சென்னையில் 'மோட்டார் ஸ்போர்ட்ஸ் சிட்டி'... முதல்வர் விஜய் அறிவிப்பு... புதிய அத்யாயம் தொடங்குகிறது!!
தமிழ்நாட்டில் மோட்டார் ஸ்போர்ட்ஸை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் வகையில், புதிய மோட்டார் ஸ்போர்ட்ஸ் சிட்டி உருவாக்கப்படும் என்று முதலமைச்சர் விஜய் சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் அறிவித்துள்ளார். சென்னை நகரில் உலகத்தரம் வாய்ந்த விளையாட்டு கட்டமைப்புகளை உருவாக்கும் திட்டங்களின் ஒரு பகுதியாக இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்த மோட்டார் ஸ்போர்ட்ஸ் சிட்டியில் சர்வதேச தரத்திலான பந்தயத் தடம், நவீன உள்கட்டமைப்பு மற்றும் பயிற்சிக்கான விசேஷ அம்சங்களுடன் அமைக்கப்பட உள்ளன. குறிப்பாக ஃபார்முலா 1, ஃபார்முலா 2, ஃபார்முலா 3 மற்றும் ஃபார்முலா 4 உள்ளிட்ட சர்வதேச அளவிலான போட்டிகளை நடத்துவதற்கான வசதிகளுடன் இந்த நகரம் உருவாக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மோட்டார்ஸ்போர்ட்ஸில் ஆர்வம் கொண்ட இளம் வீரர்களின் திறமைகளை அடையாளம் கண்டு, அவர்களுக்கு முறையான பயிற்சி மற்றும் போட்டி வாய்ப்புகளை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன்மூலமாக தமிழகத்தை சேர்ந்த திறமையான வீரர்கள் தேசிய மற்றும் சர்வதேச அளவில் போட்டியிடும் வாய்ப்பை பெற முடியும்.
இந்த புதிய மோட்டார்ஸ் ஸ்போர்ட்ஸ் சிட்டியில் வெளிநாட்டு, உள்நாட்டு வீரர்கள் தங்குவதற்கான தரமான தங்கும் இடங்கள், மருத்துவ சிகிச்சை மையம், பயிற்சிக்கான அனைத்து கட்டமைப்புகளுடன் இந்த நகரம் அமைக்கப்பட உள்ளது.
மோட்டார் ஸ்போர்ட்ஸுக்கும் தமிழ்நாட்டுக்கும் நீண்ட வரலாறு
இந்திய மோட்டார் ஸ்போர்ட்ஸின் ஆரம்ப கால வரலாற்றுடன் சென்னை மிகவும் நெருக்கமாக தொடர்புடையது. கடந்த 1953ம் ஆண்டு Madras Motor Sports Club (MMSC) உருவானது. அதே ஆண்டில் சென்னையின் சோழவரம் விமானத்தளத்தில் முதல் முறையான மோட்டார் ஸ்போர்ட்ஸ் போட்டிகள் நடத்தப்பட்டன. கார்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் பங்கேற்ற இந்த போட்டிகள், இந்தியாவில் ஒழுங்கமைக்கப்பட்ட மோட்டார் பந்தயத்தின் வளர்ச்சிக்கு முக்கிய அடித்தளமாக அமைந்தன.
பின்னர் 1971ம் ஆண்டில் MMSC உள்ளிட்ட பல மோட்டார் ஸ்போர்ட்ஸ் அமைப்புகள் இணைந்து Federation of Motor Sports Clubs of India (FMSCI) அமைப்பை உருவாக்கின. இதன் தலைமையகம் சென்னையில் அமைந்தது. அதன்பிறகு 1990ம் ஆண்டு இருங்காட்டுக்கோட்டையில் இந்தியாவின் முதல் நிரந்தர பந்தயத் தடங்களில் ஒன்றான மெட்ராஸ் மோட்டார் பந்தய களம் உருவாக்கப்பட்டது. தற்போது இது மெட்ராஸ் இன்டர்நேஷனல் சர்க்யூட்(MIC) என அழைக்கப்படுகிறது. FIA மற்றும் FIM அங்கீகாரம் பெற்ற இந்த பந்தய களத்தில் தேசிய அளவிலான கார் மற்றும் பைக் பந்தயங்களுக்கு நீண்ட காலமாக நடந்து வருகிறது.
இதனால், மோட்டார் ஸ்போர்ட்ஸில் ஏற்கனவே வலுவான பாரம்பரியத்தைக் கொண்ட தமிழ்நாட்டில் புதிய மோட்டார் பந்தய விளையாட்டு நகரம் உருவாகும் அறிவிப்பு, மாநிலத்தின் பந்தய கலாச்சாரத்தை அடுத்த நிலைக்கு கொண்டு செல்லும் முக்கிய முயற்சியாக பார்க்கப்படுகிறது. இது போட்டிகளை நடத்துவதுடன், பயிற்சி, திறன் வளர்ப்பு, வேலைவாய்ப்பு, சுற்றுலா மற்றும் ஆட்டோமொபைல் துறையின் வளர்ச்சிக்கும் புதிய வாய்ப்புகளை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
This article has been updated with more information.


Click it and Unblock the Notifications

