மலிவு விலையில் ப்ரீமியமான எலெக்ட்ரிக் காரை வெளியிட்ட நிறுவனம்.. இனி எல்லாரும் இந்தக் காரை தான் வாங்க போறாங்க
சர்வதேச அளவில் முற்றிலும் புதிய எபிக் (Epiq) என்ற எலெக்ட்ரிக் எஸ்யூவி காரை அறிமுகப்படுத்தியிருக்கிறது ஸ்கோடா (Skoda). சில ஆண்டுகளுக்கு முன்பு கான்செப்ட் வடிவில் இந்தக் கார் காட்சிப்படுத்தப்பட்டது. தற்போது அதன் தயாரிப்பு நிலை வடிவத்தை அதிகாரப்பூர்வமாக ஸ்கோடா அறிமுகப்படுத்தியிருக்கிறது. அந்நிறுவனத்தின் மிகவும் காம்பேக்டான மற்றும் குறைவான விலை கொண்ட எலெக்ட்ரிக் காராக உலகமெங்கும் எபிக் எஸ்யூவி விற்பனை செய்யப்படவுள்ளது.
பார்த்தவுடன் இதுவொரு ஸ்கோடா கார் என்று சொல்லும் வகையில் மாடர்ன் சாலிட் டிசைன் லாங்குவேஜைக் கொண்டுள்ளது புதிய ஸ்கோடா எபிக். அதேபோல் பார்த்தவுடன் இதுவொரு எலெக்ட்ரிக் கார் என்றும் சொல்லும் வகையில் மிகவும் மினிமலிஸ்டிக்கான டிசைன் லாங்குவேஜையும் இந்தக் கார் கொண்டிருக்கவில்லை. ஒரு எரிபொருள் கார் போலத் தான் தோற்றமளிக்கிறது. பின்பக்கம் எக்சாஸ்ட் பைப் இல்லாததை வைத்து வேண்டுமானால் இதனை எலெக்ட்ரிக் கார் என்று கூற முடியும்.

4,171 மிமீ நீளம், 1,798 மிமீ அகலம் மற்றும் 1,581 மிமீ உயரத்துடன் நகரப் பயன்பாட்டிற்கு போதுமான இடவசதியுடன் இந்தக் காரை ஸ்கோடா வடிவமைத்திருக்கிறது. ஐரோப்பிய நகர வாடிக்கையாளர்களை மையப்படுத்தியே இந்த எலெக்ட்ரிக் காரை ஸ்கோடா உருவாக்கியிருப்பது குறிப்பிடத்தக்கது. முகப்பில் ஸ்லீக்கான முகப்பு விளக்குகள் அதற்கு மேலே கோடு போல DRL-கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. பின்பக்கமும் விளக்குகள் மிகவும் ஸ்லீக்காகவே கொடுக்கப்பட்டிருக்கிறது. இது இந்தக் காருக்கு ஸ்டைலான லுக்கைக் கொடுக்கிறது.
முன்பக்கமும் சரி பின்பக்கமும் சரி பம்பர் தான் பெரிதாகவும் முரட்டுத்தனமான தோற்றத்தைக் கொடுக்கும் வகையிலும் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இது தான் இந்தக் எபிக் எஸ்யூவிக்கு எலெக்ட்ரிக் கார் போலான தோற்றத்தையும் மறுக்கிறது. காரைச் சுற்றி சங்கியான பாடி கிளாடிங் கொடுக்கப்பட்டிருக்கிறது. இவையே இந்த எலெக்ட்ரிக் காருக்கு முறையான ஒரு எஸ்யூவி லுக்கைக் கொடுக்கின்றன.

உட்புறம் 13 இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 5 இன்ச் டிரைவர்ஸ் டிஸ்பிளே, பனோரமிக் சன்ரூஃப், டூயல் ஸோன் கிளைமேட் கண்ட்ரோல், வயர்லெஸ் சார்ஜிங் பேடு, 10 ஸ்பீக்கர்கள் கொண்ட கான்டன் சவுண்டு சிஸ்டம், ADAS பாதுகாப்பு அம்சங்கள், 7 ஏர்பேக்குகள், 360 டிகிரி கேமரா, V2L, V2V ஆகிய வசதிகளை இந்த எலெக்ட்ரிக் கார் கொண்டிருக்கிறது. லக்கேஜ் வைப்பதற்காக 475 லிட்டர் பூட் ஸ்பேஸும், 25 லிட்டர் ஃப்ரங்கும் உள்ளது.
இந்த எலெக்ட்ரிக் எஸ்யூவியில் 38.5 kWh மற்றும் 55 kWh என இரண்டு பேட்டரி பேக் தேர்வுகளைக் கொடுத்துள்ளது ஸ்கோடா. 35, 40 மற்றும் 55 என மூன்று வேரியன்ட்களாக வெளியிடப்பட்டிருக்கும் நிலையில், 35 மற்றும் 40 ஆகிய இரண்டு வேரியனட்களிலும் சிறிய பேட்டரி பேக் தேர்வே கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பேட்டரி பேக்குடன் இரண்டு வேரியன்ட்களும் 116 hp பவர் மற்றும் 135 hp பவரை உற்பத்தி செய்யும் திறன் கொண்ட எலெக்ட்ரிக் மோட்டார் செட்டப்புகளைப் பெற்றிருக்கின்றன.
இரண்டிலும் டார்க் அளவு 267 Nm தான். டாப் எண்டான 55 வேரியன்டில் பெரிய பேட்டரி பேக் கொடுக்கப்பட்டிருககிறது. இதில் 211 hp பவர் மற்றும் 290 Nm டார்க்கை உற்பத்தி செய்யும் திறன் கொண்ட எலெக்ட்ரிக் மோட்டார் செட்டப் கொடுக்கப்பட்டுள்ளது. சிறிய பேட்டரி பேக்கானது 310 கிமீ வரையிலான சான்றளிக்கப்பட்ட ரேஞ்சையும், பெரிய பேட்டரி பேக்கானது 440 கிமீ வரையிலான சான்றளிக்கப்பட்ட ரேஞ்சையும் கொண்டுள்ளது.
இந்தியாவில் ஸ்கோடாவின் இந்த சிறிய காம்பேக்டான எலெக்ட்ரிக் கார் வெளியாகுமா என்று கேட்டால், இல்லை என்று தான் சொல்ல வேண்டும். முதலில் இந்த எபிக் எஸ்யூவியை ஸ்கோடா இந்தியாவில் வெளியிடலாம் எனத் தகவல் வெளியாகி வந்தன. பின்னர், இந்த எலெக்ட்ரிக் கார் இல்லை, இந்தியாவிற்கென தனியொரு எலெக்ட்ரிக் காரை ஸ்கோடா உருவாக்கி வருவதாக தற்போது கூறப்பட்டு வருகிறது.
இது 4.1 மீ நீளத்தைக் கொண்டிருக்கும் நிலையில் இந்தியாவிற்கு சற்று பெரிதாக 4.5 மீ நீளத்தில் புதிய எலெக்ட்ரிக் எஸ்யூவிய ஸ்கோடா உருவாக்கி வருகிறது. இந்தியாவில் தற்போது விற்பனையில் இருக்கும் பிரபலமான மிட்-சைஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவிக்களுக்குப் போட்டியாக ஸ்கோடாவின் இந்தப் புதிய எலெக்ட்ரிக் எஸ்யூவி வெளியாகும். ஸ்கோடா எபிக் இந்தியாவிற்கு இல்லை. ஆனால் வேறொகு தனித்துவமான எஸ்யூவியை 2027ல் ஸ்கோட இந்தியாவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்திய சந்தையை முன்பை விட இப்போது கொஞ்சம் நன்றாக ஸ்கோடா கணிக்க ஆரம்பித்திருக்கிறது. அதனால் தான் இந்திய வாடிக்கையாளர்கள் எப்படி சிந்திப்பார்கள் என யோசித்து ஒவ்வொரு தயாரிப்பையும் வெளியிடத் திட்டமிட்டு வருகிறது. எபிக் இந்தியாவிற்கு வேண்டாம் என அந்நிறுவனம் முடிவெடுத்ததிலும் சில காரணங்கள் இருக்கலாம். எது எப்படியோ அடுத்த ஆண்டு ஸ்கோடாவிமிருந்து புதிய எலெக்ட்ரிக் எஸ்யூவி ஒன்றை கண்டிப்பாக நாம் எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications