தமிழகத்தில் இனி டிஜிட்டல் ஓட்டுனர் உரிமம், வாகன பதிவுச் சான்றிதழ்.. இன்று முதல் புதிய நடைமுறை!
தமிழகத்தில் வாகன ஓட்டிகள் மற்றும் புதிய வாகனம் வாங்குபவர்களுக்கு முக்கியமான நடைமுறை இன்று முதல் அமலுக்கு வருகிறது. ஓட்டுநர் உரிமம் (Driving Licence) மற்றும் வாகனப் பதிவுச் சான்றிதழ் (RC) ஆகியவற்றை டிஜிட்டல் முறையில் உடனடியாகப் பெறும் வசதியை தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
இதன் மூலம் டிரைவிங் டெஸ்டில் தேர்ச்சி பெற்றவர்கள் தங்களின் டிஜிட்டல் ஓட்டுநர் உரிமத்தை அதே நாளிலேயே பெற்றுக்கொள்ள முடியும். அதேபோல், புதிய வாகனத்தை பதிவு செய்த பிறகு அதன் டிஜிட்டல் RC-யையும் இணையம் வழியாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

காத்திருப்புக்கு முற்றுப்புள்ளி
இதுவரை ஓட்டுநர் உரிமம் மற்றும் RC ஆகியவை சிப் பொருத்தப்பட்ட ஸ்மார்ட் கார்டுகளாக அச்சிடப்பட்டு, அஞ்சல் மூலம் வாகன உரிமையாளர்களுக்கு அனுப்பப்பட்டு வந்தன. இதனால் ஆவணம் கைக்கு வந்து சேர சில நாட்கள் முதல் ஒரு மாதம் வரை கூட காத்திருக்க வேண்டிய நிலை இருந்தது.
புதிய டிஜிட்டல் முறையில் ஆவணங்களை எளிதாக டவுண்லோடு செய்து கொள்ளும் வாய்ப்பு வழங்கப்படுவதால், இனி கால தாமதம் தவிர்க்கப்படும். ஓட்டுநர் தேர்வில் வெற்றி பெற்ற நாளிலேயே டிஜிட்டல் முறையில் ஓட்டுனர் உரிமத்தை பதிவிறக்கம் செய்ய முடியும். புதிய வாகனத்தின் பதிவு நடைமுறை முடிந்ததும் டிஜிட்டல் வாகனத்திற்கான பதிவுச் சான்றையும் ஆன்லைனில் பெறலாம்.
QR Code மூலம் சரிபார்ப்பு
புதிய டிஜிட்டல் ஓட்டுநர் உரிமம் மற்றும் பதிவுச் சான்றிதழில் QR Code இடம்பெறும். போக்குவரத்து போலீசார், RTO அதிகாரிகள் உள்ளிட்ட அங்கீகரிக்கப்பட்ட அமைப்புகள் இந்த QR Code மூலமாக ஸ்கேன் செய்து ஆவணத்தின் உண்மைத் தன்மையை மின்னணு முறையில் சரிபார்க்க முடியும்.
இதன் மூலம் போலியான லைசென்ஸ் அல்லது RC போன்ற ஆவணங்களைப் பயன்படுத்துவதைத் தடுப்பதற்கும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில், மற்றொரு பெரிய வசதியாக ஓட்டுனர் உரிமம், வாகனப் பதிவு சான்று சேதமடைந்தாலும் அல்லது தொலைந்து போனாலும் மீண்டும் பதிவு இறக்கம் செய்து கொள்ள முடியும்.
சேதமடைந்தால் கவலை வேண்டாம்
தேவைப்படும் நேரத்தில் டிஜிட்டல் ஆவணத்தை மீண்டும் பதிவிறக்கம் செய்து அச்சிட்டு வைத்துக்கொள்ளும் வசதியும் இருக்கும். மேலும், e-Seva மையங்கள் மூலமாகவும் டிஜிட்டல் ஆவணங்களின் அச்சுப் பிரதியைப் பெறுவதற்கான வசதி வழங்கப்பட உள்ளது. தமிழகத்தில் நீண்ட காலமாக பயன்படுத்தப்பட்டு வரும் சிப் பொருத்தப்பட்ட ஸ்மார்ட் கார்டு முறைக்கு பதிலாக டிஜிட்டல் ஆவண முறையை அரசு முன்னெடுத்துள்ளது. இதன் மூலம் அச்சிடுதல், வினியோகம் உள்ளிட்ட செயல்முறைகளில் ஏற்படும் தாமதங்களைக் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதே நேரத்தில், டிஜிட்டல் ஆவணங்களே செல்லுபடியாகும் ஆவணங்களாக ஏற்றுக்கொள்ளப்படும் வகையில் இந்த நடைமுறை கொண்டுவரப்பட்டுள்ளது. இதனுடன் போக்குவரத்துத் துறை சேவைகளை மக்கள் தங்களுக்கு வசதியான RTO அலுவலகத்தில் பெறும் வகையிலான எந்த இடத்திலிருந்தும் விண்ணப்பித்து பெறும் (Anywhere Registration/Licensing) திட்டமும் படிப்படியாக செயல்படுத்தப்பட உள்ளது.
ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவு, பதிவு புதுப்பித்தல் உள்ளிட்ட பல்வேறு போக்குவரத்துத் துறை சேவைகளை எளிதாகப் பெறும் வகையில் இந்தத் திட்டம் விரிவுபடுத்தப்படும். இதன்மூலமாக தமிழகத்தில் லைசென்ஸ் மற்றும் RC வழங்கும் நடைமுறையை வேகமாகவும், எளிமையாகவும் மாற்றும் வகையில் இந்த திட்டம் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்படுகிறது.


Click it and Unblock the Notifications


