பண்டிகை சீசனுக்கு ரெடியான புதிய ஸ்கோடா ஸ்லாவியா காரின் உற்பத்தி தொடங்கியது
இந்தியாவில் பண்டிகை காலம் தொடங்கி உள்ள நிலையில், ஸ்கோடா ஆட்டோ ஃபோக்ஸ்வேகன் இந்தியா நிறுவனம் தனது பிரபல மிட் சைஸ் செடான் காரான புதிய ஸ்கோடா ஸ்லாவியா மாடலின் உற்பத்தியை முறைப்படி தொடங்கி உள்ளது. புனே அருகில் உள்ள சகன் தொழிற்சாலையில் இருந்து புதிய ஸ்லாவியா கார் வெற்றிகரமாக உற்பத்திப் பிரிவில் இருந்து வெளிவந்தது.
இந்திய மிட் சைஸ் செடான் சந்தையில் தனக்கென தனி வாடிக்கையாளர் பட்டாளத்தை வைத்துள்ள ஸ்லாவியா, இதுவரை சுமார் 80,000 யூனிட்டுகளுக்கு மேல் விற்பனையாகி உள்ளது. இந்த பிரிவில் 30 சதவீத பங்களிப்பை தன் வசம் கொண்டுள்ளது. தற்போது வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப வடிவமைப்பு, தொழில்நுட்பம் மற்றும் வசதிகளில் முக்கிய மாற்றங்களுடன் புதிய ஸ்லாவியா மேம்படுத்தப்பட்டு உள்ளது.

புதிய ஸ்லாவியா காரில் செய்யப்பட்டுள்ள மிகப்பெரிய மாற்றமாக 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன் வழங்கப்பட உள்ளது. இதன் 1.0 லிட்டர் டிஎஸ்ஐ (TSI) பெட்ரோல் எஞ்சினுடன் இணைந்து செயல்படக்கூடிய வகையில் புதிய 8-ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் வகை ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வு வழங்கப்பட்டுள்ளது.
நகர நெரிசல்களிலும், நெடுஞ்சாலை பயணங்களிலும் மிகவும் மென்மையான மற்றும் திறமையான ஓட்டுதல் அனுபவத்தை பெற விரும்புவோருக்கு இந்த புதிய கியர்பாக்ஸ் பயனுள்ளதாக இருக்கும். கூடுதல் எரிபொருள் சிக்கனத்தை பெறுவதற்கும் இந்த புதிய ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் உதவும்.
காரின் உள்புற வசதிகளை பொறுத்தவரை, இந்த பிரிவிலேயே முதன்முறையாக பின்பக்க இருக்கை பயணிகளுக்கான மசாஜ் வசதி (Rear Seat Massage) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நீண்ட தூர பயணங்களின் போது பின்பக்கத்தில் அமர்ந்து செல்லும் பயணிகளுக்கு இது சிறந்த சொகுசு அனுபவத்தை வழங்கும்.
அதேபோல், குறுகிய இடங்களில் காரை எளிதாக பார்க் செய்யவும், சுற்றிலும் உள்ள தடைகளை டிரைவர் திரையிலேயே தெளிவாகப் பார்க்கவும் ஏதுவாக 360 டிகிரி ஏரியா வியூ கேமரா வசதி வழங்கப்பட்டுள்ளது. மேலும், கூகுள் கிளவுட் (Google Cloud) தொழில்நுட்பத்தில் இயங்கும் ஏஐ அசிஸ்டெண்ட் கொண்ட புதிய தலைமுறை இன்போடெயின்மென்ட் சிஸ்டமும் இதில் சேர்க்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பை பொறுத்தவரை, குளோபல் என்சிஏபி (Global NCAP) மோதல் சோதனைகளில் ஏற்கனவே பெற்ற 5 ஸ்டார் தர பாதுகாப்பு சான்றிதழையும், உறுதியான கட்டமைப்பு கொண்ட பாதுகாப்பையும் புதிய மாடல் தொடர்ந்து தக்கவைத்துக் கொள்கிறது.
புதிய ஸ்கோடா ஸ்லாவியா கார் இதன் ரகத்தில் ஹோண்டா சிட்டி, ஹூண்டாய் வெர்னா கார்களையும், தனது பங்காளியாக உள்ள ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ் கார்களையும் சந்தையில் எதிர்கொள்ளும். போட்டியாளர்களைவிட ஸ்கோடா செடான் கார்களுக்கு இந்தியர்கள் மத்தியில் உள்ள தனி மவுசு இந்த ஸ்லாவியா காரின் ஃபேஸ்லிஃப்ட் மாடலுக்கும் தொடர்ந்து தக்க வைக்கும் வாய்ப்பு உள்ளது.
பண்டிகை காலத்தில் புதிய கார் வாங்க திட்டமிடும் வாடிக்கையாளர்களுக்கு ஏற்ற தருணத்தில் இந்த உற்பத்தியை ஸ்கோடா நிறுவனம் தொடங்கியுள்ளது. மிக விரைவில் இந்த காரின் விலை மற்றும் டெலிவிரி துவங்குவது பற்றிய அறிவிப்பை ஸ்கோடா ஆட்டோ வெளியிடும் என்று தெரிகிறது. சிறிய அளவிலான டிசைன் மாற்றங்கள், சொகுசு வசதிகள் மற்றும் நவீன தொழில்நுட்பங்களுடன் உருவாகியுள்ள புதிய ஸ்கோடா ஸ்லாவியா மிட்சைஸ் செடான் காரை வாங்க விரும்புவோருக்கு மதிப்பு வாய்ந்த தேர்வாக இருக்கும் என்று நம்பலாம்.


Click it and Unblock the Notifications


