிக் மோட்டார் பெர்ஃபாமன்ஸ் மற்றும் சார்ஜிங் வேகம்

மேற்கூறிய மூன்று வேரியன்ட்களில் வேகமானது டாப் எண்டான 90X வேரியன்ட் தான். மணிக்கு 0-100 கிமீ வேகத்தை 6.7 நொடிகளில் எட்டும் திறனைக் கொண்டுள்ளது இந்த டாப் எண்டு வேரியன்ட். அதனைத் தொடர்ந்து 90 வேரியன்டானது 7.1 நொடிகளிலும், 60 வேரியன்டானது 8.6 நொடிகளிலும் மணிக்கு 0-100 கிமீ வேகத்தை எட்டும் திறனைக் கொண்டுள்ளன.

199 kW DC ஃபாஸ்ட் சார்ஜரைப் பயன்படுத்தி சார்ஜ் செய்வதன் மூலம், இந்தப் பீக் EV-யின் பெரிய 91 kWh பேட்டரி பேக்கை 10-80 சதவீதம் வரை 28 நிமிடங்களிலேயே சார்ஜ் செய்து விட முடியும் எனத் தெரிவித்துள்ளது ஸ்கோடா. அதேபோல் 63 kWh பேட்டரி பேக்கை, 10-80 சதவீதம் வரை, 160 kW DC ஃபாஸ்ட் சார்ஜர் மூலம் 27 நிமிடங்களில் சார்ஜ் செய்து விட முடியும் எனவும் தெரிவித்துள்ளது.

ஸ்கோடா பீக் EV: வெளிப்புற டிசைன் மற்றும் அளவுகள்

மேலே கூறியது போல டொயோட்டாவின் மிகவும் பிரபலமான இன்னோவா எம்பிவியை விட சற்று பெரிய காராகவே இருக்கிறது ஸ்கோடாவின் புதிய பீக் EV எலெக்ட்ரிக் எஸ்யூவி. உயரத்தைத் தவிர மற்ற அனைத்து வகைகளிலும் பெரிய கார் தான். எனவே இது சொகுசான, 7 பேருக்கு நல்ல இடவசதி கொண்ட காராக இருக்கும் என்பதில் சந்தேகமே படத்தேவையில்லை.

4,874 மிமீ நீளம், 1,867 மிமீ அகலம், 1,664 மிமீ உயரம் மற்றும் 2,965 மிமீ நீள வீல்பேஸைக் கொண்டுள்ளது புதிய ஸ்கோடா பீக் EV. 184 மிமீ கிரௌண்டு கிளியரன்ஸைக் கொண்டிருக்கும் இந்தக் கார், மூன்று வரிசை சீட்களும் பயன்பாட்டில் இருக்கும் போது 299 லிட்டர் வரையிலான பூட்ஸ்பேஸைக் கொண்டுள்ளது. கடைசி வரிசை இருக்கையை மட்டும் மடித்துவிட்டால் 935 லிட்டர் வரையிலான பூட்ஸ்பேஸை இந்தக் காரில் நாம் பெற முடியும்.

எஸ்யூவி தான் என்றாலும் கொஞ்சமே கொஞ்சம் எம்பிவி போன்ற உணர்வையும் ஏற்படுத்துகிறது இந்த பீக் EV-யின் வடிவமைப்பு. T வடிவ மேட்ரிக்ஸ் LED முகப்பு விளக்குகள், ஐப்ரோ போன்ற LED DRL-கள், பிளாங்க்டு ஆஃப் கிரில், ஏரோ ஆப்டிமைஸ்டு அலாய் வீல்கள் மற்றும் ஃபிளஷ் ஃபிட்டிங் டோர் ஹேண்டில்களுடன் மிகவும் மாடர்னான மற்றும் ப்ரீமியமான எலெக்ட்ரிக் காருக்கான லுக்கை தவறாமல் கொண்டிருக்கிறது ஸ்கோடாவின் இந்த பீக் EV எலெக்ட்ரிக் எஸ்யூவி.

ஸ்கோடா பீக் EV: உட்புற வடிவமைப்பு மற்றும் வசதிகள்

காரின் உட்புறம் டேஷ்போர்டில் இரண்டு ஸ்கிரீன்கள் நம்மை வரவேற்கின்றன. 13.6 இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் போர்ட்ரெயிட்டாக டேஷ்போர்டின் நடுவில் கொடுக்கப்பட்டுள்ளது. 10 இன்ச் டிஜிட்டல் டிரைவர்ஸ் டிஸ்பிளே, ஸ்டீயரிங் வீலுக்குப் பின்னால் கொடுக்கப்பட்டிருக்கிறது. இரண்டும் தனித் தனியாகவே இருக்கின்றன. இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மூலமாகவே காரின் பெரும்பான்மையான அம்சங்களை கட்டுப்படுத்தும் வகையிலேயே இந்த எலெக்ட்ரிக் எஸ்யூவியை ஸ்கோடா வடிவமைத்திருக்கிறது. எனினும் சில அம்சங்களுக்காக செண்டர் கண்சோலில் ஃபிசிக்கல் பட்டன்களையும் கொடுக்கப்பட்டுள்ளன.

இதனைத் தவிர இந்த 7 சீட்டர் எலெக்ட்ரிக் எஸ்யூவியில், 16 ஸ்பீக்கர்கள் கொண்ட சோனோஸ் சவுண்டு சிஸ்டம், டூயல் வயர்லெஸ் ஃபோன் சார்ஜர்கள், பனோரமிக் சன்ரூஃப், மூன்று வரிசை சீட்களுக்கும் USB சார்ஜிங் போர்ட்கள், AR அடிப்படையிலான ஹெட்ஸ்-அப் டிஸ்பிளே (கூடுதல் தேர்வாக) உள்ளிட்ட வசதிகளு்ம கொடுக்கப்பட்டுள்ளன.

டிஜிட்டல் கீ அம்சத்தைக் கொண்டிருக்கும் முதல் ஸ்கோடா காராகவும் அறிமுகமாகியிருக்கிறது இந்த பீக் EV. காரை லாக் அல்லது அன்லாக் செய்வதை ஸ்மார்ட்போன் அல்லது ஸ்மார்ட்வாட்ச் மூலமாகவே நம்மால் செய்ய முடியும் எனக் குறிப்பிட்டுள்ளது ஸ்கோடா. இதனைத் தவிர சில சொகுசு அம்சங்களை இந்தக் காருடன் கூடுதல் தேர்வாகவும் ஸ்கோடா வழங்குகிறது.

ப்ரீமியமான எலெக்ட்ரிக் எஸ்யூவி என்பதால் பாதுகாப்பிற்கும் குறைவில்லை. 10 ஏர்பேக்குகள், 360 டிகிரி கேமரா, மேம்பட்ட ADAS பாதுகாப்பு அம்சங்கள், ஆட்டோ பார்க் அசிஸ்ட் உள்ளிட்ட பாதுகாப்பு வசதிகளை ஸ்டாண்டர்டாகவே கொண்டிருக்கிறது இந்தக் எலெக்ட்ரிக் கார். வைப்பர்ஸுடன் கூடிய வாஷர்களையும் இந்தக் காரில் ஸ்கோடா கொடுத்துள்ளது.

ஸ்கோடா பீக் EV: விலை மற்றும் இந்திய வெளியீட்டுத் தகவல்கள்

UK-யில் இந்தக் காரை இந்திய மதிப்பிற்கு 64.95 லட்சம் ரூபாய் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் விற்பனை செய்யவுள்ளது ஸ்கோடா. கியா EV 9, ஹூண்டாய் அயானிக் 9 மற்றும் வால்வோ EX90 ஆகிய எலெக்ட்ரிக் கார்களுக்குப் போட்டியாக இந்த ஸ்கோடா பீக் EV விற்பனை செய்யப்படவுள்ளது.

இந்தியாவில் இந்த ப்ரீமியம் எலெக்ட்ரிக் எஸ்யூவியை வெளியிடுவது குறித்து பரிசீலனை செய்து வருவதாக ஸ்கோடா இந்தியாவின் பிராண்டு இயக்குநர் ஆசிஷ் குப்தா தெரிவித்துள்ளார். இதனை ஒரு ஹேலோ தயாரிப்பாக, ஸ்கோடாவின் பிராண்டு இமேஜை உயர்த்தும் ஒரு தயாரிப்பாக அந்நிறுவனம் வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

அந்த வகையில், முழுவதுமாக இறக்குமதி செய்யப்பட்டு, CBU வடிவிலேயே இந்த எலெக்ட்ரிக் கார் இந்தியாவில் வெளியிடப்பட வாய்ப்புகள் இருக்கிறது. அப்படி இருக்கும் பட்சத்தில் 1 கோடி ரூபாய்க்கும் மேலான விலையையே இந்த எலெக்ட்ரிக் எஸ்யூவி கொண்டிருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பீக் EV-க்கு போட்டியான கியா EV9, இந்தியாவில் 1.30 கோடி ரூபாய் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து:

இந்த எலெக்ட்ரிக் காரை இந்தியாவில் ஸ்கோடா வெளியிடும் வாய்ப்புகள் 50/50 தான். ஏனெனில் இந்தியாவில் ஸ்கோடாவின் பிராண்டு மதிப்பு குறைவாக இல்லை. அதன் குறைவான விற்பனைக்குக் காரணம், குறைவான எண்ணிக்கையிலான கார் மாடல்கள், பட்ஜெட் விலையில் இல்லாதது மற்றும் அதிக பராமரிப்புச் செலவு உள்ளிட்டவையே.

இன்னும் சொல்லப்போனால் ஜெர்மன் கார் என ஸ்கோடாவிற்கு இந்தியாவில் நல்ல மதிப்பே இருந்து வருகிறது. எனவே பிராண்டு இமேஜை உயர்த்த தனியாக புதிய காரை ஸ்கோடா இந்தியாவில் வெளியிட வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஸ்கோடா என்ன செய்கிறது என்பதனைப் பொறுத்திருந்து பார்க்கலாம்.

Article Published On: Wednesday, June 24, 2026, 6:15 [IST]
English summary
Skoda peaq ev electric suv debuted overseas may launch in india too
மேலும்... #skoda #electric car
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out