திடீரென வெளியான மாருதியின் புதிய எஸ்யூவி.. பக்காவான அம்சங்களுடன் வெளியாகியுள்ளது
மாருதி சுஸூகி நிறுவனமானது இந்தியாவைத் தவிர்த்து சர்வதேச அளவில் பல்வேறு நாடுகளிலும் கார்களை விற்பனை செய்து வருவது நமக்குத் தெரிந்த விஷயம் தான். இந்தியாவில் மாருதி விற்பனை செய்து வரும் முக்கியமான கார்களுள் ஒன்றாக ஜிம்னி (Jimny) இருந்து வருகிறது. இந்தியாவில் இதன் விற்பனை குறிப்பிடத்தக்க அளவில் இல்லையென்றாலும், சர்வதேச அளவில் நல்ல வரவேற்பைப் பெற்ற காராகவே ஜிம்னி இருக்கிறது.
இந்நிலையில், இந்த ஜிம்னியின் சிறப்பு எடிஷன் ஒன்றை சர்வதேச சந்தைகளில் வெளியிட்டு வருகிறது. ஜிம்னி ரைனோ எடிஷன் (Jimny Rhino Edition) என்ற பெயர் கொண்ட இந்த சிறப்பு எடிஷன் மாடலை சமீபமாக மலேசியாவில் சுஸூகி வெளியிட்டதைத் தொடர்ந்து, தற்போது ஆஸ்திரேலியாவிலும் வெளியிட்டுள்ளது. மலேசியாவின் 3 டோர் ஜிம்னியை அடிப்படையாகக் கொண்டு இந்த சிறப்பு எடிஷன் மாடல் வெளியிடப்பட்ட நிலையில், ஆஸ்திரேலியாவில் 5 டோர் ஜிம்னியை அடிப்படையாகக் கொண்டு இது வெளியாகியிருக்கிறது.

ஆஸ்திரேலியாவில் 3 டோர் ஜிம்னி மற்றும் 5 டோர் ஜிம்னி ஆகிய இரண்டு லைஃப்ஸ்டைல் எஸ்யூவி மாடல்களையும் சுஸூகி விற்பனை செய்து வருகிறது. இதனால் 5 டோர் ஜிம்னி மாடலானது ஜிம்னி XL (Jimny XL) என்ற பெயரில் அந்நாட்டில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த ஜிம்னி XL-ன் ரைனோ எடிஷனையே தற்போது வெளியிட்டுள்ளது சுஸூகி.
சிறப்பு எடிஷன் மாடல்கள் பெரும்பாலும் காஸ்மெடிக் அப்டேட்களுடன் மட்டும் வெளியாகும். அதற்கு இந்த ஜிம்னி XL ரைனோ எடிஷனும் விதிவிலக்கல்ல. உட்புறமும் வெளிப்புறமும் நிறைய காஸ்மெடிக் மேம்பாடுகளுடன், மற்றும் சில கூடுதல் அம்சங்களை இந்த சிறப்பு எடிஷன் மாடல் கொண்டுள்ளது. பெர்ஃபாமன்ஸ் ரீதியாக மேம்படுத்தும் வகையில், மெக்கானிக்கலாக எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

காரின் முன்பக்கம் பம்பருக்குக் கீழே குரோம் அண்டர் கார்னிஷ் கொடுக்கப்பட்டிருப்பது இந்த சிறப்பு எடிஷன் மாடலை தனித்துக் காட்டுகிறது. இதே போல குரோம் அம்சங்களை சைடு ஸ்கிர்ட்களிலும் சுஸூகி கொடுத்துள்ளது. இந்த சிறப்பு எடிஷனில் 15 இன்ச் டைமண்டு கட் அலாய் வீல்கள் கொடுக்கப்பட்டுள்ளன. கருப்பு நிற ரூஃபுடன் கூடிய கைனடிக் யெல்லோ என்ற ஒரேயொரு நிறத்தில் மட்டும் இதனை வெளியிட்டுள்ளது சுஸூகி.
ரைனோ என்ற பெயருக்கு நியாயம் சேர்க்கும் வகையில் டோர்களில் ரைனோசரஸ், அதாவது காண்டாமிருகத்தின் வடிவம் ஒன்றைக் கொடுத்திருக்கிறது மாருதி. இது பார்ப்பதற்கு நன்றாகவும் இருக்கிறது. கருப்பு மற்றும் சில்வர் நிற கிராஃபிக்ஸுடன் இந்த காண்டாமிருக வடிவம் கொடுக்கப்பட்டிருப்பது, அது நகர்வதைப் போலான தோற்றத்தை உணர்த்துவதைப் போல இருக்கிறது. இது ஒரு வகையில் காரின் ஆஃப்-ரோடிங் தன்மைக்கு ஏற்ப கொடுக்கப்பட்டிருப்பதாகவும் இருக்கிறது.
ஸ்டாண்டர்டு மாடலில் இருந்து வேறுபடுத்திக் காட்டும் வகையில் புதிய விதமான கிரில் டிசைனை இந்த ரைனோ எடிஷனில் கொடுத்துள்ளது சுஸூகி. இந்திய ஜிம்னி மாடலின் டிசைனையே ஆஸ்திரேலியாவின் ஸ்டாண்டர்டு ஜிம்னி XL மாடலும் கொண்டிருக்கும். புதிய சிறப்பு எடிஷன் மாடலில் வழக்கமான ஸ்லாட்கள் இல்லாமல், ஹெக்ஸ் வடிவில் சிம்பிளான கிரில்லே கொடுக்கப்பட்டுள்ளது.
ஸ்டாண்டர்டு மாடலில் கிரில் மேலே இருக்கும் ஸ்லாட் டிசைனை மட்டும் சுஸூகி நீக்கியிருப்பதாகத் தெரிகிறது. மேலும், கிரில் மேலே சுஸூகியின் லோகோ இல்லாமல் ஆங்கிலத்தில் SUZUKI என லெட்டரிங் கொடுக்கப்பட்டிருக்கிறது. இது ஒரு வகையில் ஃபிரஷ்ஷாகவும் இருக்கிறது. முகப்பு விளக்கு மற்றும் ஃபாக் விளக்குகளின் வடிவமைப்பில் எந்த மாற்றமும் இல்லை.
காரின் உட்புறமும் சீட்கள் முதல் டேஷ்போர்டு வரை ரைனோ பிராண்டிங் தொடர்கிறது. அதோடு ஏர் வென்ட்கள் முதல் கியர் நாப் வரை குரோம் ஹைலைட்களும் தொடர்கின்றன. கீழே ஜிம்னி பிராண்டிங் கொண்ட லெதர் ஃபுட்பேடுகள் கொடுக்கப்பட்டிருக்கும் நிலையில், கைனடிக் யெல்லோ நிறத்திலான ஃபுட்வெல் லைட்டிங்கையும் இந்தக் காரின் உள்ளே கொடுத்துள்ளது சுஸூகி. இதனை 8 நிறங்களில் கஸ்டமைஸ் செய்து கொள்ள முடியும். இவற்றுடன் ரைனோ கோ அக்சஸரீஸ் பேக்கேஜும் கொடுக்கப்படுகிறது.
மேலே கூறியது போல மெக்கானிக்கலாக ஜிம்னி XL ரைனோ எடிஷனில் எந்த மாற்றமும் இல்லை. அதே 1.5 லிட்டர், 4 சிலிண்டர், NA பெட்ரோல் இன்ஜின் தான். 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் 4 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளைக் கொண்டிருக்கும் இந்த இன்ஜினானது 101 hp பவர் மற்றும் 130 Nm டார்க்கை உற்பத்தி செய்யும் திறனைக் கொண்டுள்ளது. இத்துடன் ஆல்கிரிப் ப்ரோ 4 வீல் டிரைவ் சிஸ்டமும் இந்த சிறப்பு எடிஷனிலும் கொடுக்கப்பட்டுள்ளது.
ஜிம்னி XL ரைனோ எடிஷன் மாடலின் மேனுவல் கியர்பாக்ஸ் வேரியன்டை இந்திய மதிப்பிற்கு 29.80 லட்சம் ரூபாய் என்ற விலையிலும், ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் வேரியன்டை 31.79 லட்சம் ரூபாய் என்ற விலையிலும் வெளியிட்டுள்ளது சுஸூகி. இது அந்நாட்டில் ஸ்டாண்டர்டு ஜிம்னி XL மாடலை விட இந்திய மதிப்பிற்கு 6.62 லட்சம் ரூபாய் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவிலும் 5 டோர் ஜிம்னி மாடலைத் தான் மாருதி சுஸூகி விற்பனை செய்து வருகிறது. எனவே இந்த சிறப்பு எடிஷன் இந்தியாவிலும் வெளியிடப்பட வாய்ப்புகள் இருக்கிறது. ஆனால், மிகவும் குறைவான விற்பனை காரணமாக இதனை மாருதி ஸ்கிப் செய்தாலும் ஆச்சரியமில்லை. இந்தியாவில் ஸ்டாண்டர்டு ஜிம்னி மாடலானது 12.39 லட்சம் ரூபாய் முதல் 14.52 லட்சம் ரூபாய் வரையிலான எக்ஸ்-ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ரைனோ எடிஷன் வெளியாகும் பட்சத்தில் சற்று கூடுதல் விலையைக் கொண்டிருக்கும்.


Click it and Unblock the Notifications