இந்தியாவில் புதிய 7 சீட்டர் காரை வெளியிடும் மாருதி சுஸூகி?
இந்தியாவில் மாருதி மூன்று எம்பிவி கார்களை விற்பனை செய்து வருகிறது. எர்டிகா, XL6 மற்றும் இன்விக்டோ ஆகியவை தான் அது. இன்விக்டோ நேரடியாக இன்னோவாவின் ரீபேட்ஜ் வெர்ஷன். எர்டிகா மற்றும் XL6 ஆகியவையே மாருதியின் சொந்த எஸ்யூவி மாடல்கள். இதில் எர்டிகா மட்டுமே 7 சீட்டர் கார். XL6 6 சீட்டர் எம்பிவி தான்.
இந்நிலையில் இந்த XL6 காரில் 7 சீட்களைக் கொண்டு 7 சீட்டராக மாற்றினால்? அது தான் XL7 எம்பிவியின் கான்செப்ட். 7 சீட்டர் இருக்கும் வகையில் XL7 என்ற பெயரில் இந்தக் கார் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஆனால் இந்தியாவில் இல்லை, வெளிநாடுகளில். சுஸூகி இந்த XL7 காரை விற்பனை செய்து வருகிறது. இந்நிலையில், இந்த XL7 காரை விரைவில் அந்நிறுவனம் அப்டேட் செய்து ஃபேஸ்லிப்ட் வெர்ஷனை வெளியிடவுள்ளது.

அந்த ஃபேஸ்லிப்ட் வெர்ஷனில் செய்யப்படவிருக்கும் மாற்றங்களை இந்தியாவில் விற்பனையில் இருக்கும் XL6 எம்பிவி காரிலும் நாம் எதிர்பார்க்கலாம். தற்போது முழுவதுமாக ரெடியாகியிருக்கும் XL7 ஃபேஸ்லிப்ட் காரின் புகைப்படங்கள் இணையத்தில் கசிந்துள்ளது. அதில் சுஸூகி என்னென்ன டிசைன் மாற்றங்களை செய்திருக்கிறது என்பதை நாம் பார்க்க முடிகிறது.
தற்போது விற்பனையில் இருக்கும் XL7 காரானது, இந்தியாவில் காணப்படும் XL6-ன் டிசைனை அப்படியே ஒற்றிருக்கும் நிலையில், புதிய XL7 காரின் முகப்புப் பக்கத்தை முற்றிலுமாக மாற்றியிருக்கிறது சுஸூகி. ஃபேஸ்லிப்ட் காரைப் பார்க்கும் போது புதிய காரைப் பார்க்கும் உணர்வு ஏற்படுகிறது. மேலும், இன்னோவாவிற்கு நேரடிப் போட்டியாக புதிய காரை சுஸூகி களமிறக்கியிருப்பதைப் போல இருக்கிறது. அதற்கு சில காரணங்களும் இருக்கிறது.

இன்னோவா கிரிஸ்டாவில் கிரில் மற்றும் முன்பக்க பம்பர் சேர்ந்திருப்பது போன்று இருக்கும். இந்த இரண்டிற்கும் இடையில் இருக்கும் பாடி பேனலை கருப்பு நிறத்தில் கொடுத்து, இரண்டும் ஒன்றாக இருப்பது போலான உணர்வை டொயோட்டா இன்னோவாவில் ஏற்படுத்தியிருக்கும். தற்போது அதேபோலான டிசைனை புதிய XL7 காரிலும் நாம் பார்க்க முடிகிறது.
புதிய காரில் கிரில் மற்றும் பம்பருக்கு புதிய டிசைனை மாருதி கொடுத்திருப்பதோடு, இரண்டுக்கும் இடையில் இருக்கும் பேனலை கருப்பு நிறத்தில் கொடுத்திருக்கிறது. இது இரண்டும் ஒரே யூனிட் போலான உணர்வை ஏற்படுத்துகிறது. தற்போதைய வேரியன்டில் இது இந்த இடைப்பட்ட பேனல் பாடியின் நிறத்திலேயே கொடுக்கப்பட்டு இரண்டையும் பிரித்துக் காட்டும். ஒரு வகையில் இது பார்ப்பதற்கு நன்றாக இருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும்.
மேலும், இது தற்போதைய XL7-ஐ விட புதிய காரை காரை கொஞ்சம் ரக்கடாக ஒன்றாகவும் காட்டுகிறது. இத்துடன் முன்பக்கம் ஃபாக் லேம்ப் ஹவுசிங்கையும் புதிதாகக் கொடுத்துள்ளது சுஸூகி. முகப்பு விளக்கில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. அதேபோல், பக்கவாட்டில் அலாய் வீல்கள் புதிய வடிவமைப்பில், அதேநேரம் புதிதாகக் கருப்பு நிறத்திலும் கொடுக்கப்பட்டுள்ளது. இதவும் இந்தக் காரை இன்னும் கொஞ்சம் ரக்கடான ஒன்றாகக் காட்ட உதவுகிறது. பின்பக்க வடிவமைப்பில் எந்த மாற்றமும் இல்லை.
காரின் உட்புறம் புதிய வசதிகளும் கொடுக்கப்பட்டிருக்கும் என்றே தெரிகிறது. இன்ஜினில் எந்த மாற்றமும் இல்லை. XL6 எம்பிவியில் பயன்படுத்தப்பட்டிருக்கும் அதே 1.5 லிட்டர், 4 சிலிண்டர், NA பெட்ரோல் இன்ஜின் தான் மைல்டு ஹைபிரிட் பவர்ட்ரெயினுடன் XL7 காரிலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. புதிய ஃபேஸ்லிப்ட் வெர்ஷனிலும் பவர்ட்ரெயினில் எந்த மாற்றமும் இருக்காது.
இந்திய XL6 மற்றும் XL7 ஆகிய இரண்டு கார்களுக்கு இடையில் இருக்கும் முக்கியமான வேறுபாடு, இரண்டாம் வரிசை இருக்கை தான். XL6 காரில் 6 சீட்களைக் கொடுக்கும் விதமாக இரண்டாம் வரிசையில் இரண்டு தனித்தனி கேப்டன் சீட்கள் கொடுக்கப்பட்டிருக்கம். XL7 காரில், இரண்டாம் வரிசையில் மூன்று பேர் அமரும் வகையில் பென்ச் சீட் கொடுக்கப்பட்டிருக்கும்.
இந்தியாவிலும் XL7-ஐப் போல 7 சீட்டர் வடிவத்தை மாருதி கொடுக்கலாம். ஆனால் எர்டிகா மற்றும் XL6 இடையேயான வாடிக்கையாளர்களைப் பிரித்து வைக்கும் வகையில் இந்த வேறுபாட்டை அந்நிறுவனம் மெயின்டெயின் செய்து வருகிறது. ஆனால் மேலே புதிய XL7 காரில் நாம் பார்த்த டிசைன் மேம்பாடுகள் இந்திய XL6 காருக்கும் கொண்டு வரப்பட நிறையவே வாய்ப்புகள் இருக்கின்றன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: XL6 காரை ப்ரீமியமான நெக்ஸா டீலர்ஷிப் நெட்வொர்க் மூலமாக விற்பனை செய்து வருகிறது மாருதி. 6 சீட்டர் கார்களை விரும்பும் வாடிக்கையாளர்களுக்காக பிரத்தியேகமாக இந்தக் காரை விற்பனை செய்து வருகிறது. மேலும் எர்டிகாவை விட சில லட்சங்கள் கூடுதலான விலையில் தான் இந்த XL6 கார் விற்பனை செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்து.


Click it and Unblock the Notifications