எலெக்ட்ரிக் கார் வாங்குவதற்கு இதுவே சரியான தருணம்?... தமிழக அரசின் வரிச் சலுகையால் பல லட்சம் மிச்சமாகும்!!
பண்டிகை காலம் நெருங்கிவிட்டாலே புதிய கார் வாங்க வேண்டும் என்ற ஆர்வம் பல குடும்பங்களில் அதிகரிக்கும். குறிப்பாக E20 பெட்ரோல் மற்றும் எரிபொருள் விலை உயர்வு போன்ற காரணங்களால் பெட்ரோல், டீசல் கார்களுக்கு மாற்றாக எலெக்ட்ரிக் கார்களை வாங்குவது குறித்தும் பலரும் யோசித்து வருகின்றனர்.
அவ்வாறு இந்த பண்டிகை காலத்தில் புதிய எலெக்ட்ரிக் கார் வாங்க திட்டமிடுபவர்களுக்கு, தற்போது தமிழ்நாட்டில் இருக்கும் ஒரு முக்கியமான சலுகையை பயன்படுத்தி புதிய இவி கார் வாங்குவோர் பல லட்சங்களை மிச்சப்படுத்தும் வாய்ப்பு உள்ளது. பேட்டரி மூலம் இயங்கும் மின்சார வாகனங்களுக்கு தமிழக அரசு 100 சதவீத மோட்டார் வாகன வரி (Motor Vehicle Tax) விலக்கு வழங்குகிறது. அடுத்த ஆண்டு டிசம்பர் 31ம் தேதி வரை இந்த சிறப்புச் சலுகைத் திட்டம் அமலில் இருக்கும்.

பல லட்சங்கள் மிச்சமாகும்
இதன் மூலம் பெட்ரோல், டீசல் கார்களைப் போல அதிக அளவில் Motor Vehicle Tax செலுத்த வேண்டிய அவசியம் இல்லாததால், குறிப்பாக அதிக விலை கொண்ட எலெக்ட்ரிக் கார்களை வாங்கும்போது கணிசமான தொகையை சேமிக்க முடியும். தமிழ்நாட்டில் புதிய பெட்ரோல், டீசல் கார்களுக்கு அதன் விலையைப் பொறுத்து Motor Vehicle Tax விதிக்கப்படுகிறது.
தற்போதைய வரி விதிப்பு முறையின்படி, தனிநபர் பயன்பாட்டு கார்களுக்கு விலை அடிப்படையில் சுமார் 12 சதவீதம் முதல் 20 சதவீதம் வரை மோட்டார் வாகன வரி விதிக்கப்படுகிறது. ஆனால், தமிழக அரசின் தற்போதைய சலுகையின்படி எலெக்ட்ரிக் கார்களுக்கு இந்த மோட்டார் வாகன வரி 100 சதவீதம் விலக்கு கொடுக்கப்படுகிறது.
உதாரணமாக, ரூ.10 லட்சம் மதிப்புடைய பெட்ரோல், டீசல் கார்களுக்கு 18 சதவீத மோட்டார் வாகன வரி வைத்துக் கொண்டால், ரூ.1.8 லட்சம் வரி செலுத்த வேண்டும். ஆனால், இதே விலையில் இருக்கும் தகுதியான எலெக்ட்ரிக் காருக்கு இந்த தொகையை மிச்சப்படுத்த முடியும். அதாவது, காரின் வகை, விலைக்கு தக்கவாறு இந்த வரி வேறுபடும்.

GST வரி விளக்கம்
இதிலும் பல கார் வாங்குபவர்களுக்கு சந்தேகம் உள்ளது. எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மத்திய அரசின் 5சதவீதம் ஜிஎஸ்டி வரி விதிக்கிறது. எனவே, தனியாக 5 சதவீத ஜிஎஸ்டி சேர்க்க வேண்டியதில்லை. இதனால் ஒரு எலெக்ட்ரிக் காரின் எக்ஸ்ஷோரூம் விலையுடன், காப்பீட்டு, பதிவுக் கட்டணம் உள்ளிட்டவற்றை மட்டுமே செலுத்தினாலே போதுமானது. இதனால், பெட்ரோல், டீசல் கார்களை ஒப்பிடும்போது எலெக்ட்ரிக் கார்களுக்கு தற்போது பல லட்சம் சேமிக்கும் வாய்ப்பு இருக்கிறது.
டிசிஎஸ் வரி விளக்கம்
இங்கே மற்றொரு முக்கியமான செலவும் மனதில் வைக்க வேண்டியது அவசியம். ரூ.10 லட்சத்துக்கு மேல் விலையுடைய காரை வாங்கும்போது ஒரு சதவீதம் TCS (Tax Collected at Source) வரி வசூலிக்கப்படுகிறது. இந்த வரி உங்களது வருமான வரிக்கணக்கில் வரவு வைக்கப்படும். ITR தாக்கல் செய்யும்போது, நீங்கள் செலுத்த வேண்டிய ஆண்டுக்கான வருமான வரியில் இந்த தொகையை கழித்துவிட்டு மீதத் தொகையை செலுத்தலாம்.

உங்களுக்கு வருமான வரி இல்லை என்றால், இந்த தொகையை விதிகளுக்கு உட்பட்டு திரும்ப பெற முடியும். மேலும் TCS கணக்கிடும் போது மொத்த விற்பனை விலை என்பது முக்கியமானது. எக்ஸ்ஷோரூம் விலையை மட்டும் வைத்து ஒவ்வொரு காருக்கும் டிசிஎஸ் கணக்கிடுவது சரியான நடைமுறை அல்ல என்பதால், உங்களது ஆடிட்டர் அல்லது ஷோரூமில் உள்ள மூத்த விற்பனை பிரதிநிதிகளிடம் கேட்டு தெளிவுப்படுத்திக் கொள்வது அவசியம்.
இதர செலவுகள்
மோட்டார் வாகன வரி விலக்கு கிடைத்தாலும், எலெக்ட்ரிக் கார் வாங்கும்போது மற்ற செலவுகள் இருக்கும். புதிய காருக்கு கட்டாய மூன்றாம் நபர் காப்பீடு மற்றும் தனிநபர் விபத்து காப்பீடு ஆகியவை இடம்பெறும். இதற்குறிய பிரிமீயம் வாகனத்தின் IDV விலை மதிப்பை வைத்து கணக்கிடப்படும். மேலும், கூடுதல் சலுகைகளை சேர்க்கும்போதும் காப்பீட்டுத் தொகையில் மாறுபாடு இருக்கும். தவிரவும், வாகனப் பதிவுக் கட்டணம் மற்றும் இதர செலவுகளும் உண்டு.
பிரபல எலெக்ட்ரிக் கார்களின் தோராய ஆன்ரோடு விலை
1. டாடா பன்ச் எலெக்ட்ரிக்
டாடா பன்ச் எலெக்ட்ரிக் கார் ரூ.9.69 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை ரூ.10 லட்சத்துக்குக் கீழே இருப்பதால், அடிப்படை விலையை மட்டும் எடுத்துக்கொண்டால் 1% TCS பொருந்தாது. மேலும், தமிழகத்தில் எலெக்ட்ரிக் கார்களுக்கு மோட்டார் வாகன வரி 100 சதவீதம் விலக்கு கிடைப்பதால், பெட்ரோல் அல்லது டீசல் காரை விட ஆன்ரோடு விலை கணிசமாக குறையும். காப்பீடு, இதர செலவுகள் உட்பட இந்த கார் ரூ.10.50 லட்சத்தையொட்டிய விலையில் வாங்கும் வாய்ப்பு இருக்கிறது.
2. டாடா நெக்ஸான்
டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் கார் ரூ.12.49 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் கிடைக்கிறது. இதற்கு 1 சதவீதம் டிசிஎஸ் வரி கட்ட வேண்டி இருக்கும். காப்பீடு மற்றும் இதர செலவுகளை சேர்த்து ரூ.13 லட்சத்தையொட்டிய விலையில் இந்த காரை வாங்கும் வாய்ப்பு இருக்கிறது. இதுபோன்று, எம்ஜி விண்ட்சர், மஹிந்திரா எக்ஸ்இவி 9எஸ், டாடா ஹாரியர் உள்ளிட்ட பல பிரபலமான எலெக்ட்ரிக் கார்களை இந்த சலுகையை பயன்படுத்தி வாங்கும்போது அதிக அளவில் மிச்சப்படுத்தும் வாய்ப்பு உள்ளது.
தமிழக அரசு வரி விலக்கு இருப்பதை வைத்து புதிய எலெக்ட்ரிக் காரை வாங்குவது சிறந்த யோசனையாக இருந்தாலும், காரின் ரேஞ்ச், பேட்டரிக்கான வாரண்டி காலம், சார்ஜிங் கட்டமைப்பு வசதிகள், மாதாந்திர பயன்பாடு, கடன் திட்டத்தில் வாங்கும்போது அதற்குரிய வட்டி விகிதம், பேட்டரியை மாற்றும்போது ஆகும் செலவுகள் உள்ளிட்டவற்றையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
குறிப்பு: இங்கு பொதுவான தகவல்களின் அடிப்படையில் இந்த செய்தி வழங்கப்பட்டுள்ளது. நீங்கள் வாங்க விரும்பும் புதிய எலெக்ட்ரிக் காரின் ஷோரூமிற்கு சென்று அனைத்து விபரங்களையும் முழுமையாகவும், நேரடியாகவும் கேட்டு முடிவு செய்யவும்.


Click it and Unblock the Notifications


