650 எலெக்ட்ரிக் பஸ்களுக்கு 'பல்க் ஆர்டர்'... சென்னை நிறுவனத்திற்கு அடித்த ஜாக்பாட்!!
சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் சுவிட்ச் மொபிலிட்டி நிறுவனம் 650 எலெக்ட்ரிக் பஸ்களை சப்ளை செய்வதற்கு பல்க் ஆர்டரை கைப்பற்றி உள்ளது. மும்பை மற்றும் புனே நகரங்களில் இயக்குவதற்காக 650 எலெக்ட்ரிக் பஸ்களை பயன்படுத்துவதற்காக சாய் க்ரீன் நிறுவனத்திற்கும், சுவிட்ச் மொபிலிட்டி நிறுவனத்திற்கும் இடையே ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
நாட்டின் பெருநகரங்களில் சுற்றுச்சூழல் மாசு கட்டுப்படுத்தும் விதமாக மின்சார பஸ்கள் அதிக அளவில் பயன்பாட்டிற்கு கொண்டு வரும் திட்டங்கள் தீவிரமாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதன்படி, மும்பை மற்றும் புனே நகரங்களில் பொது பயன்பாட்டிற்கான புதிய மின்சார பஸ்களை வாங்குவதற்கு PM E-Drive Phase II திட்டத்தின் கீழ் இந்த பஸ்களை சப்ளை செய்யும் ஆர்டரை சுவிட்ச் மொபிலிட்டி பெற்றுள்ளது.

இந்த திட்டத்தின் கீழ் சாய் க்ரீன்ஸ் நிறுவனம் மின்சார பஸ்களை இயக்கும் நிர்வாகத்தை மேற்கொள்ள உள்ளது. மேலும், இந்த திட்டத்தின்படி, 650 மின்சார பஸ்களை சப்ளை செய்வதற்கான மிகப்பெரிய ஆர்டரை சாய் க்ரீன்ஸ் நிறுவனத்திடம் இருந்து சுவிட்ச் மொபிலிட்டி நிறுவனம் பெற்றுள்ளது. இதற்கான ஒப்பந்தம் இரு நிறுவனங்களின் உயர் அதிகாரிகள் இடையே கையெழுத்தாகி உள்ளது.
மேலும், இந்த ஒப்பந்தத்தின்கீழ் குளிர்சாதன வசதி மற்றும் குளிர்சாதன வசதி இல்லாத சாதாரண வகை மின்சார பஸ்களை சுவிட்ச் மொபிலிட்டி டெலிவிரி கொடுக்க உள்ளது. இந்த பஸ்கள் 9 மீட்டர் நீளம் கொண்டதாக இருக்கும்.

இதுகுறித்து சுவிட்ச் மொபிலிட்டி நிறுவனத்தின் சிஇஓ கணேஷ் மணி கூறுகையில்,"காற்று மாசுபாட்டை குறைக்கும் திட்டத்தில் இந்த ஆர்டர் முக்கியத்துவம் வாய்ந்தது. மேலும், இந்த மின்சார பஸ்கள் மூலமாக இயக்குவதற்கான செலவீனம் வெகுவாக குறைவதுடன், போக்குவரத்தை நவீனமாக்கும் முயற்சிக்கும் சிறந்ததாக அமையும். இந்த மின்சார பஸ்கள் பயணிகளுக்கு சிறந்த அனுபவத்தை வழங்கும்," என்று தெரிவித்தார்.
அதேபோன்று, சாய் க்ரீன்ஸ் நிறுவனத்தின் சிஇஓ விகாஸ் குப்தா கூறுகையில்,"நாடுமுழுவதும் இருக்கும் போக்குவரத்து தேவைக்கு தக்கவாறு எங்களை நிலைநிறுத்தி வருகிறோம். மேலும், இந்த மின்சார பஸ்கள் தினசரி பயணிகளுக்கு மேம்பட்ட அனுபவத்தை தரும்," என்று குறிப்பிட்டுள்ளார்.
வர்த்தக ரீதியிலான மின்சார வாகனங்களை தயாரித்து வரும் சுவிட்ச் மொபிலிட்டி சென்னையை சேர்ந்த ஹிந்துஜா குழுமத்தின் அங்கமாக செயல்பட்டு வருகிறது. வர்த்தக பயன்பாட்டிற்கான சரக்கு மின்சார வாகனங்கள் மற்றும் மின்சார பஸ்கள் தயாரிப்பில் இந்த நிறுவனம் முன்னிலை வகிக்கிறது.


Click it and Unblock the Notifications