ஆகஸ்ட் 18-ல் அறிமுகமாகும் ஸ்கோடா ஸ்லாவியா ஃபேஸ்லிஃப்ட்... புதிய 8-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் வருகிறதா?
எஸ்யூவி மாடல்களின் வருகையால் செடான் கார்களின் விற்பனை இந்தியாவில் சற்று மந்தமான நிலையில் இருந்தாலும், இந்த பிரிவில் ஸ்கோடா ஸ்லாவியா கார் மிகச் சிறந்த தேர்வாக இருந்து வருகிறது. இந்த நிலையில், வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில், வடிவமைப்பில் சில மாறுதல்கள் மற்றும் கூடுதல் சிறப்பம்சங்களுடன் கூடிய புதிய ஸ்லாவியா ஃபேஸ்லிஃப்ட் மாடலை வரும் ஆகஸ்ட் 18ந் தேதி இந்தியாவில் அறிமுகப்படுத்த உள்ளதாக ஸ்கோடா நிறுவனம் உறுதி செய்துள்ளது.
புதிய ஸ்லாவியாவில் வெளிப்புற தோற்றம் முதல் கேபின் வசதிகள் மற்றும் மெக்கானிக்கல் அப்டேட் வரை பல மாற்றங்கள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சினுடன் புதிய 8-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் வழங்கப்படலாம் என்ற தகவல் வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.

டிசைனில் சிறிய மாற்றங்கள்
ஸ்பை புகைப்படங்கள் மற்றும் இதுவரை வெளியாகியுள்ள தகவல்களின்படி, புதிய ஸ்லாவியாவில் புதிய முன்புற கிரில் அமைப்பு, புதிய LED ஹெட்லேம்ப், புதிய டிசைனிலான டெயில் லேம்ப், புதிய பம்பர்கள் மற்றும் புதிய அலாய் வீல்கள் இடம்பெறும் என்று நம்பலாம். சமீபத்தில் அறிமுகமான குஷாக் ஃபேஸ்லிஃப்ட்டின் டிசைன் மொழியை இந்த செடானிலும் ஸ்கோடா பயன்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கேபினில் புதிய வசதிகள்
கேபினில் பெரிய அளவிலான டிசைன் மாற்றங்கள் இருக்காது. ஆனால், பெரிய 10.25 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், புதிய சீட் அப்ஹோல்ஸ்டரி, முன்புற பார்க்கிங் சென்சார்கள் உள்ளிட்ட வசதிகள் சேர்க்கப்படலாம். குஷாக் ஃபேஸ்லிஃப்ட்டில் வழங்கப்பட்ட சில பிரீமியம் அம்சங்களும் ஸ்லாவியாவுக்கு வர வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
மிகப்பெரிய அப்டேட்...
இந்த ஃபேஸ்லிஃப்ட்டின் முக்கிய அம்சமாக 1.0 லிட்டர் TSI டர்போ பெட்ரோல் எஞ்சினில் இருக்கும் தற்போதைய 6-ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸுக்கு பதிலாக புதிய 8-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் அறிமுகமாகும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் மூலம் மென்மையான கியர் மாற்றம், சிறந்த எரிபொருள் சிக்கனம் மற்றும் நெடுஞ்சாலை பயணத்தில் சிறந்த ஓட்டுதல் அனுபவம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரத்தில், மற்றொரு 1.5 லிட்டர் TSI பெட்ரோல் எஞ்சின் தொடர்ந்து 7-ஸ்பீடு DSG கியர்பாக்ஸுடன் விற்பனையாகும் வாய்ப்பு இருக்கிறது.
எஞ்சின் தேர்வுகளில் மாற்றமில்லை
புதிய ஸ்லாவியா ஃபேஸ்லிஃப்ட்டில் தற்போதைய 115 எச்பி பவரை அதிகபட்சமாக வழங்கும் 1.0 லிட்டர் TSI டர்போ பெட்ரோல் எஞ்சின் மற்றும் 150 எச்பி பவரை வழங்கும் 1.5 லிட்டர் TSI டர்போ பெட்ரோல் எஞ்சின் தேர்வுகள் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், செயல்திறன் மற்றும் ஓட்டும் அனுபவத்தில் ஸ்லாவியாவின் தனித்துவம் அப்படியே நீடிக்கும்.
போட்டியாளர்கள்
அறிமுகத்திற்கு பிறகு புதிய ஸ்கோடா ஸ்லாவியா ஃபேஸ்லிஃப்ட், வோக்ஸ்வேகன் விர்ட்டஸ், ஹூண்டாய் வெர்னா மற்றும் ஹோண்டா சிட்டி ஆகிய மிட்சைஸ் செடான் கார்களுக்கு நேரடி போட்டியாக இருக்கும். புதிய டிசைன், கூடுதல் வசதிகள் மற்றும் 8-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் போன்ற அப்டேட்கள், இந்த பிரிவில் ஸ்லாவியாவுக்கு விற்பனையில் வலுவான எண்ணிக்கையை அதிகரிக்க உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து
ஸ்கோடா ஸ்லாவியா ஃபேஸ்லிஃப்ட்டில் டிசைனில் புதுப்பொலிவு கொடுக்கப்பட்டு வருவதுடன், 1.0 TSI எஞ்சினுக்கு புதிய 8-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொடுக்க இருப்பது மிகப்பெரிய விஷயமாக பார்க்கப்படுகிறது. இது உண்மையாக இருந்தால், நகரப் பயன்பாடு மற்றும் நீண்ட தூர பயணங்களில் இந்த கார் மிகச் சிறப்பான அனுபவத்தை வழங்கும். ஏற்கனவே சிறந்த ஓட்டுதல் அனுபவத்துக்காக பெயர் பெற்ற ஸ்லாவியா, இந்த அப்டேட்களுடன் ஹூண்டாய் வெர்னா, ஹோண்டா சிட்டி, வோக்ஸ்வேகன் விர்ட்டஸ் ஆகிய மாடல்களுக்கு மீண்டும் கடுமையான போட்டியை கொடுக்கும் வாய்ப்பு அதிகமாக உள்ளது.


Click it and Unblock the Notifications