தமிழ்நாடு முதல்வர் ஜோசப் விஜய் பயன்படுத்தும் சொகுசு கார்களும், தொடரும் வாகன ஆர்வமும்!!
தமிழ்நாடு முதல்வராக பொறுப்பேற்ற பிறகு ஜோசப் விஜய்யின் ஒவ்வொரு நடவடிக்கையும் அரசியல் வட்டாரத்தில் மட்டுமின்றி, கார் மற்றும் ஆட்டோமொபைல் ரசிகர்கள் மத்தியிலும் கவனம் பெற்று வருகிறது. திரைத்துறையில் முன்னணி நடிகராக இருந்தபோதே விலை உயர்ந்த கார்களைப் பயன்படுத்தி வந்த விஜய், தற்போது முதலமைச்சராகவும் பிரீமியம் மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்த வாகனங்களுடன் பயணம் செய்து வருகிறார்.
தற்போது லெக்சஸ் LM 350h (Lexus LM 350h) மற்றும் பிஎம்டபிள்யூ i7 (BMW i7) ஆகிய கார்களை முதல்வர் விஜய் பயன்படுத்தி வருகிறார். குறிப்பாக, லெக்சஸ் LM 350h என்ற எம்பிவி கார் மிகச் சிறந்த இடவசதியையும், பயண அனுபவத்தையும் அளிக்க வல்லது. குறிப்பாக, பின்பக்க பயணிகளுக்காக விமானத்தின் ஃபர்ஸ்ட் கிளாஸ் அனுபவத்தைப் போன்ற வசதிகளை வழங்கும் வகையில் இது உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த காரில் 2.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சினுடன் மின் மோட்டார் துணை கொண்ட ஹைப்ரிட் தொழில்நுட்பம், ஆல்-வீல் டிரைவ் மற்றும் பயணிகளின் வசதியை மையமாகக் கொண்ட சஸ்பென்ஷன் அமைப்பு ஆகியவை இதன் முக்கிய சிறப்பம்சங்களாக உள்ளன. இதன் 4-சீட்டர் மாடலில் கேப்டன் இருக்கைகள், மசாஜ் மற்றும் குளிரூட்டும் வசதி, 48 அங்குல அளவுடைய அல்ட்ரா வைடு டிஸ்ப்ளே, பிரீமியம் ஆடியோ சிஸ்டம் உள்ளிட்ட பல வசதிகளும் இடம்பெற்றுள்ளன. இதன் விலை ரூ.2.5 கோடி முதல் ரூ.2.7 கோடி வரை உள்ளது.
அடுத்து முதல்வர் விஜய் பயன்படுத்தும் பிஎம்டபிள்யூ i7 முழுமையான எலக்ட்ரிக் சொகுசு செடான் கார் மாடல் என்பது குறிப்பிடத்தக்கது. அதிக மின் ஆற்றலை சேமிக்கும் திறன் வாய்ந்த பேட்டரி பேக், நீண்ட தூர பயணத்தை வழங்கும் ரேஞ்ச்,வெளி சப்தம் குறைவான கேபின் மற்றும் நவீன பாதுகாப்பு தொழில்நுட்பங்கள் ஆகியவை இதன் முக்கிய அம்சங்களாக உள்ளன.

ஒருபுறம் முதல்வரின் பயணத்தில் பிரீமியம் கார்கள் பயன்படுத்தப்படும் நிலையில், மறுபுறம் சாதாரண பொதுமக்களுக்கும் சிறந்த பயண அனுபவம் கிடைக்க வேண்டும் என்பதில் அரசு கவனம் செலுத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தலைவர்கள் மட்டும் ஏசி வாகனங்களில் பயணிக்கக் கூடாது; தமிழக மக்களும் ஏசி பேருந்துகளில் பயணிக்க வேண்டும், என்ற நோக்கில் எதிர்காலத்தில் வாங்கப்படும் புதிய அரசுப் பேருந்துகள் அனைத்தும் ஏசி வசதியுடன் இருக்க வேண்டும் என்பது முதல்வர் விஜய்யின் விருப்பம் என போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் தெரிவித்துள்ளார்.
இதன் ஒரு பகுதியாக சென்னையில் புதிய ஏசி மின்சார பேருந்துகளின் சேவையும் தொடங்கப்பட்டுள்ளது. சமீபத்தில் 130 ஏசி பேருந்துகள் உட்பட 250 புதிய பேருந்துகளின் சேவையை முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார். இதில் தாழ்தள மின்சார பேருந்துகளும் இடம்பெற்றுள்ளன. தாழ்தள வடிவமைப்பு காரணமாக முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோர் எளிதாக ஏறி இறங்க முடியும்.

இதற்கிடையில், சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் புதிய கார்கள் வழங்கும் அறிவிப்பு மற்றொரு முக்கிய விவாதமாக மாறியுள்ளது. கடந்த 19ம் தேதி சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் வெளியிட்ட அறிவிப்பில், தமிழகத்தின் 234 எம்.எல்.ஏ.க்களுக்கும் தொகுதிகளுக்குச் சென்று மக்களைச் சந்திக்கவும், பொதுப்பணிகளை ஆய்வு செய்யவும் அரசு சார்பில் வாகனம் வழங்கப்படும் என முதல்வர் விஜய் அறிவித்தார்.
அத்தோடு கார் டிரைவர் சம்பளம், எரிபொருள் மற்றும் பராமரிப்பு செலவுகளுக்காக மாதம் ரூ.75,000 வரை வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அலுவலக உதவியாளருக்காக மேலும் ரூ.25,000 வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஒரு எம்.எல்.ஏ.வுக்கு மாதந்தோறும் மொத்தம் ரூ.1 லட்சம் வரையிலான கூடுதல் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
அறிவிப்பு வெளியான உடனே தலைமைச் செயலக வளாகத்தில் மஹிந்திரா நிறுவனத்தின் பல்வேறு எஸ்யூவி கார்கள் சோதனைக்காக அணிவகுத்து நிறுத்தப்பட்டதும் பரபரப்பை ஏற்படுத்தியது. மஹிந்திரா நிறுவனத்தின் XUV 7XO, XUV 3XO, ஸ்கார்பியோ-N, ஸ்கார்பியோ கிளாசிக், பொலிரோ மற்றும் பொலிரோ நியோ என ஆறு மாடல்கள் டெஸ்ட் டிரைவுக்காக கொண்டு வரப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. இந்த கார்களின் பாதுகாப்பு, வசதிகள், மைலேஜ், பராமரிப்பு செலவு மற்றும் நீண்ட தூரப் பயணத்திற்கான பொருத்தம் உள்ளிட்ட அம்சங்கள் பரிசீலிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.எனினும், திமுக உள்ளிட்ட சில எதிர்க
இதில் எந்த மாடல் இறுதியாக தேர்வு செய்யப்படும் என்பது இன்னும் முக்கிய எதிர்பார்ப்பாக உள்ளது. குறிப்பாக, எம்.எல்.ஏ.க்கள் நகர்ப்புற சாலைகளில் மட்டுமின்றி கிராமப்புறம் மற்றும் மோசமான சாலைகளிலும் தொடர்ந்து பயணம் செய்ய வேண்டியிருப்பதால், காரின் கிரவுண்ட் கிளியரன்ஸ், சஸ்பென்ஷன், பாதுகாப்பு, பராமரிப்பு செலவு மற்றும் பயண வசதி ஆகியவை முக்கியமான அளவுகோல்களாக இருக்கும்.
மொத்தத்தில், கார்கள் உள்ளிட்ட வாகனங்கள் மீதான முதல்வர் விஜய்யின் ஆர்வம் தொடர்ந்து வெளிப்பட்டு வருவதை இந்த நிகழ்வுகள் காட்டுகின்றன. தனிப்பட்ட மற்றும் அதிகாரப்பூர்வப் பயணங்களில் பிரீமியம் கார்களைப் பயன்படுத்துவது தொடங்கி, பொதுமக்களுக்கான ஏசி பேருந்துகள், எம்.எல்.ஏ.க்களுக்கான புதிய வாகனங்கள் என போக்குவரத்து தொடர்பான பல்வேறு நடவடிக்கைகளிலும் வாகனங்கள் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளன. இதனால், முதல்வர் விஜய்யின் அரசியல் நடவடிக்கைகளுடன் சேர்த்து அவரது கார் மற்றும் ஆட்டோமொபைல் ஆர்வமும் தொடர்ந்து பேசப்படும் விஷயமாகவே இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.


Click it and Unblock the Notifications


