மாருதியின் சிறிய கார்களுக்காக புதிய டர்போ பெட்ரோல் எஞ்சினை உருவாக்கும் சுஸுகி!
மாருதி கார் நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஜப்பானை சேர்ந்த சுஸுகி மோட்டார் கார்ப்பரேஷன் இந்தியா உள்ளிட்ட வளரும் நாடுகளுக்காக புதிய டர்போ பெட்ரோல் எஞ்சினை உருவாக்கி வருகிறது. இந்த புதிய பெட்ரோல் எஞ்சின் அதிக செயல்திறனையும் மேம்பட்ட எரிபொருள் சிக்கனத்தையும் ஒரே நேரத்தில் வழங்கும் வகையில் உருவாக்கப்படுகிறது.
டைரக்ட் இன்ஜெக்ஷன் எனப்படும் எஞ்சினுக்கு நேரடி எரிபொருள் செலுத்தும் புதிய தொழில்நுட்ப அமைப்பு மற்றும் டர்போசார்ஜர் தொழில்நுட்பத்தை இணைப்பதன் மூலம், சிறிய எஞ்சினாக இருந்தாலும் அதிக சக்தியை பெறுவதுடன், சிறப்பான எரிபொருள் சிக்கனத்தை பெறுவது இதன் முக்கிய நோக்கமாக பார்க்கப்படுகிறது.

ஆனால், இந்த புதிய எஞ்சின் குறித்து சுஸுகி இன்னும் முழுமையான தொழில்நுட்ப விவரங்களை வெளியிடவில்லை. இதன் எஞ்சின் திறன், சிலிண்டர் எண்ணிக்கை, அதிகபட்ச சக்தி, முறுக்கு திறன் போன்ற தகவல்கள் வெளியாகவில்லை. அதேபோல், இந்தியாவில் எந்த மாருதி சுஸுகி மாடலில் இது முதலில் அறிமுகமாகும் என்பதும் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படவில்லை.
மாருதி சுஸுகி ஏற்கனவே டர்போ பெட்ரோல் தொழில்நுட்பத்தை இந்தியாவில் பயன்படுத்தி வருகிறது. ஃப்ரான்க்ஸ் க்ராஸ்ஓவர் காரில் 1.0 லிட்டர் பூஸ்டர்ஜெட் என்ற டர்போ பெட்ரோல் எஞ்சின் தேர்வு வழங்கப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக அதிக செயல்திறன், குறைந்த எரிபொருள் செலவு மற்றும் எதிர்கால மாசு உமிழ்வு விதிமுறைகளை சமாளிக்கும் வகையில் புதிய தலைமுறை எஞ்சின் உருவாக்கப்படுகிறது.

இந்த புதிய தொழில்நுட்பத்தின்படி எஞ்சினின் வெப்ப செயல்திறனை அதிகரிப்பது முக்கிய நோக்கமாக இருக்கிறது. தற்போதைய பெட்ரோல் எஞ்சின்களில் சுமார் 40 சதவீத அளவில் இருக்கும் வெப்ப செயல்திறனை எதிர்காலத்தில் 50 சதவீதம் வரை உயர்த்த சுஸுகி நிறுவனம் முயற்சித்து வருகிறது. இதற்காக உராய்வு மற்றும் வெப்ப இழப்புகளை குறைப்பது உள்ளிட்ட பல்வேறு தொழில்நுட்பங்களில் கவனம் செலுத்தி புதிய டர்போ பெட்ரோல் எஞ்சின் உருவாக்கப்படுகிறது.
இந்திய சந்தையில் மின்சார வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வந்தாலும், பெட்ரோல், சிஎன்ஜி மற்றும் ஹைப்ரிட் வாகனங்களுக்கான தேவை இன்னும் முக்கியமானதாக உள்ளது. இதனால் ஒரே தொழில்நுட்பத்தை மட்டும் நம்பாமல், வெவ்வேறு வகையான எரிபொருளில் இயங்கும் எஞ்சின் அமைப்புகளை உருவாக்க சுஸுகி திட்டமிட்டு வருகிறது. சிறிய கார்களில் 48V ஸ்ட்ராங் ஹைப்ரிட் சிஸ்டத்தையும், பிளக் இன் ஹைப்ரிட் தொழில்நுட்பத்தை வழங்குவதற்கும் திட்டமிட்டு பணியாற்றி வருகிறது.

குறிப்பாக, அதிக சக்தியுடன் ஓட்டுநர் அனுபவத்தை மேம்படுத்த விரும்பும் வாடிக்கையாளர்களுக்கும், அதே நேரத்தில் எரிபொருள் செலவை கட்டுப்படுத்த விரும்புபவர்களுக்கும் புதிய டர்போ எஞ்சின் முக்கியமானதாக இருக்கும். அடுத்து குறைவான மாசு உமிழ்வு வெளியிடும் வகையிலும் அரசு விதிகளுக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும் என்பதிலும் கவனம் செலுத்தப்படுகிறது.
தற்போது வாடிக்கையாளர்கள் மின்சார வாகனங்களுக்கு மாறும் இந்த காலக்கட்டத்திலும் புதிய பெட்ரோல் எஞ்சின் உருவாக்கப் பணிகளில் சுஸுகி தீவிரமாக ஈடுபட்டுள்ளது. டர்போ பெட்ரோல், ஹைப்ரிட், மின்சாரம் உள்ளிட்ட பல்வேறு தொழில்நுட்பங்களை இணைத்து இந்திய வாடிக்கையாளர்களின் தேவைக்கு ஏற்ப அடுத்த தலைமுறை மாருதி கார்களை உருவாக்க சுஸுகி நிறுவனம் தயாராகி வருகிறது.
இந்த புதிய டர்போ பெட்ரோல் எஞ்சின் அறிமுகம் செய்யப்பட்டால், மாருதி செலிரியோ, வேகன் ஆர், ஸ்விஃப்ட் உள்ளிட்ட மாடல்களில் எதிர்பார்க்கலாம். இது நிச்சயமாக வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதத்தில் அமையும் என்று கருதப்படுகிறது.


Click it and Unblock the Notifications



