இனி நிற்க வேண்டாம்... நெமிலி டோல் கேட்டிலும் தடையில்லா சுங்கக் கட்டண முறை அறிமுகம்
தமிழக நெடுஞ்சாலைகளில் பயணம் செய்யும் வாகன ஓட்டிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி வெளியாகியுள்ளது. இதுவரை சுங்கச்சாவடிகளில் நீண்ட வரிசையில் காத்திருந்து கட்டணம் செலுத்த வேண்டிய நிலை இருந்து வந்தது. தற்போது இந்த நடைமுறையை மாற்றும் வகையில், தடுப்புகள் இல்லாமல் வாகனங்கள் தடையின்றி கடந்து செல்லும் புதிய தொழில்நுட்பம் தமிழகத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
தென்னிந்தியாவிலேயே முதல்முறையாக இந்த நவீன சுங்கக்கட்டண வசதி தமிழகத்தில் இரண்டு இடங்களில் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) அறிமுகப்படுத்தியுள்ள இந்தத் திட்டத்தால், சுங்கச்சாவடிகளில் வாகனங்களை நிறுத்த வேண்டிய அவசியம் இருக்காது. இதனால் பயண நேரமும் எரிபொருள் செலவும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பரனூர் சுங்கச்சாவடி
தமிழகத்தில் இந்தத் திட்டம் முதன்முதலில் செங்கல்பட்டு அருகேயுள்ள பரனூர் சுங்கச்சாவடியில் கடந்த அக்டோபர் 1ந் தேதி செயல்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது. தாம்பரம் - திண்டிவனம் இடையிலான 46.5 கிலோமீட்டர் தேசிய நெடுஞ்சாலை எண் 45ல் அமைந்துள்ள இந்தச் சுங்கச்சாவடியில், தற்போது வாகனங்கள் நிற்காமல் கடந்து செல்ல முடியும்.
இந்தத் திட்டத்தின் அடுத்தகட்டமாக, ஸ்ரீபெரும்புதூர் - காரைப்பேட்டை இடையிலான தேசிய நெடுஞ்சாலை 48ல் அமைந்துள்ள நெமிலி சுங்கச்சாவடியிலும் கடந்த 13ம் தேதி முதல் புதிய வசதி செயல்பாட்டுக்கு வந்துள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் இரண்டு சுங்கச்சாவடிகள் தடையற்ற கட்டண வசதிக்கு மாறியுள்ளன.
தொழில்நுட்ப வசதி
இந்தத் திட்டத்திற்கு மல்டி லேன் ஃப்ரீ ஃப்ளோ (Multi Lane Free Flow - MLFF) என்று பெயரில் குறிப்பிடப்படுகிறது. சுங்கச்சாவடிகளில் தடுப்புகள் அமைக்காமல், வாகனங்கள் செல்லும் பாதையின் மேலே பொருத்தப்பட்டுள்ள நவீன கேமராக்கள் மற்றும் சென்சார்கள் மூலம் வாகனங்கள் அடையாளம் காணப்படுகின்றன. இதன் அடிப்படையில் சுங்கக்கட்டணம் தானாக வசூலிக்கப்படுகிறது.
இதில் ஆட்டோமேட்டிக் நம்பர் பிளேட் ரெகக்னிஷன் (ANPR) கேமராக்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. இவை வாகனங்களின் பதிவு எண்களைப் படம் பிடித்து அடையாளம் காண்கின்றன. அதே நேரத்தில் ரேடியோ அலைவரிசை அடையாளத் தொழில்நுட்பம் (RFID) மூலம் வாகனத்தில் உள்ள ஃபாஸ்டேக் விபரங்களும் படிக்கப்படுகின்றன.
இவ்வாறு கேமராவில் பதிவாகும் வாகன எண் மற்றும் ஃபாஸ்டேக் தகவல்கள் ஒப்பிடப்பட்டு, சம்பந்தப்பட்ட வாகனத்திற்கான சுங்கக்கட்டணம் தானாக வசூலிக்கப்படுகிறது. இதற்காக வாகன ஓட்டிகள் தனியாக எந்தச் செயலையும் செய்ய வேண்டியதில்லை. வழக்கம்போல நெடுஞ்சாலையில் பயணித்தாலே போதுமானது.
கவனிக்க வேண்டிய விஷயம்
இந்த வசதி அறிமுகமானாலும், வாகன ஓட்டிகள் தங்களுடைய ஃபாஸ்டேக்கை முறையாகப் பராமரிப்பது அவசியம் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். ஃபாஸ்டேக் செயல்பாட்டில் இருக்க வேண்டும் என்பதுடன், அதில் போதுமான பண இருப்பும் வைத்திருக்க வேண்டும். காலாவதியான அல்லது செயல்படாத ஃபாஸ்டேக் இருந்தால் குறுஞ்செய்தி மூலமாக நோட்டீஸ் அனுப்பப்படும் என தேசிய நெடுஞ்சாலை ஆணையம் எச்சரித்துள்ளது.
கடந்த செப்டம்பர் மாதமே தமிழகத்தில் பரனூர், நெமிலி மற்றும் சென்னசமுத்திரம் ஆகிய மூன்று சுங்கச்சாவடிகளில் இந்த வசதியை அறிமுகப்படுத்த தேசிய நெடுஞ்சாலை ஆணையம் திட்டமிட்டிருந்தது. இதில் முதல் இரண்டு இடங்களில் பணிகள் முடிந்து செயல்பாட்டுக்கு வந்துள்ளன. வாலாஜா அருகேயுள்ள சென்னசமுத்திரம் சுங்கச்சாவடியில் தற்போது சோதனைப் பணிகள் நடைபெற்று வருகின்றன.


Click it and Unblock the Notifications


