செப்டம்பரில் தமிழ்நாட்டில் டாப் 10 கார் நிறுவனங்கள்: மாருதி முதலிடம்; 2வது இடத்தில் டாடா!
கடந்த மாதம் தமிழ்நாட்டில் எந்த கார் நிறுவனங்களுக்கு அதிக வரவேற்பு இருந்தது என்பது வாகனப் பதிவு தரவுகள் மூலம் தெரியவந்துள்ளது. மத்திய அரசின் வாகன் (Vahan) இணையதளத்தின் தரவுகளின்படி, செப்டம்பர் 1 முதல் 30ம் தேதி வரை தமிழ்நாட்டில் மொத்தம் 30,340 கார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் மாருதி சுஸுகி நிறுவனம் 9,629 பதிவுகளுடன் முதலிடத்தை பிடித்துள்ளது.
தமிழ்நாட்டின் மொத்தமாக நடந்த கார் பதிவுகளில் மாருதி சுஸுகியின் பங்களிப்பு 31.7 சதவீதமாக இருக்கிறது. அதாவது, செப்டம்பர் மாதத்தில் தமிழகத்தில் பதிவு செய்யப்பட்ட ஒவ்வொரு 100 கார்களில் சுமார் 32 கார்கள் மாருதி சுஸுகி நிறுவனத்தைச் சேர்ந்தவையாக இருந்தன. அடுத்தடுத்த இடங்களில் டாடா மோட்டார்ஸ் மற்றும் ஹூண்டாய் மோட்டார் நிறுவனங்கள் இருக்கின்றன.

1. மாருதி சுஸுகி
கடந்த செம்படம்பரில் தமிழகத்தில் மாருதி சுஸுகி 9,629 பதிவுகளுடன் முதலிடத்தில் உள்ளது. இதன் சந்தைப் பங்கு 31.7 சதவீதம். தமிழக கார் சந்தையில் மற்ற நிறுவனங்களை விட கணிசமான முன்னிலையில் மாருதி தொடர்ந்து ஆதிக்கம் செலுத்துகிறது. தேசிய அளவில் மட்டுமின்றி, தமிழ்நாட்டு சந்தையிலும் மாருதி மிக வலுவான நிலையில் உள்ளது.
2. டாடா கார்ஸ்
தமிழ்நாட்டு கார் சந்தையில் டாடா நிறுவனம் 4,288 பதிவுகளுடன் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. இது மொத்த பதிவுகளில் 14.1 சதவீதமாக இருந்தது. டாடாவின் பதிவுகளில் அதன் பெட்ரோல், டீசல் மற்றும் மின்சார கார் மாடல்களின் பதிவுகளும் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக, அதன் பன்ச் எஸ்யூவி கார் அதிக பங்களிப்பை வழங்கி வருகிறது.

3. ஹூண்டாய்
தமிழ்நாட்டில் ஹூண்டாய் 4,134 பதிவுகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது. இதன் சந்தைப் பங்கு 13.6 சதவீதமாகும். டாடாவை விட வெறும் 154 கார்கள் மட்டுமே குறைவாக பதிவு செய்யப்பட்டுள்ளதால், இரண்டாவது இடத்திற்கான போட்டி மிகவும் நெருக்கமாக உள்ளது. ஹூண்டாய் நிறுவனம் விரைவில் BAYON என்ற புதிய காம்பேக்ட் எஸ்யூவியை கொண்டு வர இருக்கிறது. இந்த புதிய எஸ்யூவி வந்தால் நிச்சயமாக விற்பனையில் மேலும் உயர்வு ஏற்படும் என் எதிர்பார்க்கப்படுகிறது.
4. மஹிந்திரா
எஸ்யூவி ஸ்பெஷலிஸ்ட்டான மஹிந்திரா நிறுவனம் கடந்த மாதம் தமிழ்நாட்டில் 3,437 பதிவுகளுடன் நான்காவது இடத்தில் உள்ளது. இதன் சந்தைப் பங்கு 11.3 சதவீதமாகும். எஸ்யூவி மாடல்களுக்கான தமிழக வாடிக்கையாளர்களின் ஆர்வம் மஹிந்திராவின் வலுவான பதிவுகளில் பிரதிபலிக்கிறது. புதிய எஸ்யூவி மாடல்கள் மட்டுமின்றி தார் எஸ்யூவியின் மின்சார மாடல் உள்ளிட்டவற்றை கொண்டு வந்து தனது சந்தையை வலுப்படுத்தும் முயற்சிகளில் தீரிவமாக உள்ளது.

5. டொயோட்டா
டொயோட்டா 2,825 பதிவுகளுடன் ஐந்தாவது இடத்தை பிடித்துள்ளது. இதன் சந்தைப் பங்கு 9.3 சதவீதமாகும். செப்டம்பர் மாதத்தில் கியா நிறுவனத்தை விட டொயோட்டா 609 கார்கள் அதிகமாக பதிவு செய்துள்ளது. விரைவில் க்ளான்ஸா காரின் ஃபேஸ்லிஃப்ட் மாடலை கொண்டு வர இருக்கிறது. இந்த புதிய மாடல் வந்தால் விற்பனையில் சற்று ஏற்றம் இருக்கும் என்று தெரிகிறது.
| Rank | Brand | Units | Market Share |
|---|---|---|---|
| 1 | Maruti Suzuki | 9,629 | 31.7% |
| 2 | Tata | 4,288 | 14.1% |
| 3 | Hyundai | 4,134 | 13.6% |
| 4 | Mahindra | 3,437 | 11.3% |
| 5 | Toyota | 2,825 | 9.3% |
| 6 | Kia | 2,216 | 7.3% |
| 7 | Skoda-Volkswagen | 815 | 2.7% |
| 8 | Renault | 729 | 2.4% |
| 9 | Honda | 625 | 2.1% |
| 10 | MG Motor | 479 | 1.6% |
6. கியா மோட்டார்
கியா மோட்டார் நிறுவனம் 2,216 பதிவுகளுடன் ஆறாவது இடத்தில் உள்ளது. இதன் சந்தைப் பங்கு 7.3 சதவீதமாகும். இந்தியாவில் எஸ்யூவி மற்றும் குடும்பப் பயன்பாட்டு கார்களுக்கான தேவை கியாவின் பதிவுகளுக்கு முக்கிய பங்களிப்பாக உள்ளது. குறிப்பாக, நடுத்தர வகை மார்க்கெட்டில் மிக வலுவான சந்தையை பெறுவதற்கான முயற்சியில் கியா தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. மேலும், ஹைப்ரிட், மின்சார வகை கார்களை தொடர்ந்து வரிசை கட்டவும் திட்டமிட்டுள்ளது.
7. ஸ்கோடா-ஃபோக்ஸ்வேகன்
ஸ்கோடா மற்றும் ஃபோக்ஸ்வேகன் நிறுவனங்களின் பதிவுகளை ஒன்றாகக் கணக்கிட்டால் தமிழ்நாட்டில் 815 கார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதன் சந்தைப் பங்கு சுமார் 2.7 சதவீதமாகும். இதன் மூலம் இந்தக் குழுமம் ஏழாவது இடத்தை பிடித்துள்ளது.
8. ரெனோ
ரெனோ நிறுவனம் 729 பதிவுகளுடன் எட்டாவது இடத்தில் உள்ளது. இதன் சந்தைப் பங்கு சுமார் 2.4 சதவீதமாக உள்ளது. இந்தியாவில் குறைந்த விலை எஸ்யூவி மற்றும் குடும்பக் கார்களுக்கான தேவையை மையமாகக் கொண்டு ரெனோ தொடர்ந்து சந்தையில் முக்கியத்துவம் பெறுவதற்கான முயற்சியில் ஈடுபட்டு உள்ளது. இந்நிறுவனத்தின் டஸ்ட்டர் ஹைப்ரிட் கார் வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. அந்த மாடல் வந்தால், சிறிய வளர்ச்சியை ரெனோ பெறும் என்று தெரிகிறது.

9. ஹோண்டா
ஹோண்டா நிறுவனம் 625 பதிவுகளுடன் ஒன்பதாவது இடத்தை பிடித்துள்ளது. இதன் சந்தைப் பங்கு சுமார் 2.1 சதவீதமாகும். அமேஸ் மற்றும் சிட்டி உள்ளிட்ட மாடல்கள் மூலம் ஹோண்டா தமிழக சந்தையில் தொடர்ந்து இடம்பிடித்து வருகிறது. நாளை எலிவேட் எஸ்யூவியின் ஃபேஸ்லிஃப்ட் மாடலை கொண்டு வர இருக்கிறது. இந்த புதிய மாடலுக்கு பண்டிகை காலத்தில் நல்ல புக்கிங் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. அப்போது இதன் விற்பனை பங்கு சற்று உயரலாம்.
10. எம்ஜி மோட்டார்
ஜேஎஸ்டபிள்யூ எம்ஜி மோட்டார் இந்தியா நிறுவனம் 479 பதிவுகளுடன் முதல் 10 இடங்களுக்குள் இடம்பெற்றுள்ளது. இதன் சந்தைப் பங்கு சுமார் 1.6 சதவீதமாகும். இதன் மூலம் செப்டம்பர் மாத தமிழ்நாடு கார் பதிவு தரவரிசையில் எம்ஜி 10வது இடத்தை பெற்றுள்ளது. தமிழகத்தில் தொடர்ந்து எம்ஜி கார்களுக்கு வரவேற்பு இருக்கிறது.
முதல் 10 நிறுவனங்களும் சேர்ந்து 29,177 மோட்டார் கார் பதிவுகளை பெற்றுள்ளன. இது தமிழ்நாட்டில் செப்டம்பர் மாதத்தில் பதிவான மொத்த 30,340 மோட்டார் கார்களில் சுமார் 96.2 சதவீதமாகும். மீதமுள்ள 1,163 பதிவுகள் மற்ற கார் நிறுவனங்களுடையதாக இருக்கின்றன.
குறிப்பு: செப்டம்பர் 1 முதல் 30, 2026 வரையிலான தமிழ்நாடு மோட்டார் கார் பதிவு விவரங்களை அடிப்படையாகக் கொண்ட வாகன் தரவுகளின் அடிப்படையில் இந்தப் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.
This article has been updated with breakup table.


Click it and Unblock the Notifications



