மலிவு விலை ADAS தொழில்நுட்பத்தை உருவாக்கும் சுஸுகி: அனைத்து மாருதி கார்களிலும் கொண்டுவர திட்டம்!
இந்தியாவில் கார்களின் பாதுகாப்பு அம்சங்களுக்கு முக்கியத்துவம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக அடாஸ் (ADAS) எனப்படும் ஓட்டுனர் உதவி பாதுகாப்பு தொழில்நுட்பம் அதிக விலை கொண்ட கார்களில் மட்டுமின்றி, நடுத்தர விலை கார்களிலும் இடம்பெறத் தொடங்கியுள்ளது. இந்த நிலையில், குறைந்த விலை கார்களிலும் இந்த பாதுகாப்பு அம்சங்களை வழங்கும் வகையில் புதிய தொழில்நுட்பத்தை சுஸுகி உருவாக்கி வருகிறது.
இந்திய சாலைகளில் கார்கள் மட்டுமின்றி இருசக்கர வாகனங்கள், ஆட்டோக்கள், பேருந்துகள், பாதசாரிகள் என பல்வேறு வகையான போக்குவரத்து ஒரே நேரத்தில் இயங்குகின்றன. இதனால், மற்ற நாடுகளுக்காக உருவாக்கப்பட்ட ஓட்டுனர் உதவி அமைப்பை அப்படியே இந்திய கார்களில் பயன்படுத்துவது சவாலாக இருக்கும் என சுஸுகி கருதுகிறது. இதற்காகவே இந்திய போக்குவரத்து சூழலுக்கு ஏற்ற வகையில் புதிய ஓட்டுனர் உதவி அமைப்பை நிறுவனம் உருவாக்குகிறது. இந்த புதிய பாதுகாப்பு தொழில்நுட்பத்தை மாருதி கார்களில் வழங்குவதற்கு திட்டமிட்டுள்ளது.

மலிவு விலை தொழில்நுட்பம்
பொதுவாக ஏடிஏஎஸ் அமைப்புகளில் கேமரா, ரேடார் உள்ளிட்ட பல்வேறு சென்சார்கள் பயன்படுத்தப்படுகின்றன. இவற்றின் எண்ணிக்கையும் தொழில்நுட்ப சிக்கலும் அதிகரிக்கும்போது காரின் விலையும் அதிகரிக்கும். எனவே, அதிக விலை கொண்ட ரேடார் உள்ளிட்டவற்றை தவிர்த்து, உயர்வகை கேமரா மற்றும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் மூலமாக சாலையில் உள்ள வாகனங்கள், பிற தடைகளை கண்டறிந்து பாதுகாப்பாக கார் செல்வதற்கான வாய்ப்பை இந்த மலிவு விலை அடாஸ் தொழில்நுட்பம் வழங்கும்.
மேலும், ஓட்டுனர் மற்றும் காரில் பயணிப்பவர்களை கண்காணிக்கும் தொழில்நுட்பத்தையும் ஓட்டுனர் உதவி அமைப்புடன் இணைக்க சுஸுகி திட்டமிட்டுள்ளது. இதன்மூலமாக புதிய வகையில் அடாஸ் பாதுகாப்பு அம்சம் செயல்படும்.

எந்த பாதுகாப்பு அம்சங்கள் முதலில் வரும்?
சுஸுகியின் தற்போதைய திட்டத்தில் விபத்தை தடுப்பதற்கு நேரடியாக உதவும் முக்கிய பாதுகாப்பு அம்சங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது. குறிப்பாக, மோதல்களை தவிர்க்க உதவும் தானியங்கி அவசர பிரேக்கிங் மற்றும் நெடுஞ்சாலைகளில் தடம் விலகுவதை தடுக்கும் தொழில்நுட்பம் ஆகியவற்றை பொதுவான பாதுகாப்பு அம்சங்களாக வழங்க நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
அதே நேரத்தில் தானியங்கி வேகக்கட்டுப்பாடு (Adaptive Cruise Control) போன்ற வசதிகள் உயர்நிலை வேரியண்ட்டுகளில் மட்டுமே இடம்பெற வாய்ப்புள்ளது. இதன் மூலம் தேவையான பாதுகாப்பு அம்சங்களை அதிகமான வாடிக்கையாளர்களுக்கு குறைந்த செலவில் கொண்டு செல்வதே சுஸுகியின் நோக்கமாக உள்ளது.
மாருதி கார்களில் எப்போது?
இந்தியாவில் மாருதி சுஸுகி நிறுவனத்தின் சில கார்களில் ஏற்கனவே ஏடிஏஎஸ் பாதுகாப்பு தொழில்நுட்பம் வழங்கப்படுகிறது. அடுத்தகட்டமாக குறைந்த விலை கார்களுக்கும் இந்த தொழில்நுட்பத்தை கொண்டு வர சுஸுகி திட்டமிட்டு வருகிறது. அடுத்த ஓரிரு ஆண்டுகளில் மலிவு விலை கார்களிலும் இந்த புதிய தொழில்நுட்பத்தை கொண்டு வருவதற்கு சுஸுகி திட்டமிட்டுள்ளது. ஆனால், அதிகாரப்பூர்வமான காலவரை குறித்த தற்போது இல்லை.
இந்த புதிய கட்டுப்பாட்டு அமைப்பு வழக்கமான முறையுடன் ஒப்பிடும்போது சுமார் 30 சதவீதம் குறைந்த செலவிலும், 15 சதவீதம் குறைந்த எடையிலும் இருக்கலாம் என சுஸுகி தெரிவித்துள்ளது. மேலும், அடாஸ் கொடுத்தாலும் காரின் விலையை சரியான விலையில் கொடுக்கவும் சுஸுகி திட்டமிட்டுள்ளது. அதாவது, மாருதியின் பட்ஜெட் கார்களில் அடாஸ் வழங்கப்பட்டாலும், விலையை ஓரளவு வாடிக்கையாளர்களுக்கு கட்டுப்படியாகும் விலையில் தொடர்ந்து வழங்கவும் திட்டமிட்டுள்ளது.

புரட்சிகரத் திட்டம்
சுஸுகி நிறுவனத்தின் இந்த புரட்சிகரத் திட்டம் மாருதி கார் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு அதிக மதிப்பையும், பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் உதவும். மலிவு விலை கார்களிலும் முக்கியமான விபத்து தடுப்பு தொழில்நுட்பங்களை கொண்டு வர சுஸுகி முயற்சிப்பது இந்திய கார் சந்தையில் முக்கியமான மாற்றத்தை ஏற்படுத்தும் வாய்ப்பும் உள்ளது.
ஆனால், இதனை அதிகாரப்பூர்வமாக கொண்டு வருவதற்கு இன்னும் ஓரிரு ஆண்டுகள் பிடிக்கும் என்று தெரிகிறது. இது இன்னமும் உருவாக்க நிலையிலேயே இருக்கிறது. இருப்பினும், விபத்தில் சிக்கும் வாய்ப்பை தவிர்ப்பதற்கு இந்த தொழில்நுட்பம் உதவும் என்பதால் மாருதி கார் பிரியர்கள் மத்தியில் ஆவலை ஏற்படுத்தி உள்ளது. மாருதி கொண்டு வந்தால், அதன் போட்டியாளர்களும் இதனை பின்பற்ற வேண்டி இருக்கும் என்பதால் ஒட்டுமொத்தமாக சாலை பாதுகாப்பை உறுதி செய்வதற்கு இது சீரிய முயற்சியாகவே பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications



