ரூ.6 லட்சத்தில் வரும் டாடாவின் புதிய செடான் கார்... செப். 25ல் அறிமுகம்!
பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள புதிய டாடா ஏரிஸ் செடான் காரின் அறிமுக தேதி அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. வரும் 25ந் தேதி இந்த புதிய கார் சந்தைக்கு வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது. அத்துடன், இந்த காருக்கான முதல் டீசரையும் டாடா கார்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. மாருதி டிசையர், ஹோண்டா அமேஸ், ஹூண்டாய் ஆரா கார்கள் உள்ள 4 மீட்டர் நீளத்திற்கும் குறைவான செடான் கார் பிரிவில் இந்த புதிய மாடல் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
புதிய டாடா ஏரிஸ் காருக்கான டீசரில் காரின் வெளிப்புற வடிவமைப்பில் சில முக்கிய அம்சங்களை பார்க்க முடிகிறது. குறிப்பாக முன்பகுதியில் டாடாவின் புதிய தலைமுறை வடிவமைப்பு தத்துவத்தின் தாக்கம் இருப்பது தெரிகிறது. இதனால், ஏற்கனவே விற்பனையில் உள்ள டாடா மாடல்களிலிருந்து புதிய செடான் சற்று வித்தியாசமான தோற்றத்தை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வடிவமைப்பை பொறுத்தவரை, புதிய காரில் மெல்லிய தோற்றத்திலான மிடுக்கான ஹெட்லைட்டுகள், புதுமையான முன்பக்க கிரில் அமைப்பு மற்றும் நவீன தோற்றம் கொண்ட பம்பர் இடம்பெறுவது டீசரில் தெரிகிறது. பின்புற வடிவமைப்பிலும் புதிய தலைமுறை டாடா கார்களின் வடிவமைப்பு பயன்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
உட்புறத்தை பொறுத்தவரை, தற்போதைய தலைமுறை டாடா கார்களில் இடம்பெறும் நவீன வசதிகளுக்கு ஏற்ப ஏரிஸ் காரிலும் பெரிய டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், ஸ்டீயரிங் மவுண்ட் சுவிட்ச் கண்ட்ரோல்கள் உள்ளிட்ட அம்சங்கள் இடம்பெற வாய்ப்புள்ளது. எனினும், முழுமையான வசதிகள் மற்றும் வேரியண்ட் வாரியான விபரங்கள் அறிமுகத்திற்கு பின்னர் தெரியவரும்.
எஞ்சின் மற்றும் கியர்பாக்ஸ் தேர்வுகளும் இந்த காரின் முக்கிய அம்சமாக இருக்கும். பெட்ரோல் எஞ்சின் மட்டுமின்றி, எதிர்காலத்தில் சிஎன்ஜி உள்ளிட்ட கூடுதல் எரிபொருள் தேர்வுகள் வழங்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளில் கிடைக்கும்.
டாடா டிகோர் காரில் எலெக்ட்ரிக் வெர்ஷனும் விற்பனையில் உள்ளது. அதேபோன்று, ஏரிஸ் காரின் எலெக்ட்ரிக் வெர்ஷனையும் டாடா கார்ஸ் நிறுவனம் விற்பனைக்கு கொண்டு வரும் வாய்ப்பு அதிகம் உள்ளது. ஆனால், இப்போதே அறிமுகம் செய்யப்படுமா அல்லது சற்று தாமதமாக இந்த எலெக்ட்ரிக் வெர்ஷன் விற்பனைக்கு கொண்டு வரப்படுமா என்பது விரைவில் தெரிய வரும்.
டாடா கார்கள் பாதுகாப்பு அம்சங்களில் சிறப்பாக இருக்கும் என்ற எண்ணம் மக்கள் மனதில் உள்ளது. அதை காவந்து செய்யும் விதத்தில், அதிக பாதுகாப்பு வசதிகளையும் இந்த காரில் டாடா வழங்கும் என்று நம்பலாம்.
ஏரிஸ் காரை போட்டியாளர்களுக்கு நெருக்கமான விலையில் நிலைநிறுத்த டாடா முயற்சி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரூ.6 லட்சத்தையொட்டிய ஆரம்ப விலையில் இந்த கார் வரும் என்று தெரிகிறது. குறிப்பாக டிசையர் மற்றும் அமேஸ் வாங்க திட்டமிடுபவர்களை கவரும் வகையில் விலை நிர்ணயம் செய்யப்பட்டால், இந்த புதிய செடானுக்கு நல்ல வரவேற்பு கிடைக்க வாய்ப்புள்ளது.
இதுவரை விற்பனையில் உள்ள டாடா டிகோர் காருக்கு மாற்றாக புதிய டாடா ஏரிஸ் கார் களமிறக்கப்பட உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும், புதிய மாடல் சற்று கூடுதல் பிரிமீயம் மாடலாக நிலைநிறுத்தப்படும் என்று தெரிகிறது. விலையும், பிரிமீயம் அம்சங்கள் மூலமாக வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்க்க டாடா கார்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.


Click it and Unblock the Notifications
