டாடா ஏரிஸ் கார் வாங்கும் போது எந்த வேரியண்ட்டை தேர்வு செய்வது? விலை, வசதிகள் முழு அலசல்!
அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்திய டாடா ஏரிஸ் செடான் கார் நேற்று விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. ஏற்கனவே விற்பனையில் இருந்த டிகோர் காருக்கு மாற்றாக வந்துள்ள ஏரிஸ் காரின் தோற்றம், உட்புற வடிவமைப்பு மற்றும் வசதிகளில் கணிசமான மாற்றங்களை பெற்றுள்ளது. இந்த கார் ரூ.5.29 லட்சம் என்ற சவாலான ஆரம்ப விலையில் இந்த மார்க்கெட்டில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில், டாடா ஏரிஸ் கார் 5 வேரியண்ட்டுகளில் விற்பனைக்கு வந்துள்ளது. இதன்படி ஸ்மார்ட் (Smart), பியூர் (Pure), பியூர் பிளஸ் (Pure+), கிரியேட்டிவ் (Creative), அக்கம்ப்ளிஷ்டு (Accomplished) என ஐந்து வேரியண்ட்டுகளில் கிடைக்கிறது. பெட்ரோல் மற்றும் ஐ-சிஎன்ஜி (iCNG) என இரண்டு எரிபொருள் தேர்வுகள் உள்ளன. வேரியண்ட்டுக்கு ஏற்ப மேனுவல் மற்றும் ஏஎம்டி (AMT) கியர்பாக்ஸ் தேர்வுகளும் கிடைக்கின்றன.

ஸ்மார்ட் வேரியண்ட்
விலை குறைவான ஸ்மார்ட் வேரியண்ட்டின் பெட்ரோல் எஞ்சின் கொண்ட மேனுவல் கியர்பாக்ஸ் மாடலுக்கு ரூ.5.29 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையும், சிஎன்ஜி எரிபொருள் தேர்வுடன் மேனுவல் கியர்பாக்ஸ் மாடலுக்கு ரூ.6.29 லட்சம் விலையும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஏஎம்டி கியர்பாக்ஸ் தேர்வு இதில் வழங்கப்படவில்லை.
இந்த வேரியண்ட்டில் ஃபேப்ரிக் இருக்கைகள், 12.7 செமீ அளவுடைய திரையுடன் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், ரியர் வியூ மிரரின் பின்புறத்தில் இண்டிகேட்டர்கள், பவர் விண்டோஸ், ஓட்டுனர் இருக்கையின் உயரத்தை கூட்டி குறைக்கும் வசதி, மேனுவல் ஏசி, டில்ட் அட்ஜெஸ்ட் ஸ்டீயரிங் வீல் ஆகியவை இடம்பெற்றுள்ளன.
மேலும், பின்புற பார்க்கிங் சென்சார்கள், ஆறு ஏர்பேக்குகள், ஐஎஸ்ஓஃபிக்ஸ் (ISOFIX) குழந்தை இருக்கை பொருத்துவதற்கான அமைப்பு, ஏபிஎஸ் பிரேக் சிஸ்டம், குறிப்பிட்ட வேகத்தில் கார் கதவுகள் தானாக பூட்டிக் கொள்ளும் வசதி, ரியர் ஹெட்ரெஸ்ட்டுகள் உள்ளிட்ட முக்கிய பாதுகாப்பு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

பியூர் வேரியண்ட்
அடுத்ததாக வரும் பியூர் வேரியண்ட்டில் கூடுதல் வசதிகளை எதிர்பார்க்கும் வாடிக்கையாளர்களுக்கான தேர்வாக உள்ளது. பெட்ரோல் எஞ்சினுடன் மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வுக்கு ரூ.6.14 லட்சமும், சிஎன்ஜி எரிபொருளுடன் மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வு ரூ.7.14 லட்சத்திலும் கிடைக்கிறது. இதிலிருந்துதான் பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி இரண்டிலும் ஏஎம்டி கியர்பாக்ஸ் தேர்வு கிடைக்கிறது.
பியூர் வேரியண்ட்டில் 20.32 செமீ ஃப்ளோட்டிங் திரையுடன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 4 ஸ்பீக்கர்கள், உயரத்தை மாற்றக்கூடிய ஓட்டுநர் இருக்கை, பவர் விண்டோஸ், எலெக்ட்ரிக் அட்ஜெஸ்ட் வசதியுடன் ரியர் வியூ மிரர்கள்), ஸ்டீயரிங் வீலில் கட்டுப்பாட்டு சுவிட்சுகள், பின்புற டீஃபாகர் உள்ளிட்ட அன்றாட பயன்பாட்டுக்கு தேவையான வசதிகள் சேர்க்கப்பட்டுள்ளன.
கப் ஹோல்டர்கள், பின் இருக்கைக்கு ஆர்ம் ரெஸ்ட், உயர்துல்லிய திரையுடன் கூடிய ரியர் வியூ கேமரா, 65W யுஎஸ்பி சார்ஜர், ஆன்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார் ப்ளே ஆகியவை உள்ளன. அடிப்படை மாடலைவிட வசதியான அனுபவத்தை வழங்குவதே இந்த வேரியண்ட்டின் முக்கிய நோக்கமாக உள்ளது.

பியர் ப்ளஸ் வேரியண்ட்
பியூர் பிளஸ் வேரியண்ட்டில் ஏரிஸின் தொழில்நுட்ப வசதிகள் மேலும் அதிகரிக்கின்றன. பெட்ரோல் எஞ்சினுடன் மேனுவல் கியர்பாக்ஸ் கொண்ட மாடலுக்கு ரூ.6.74 லட்சமும், சிஎன்ஜி மேனுவல் கியர்பாக்ஸ் கொண்ட மாடலுக்கு ரூ.7.74 லட்சமும் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயர்லெஸ் ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ, பெரிய தொடுதிரையுடன் இன்ஃபோடெயின்மென்ட் அமைப்பு, பின்புற ஏசி வென்ட்டுகள் மற்றும் க்ரூஸ் கண்ட்ரோல் ஆகியவை இதில் கிடைக்கின்றன.
பாதுகாப்பு அம்சங்களிலும் பியூர் பிளஸ் கூடுதல் அம்சங்களை கொண்டுள்ளது. எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் (ESC), டிராக்ஷன் கண்ட்ரோல், டயர் காற்றழுத்த கண்காணிப்பு மற்றும் ஹில் ஹோல்டு அசிஸ்ட் போன்ற அம்சங்கள் இதில் சேர்க்கப்பட்டுள்ளன. பெட்ரோல் மாடலில் 15 அங்குல சக்கரங்களும், சிஎன்ஜி மாடலில் 14 அங்குல சக்கரங்களும் வழங்கப்படுகின்றன.

கிரியேட்டிவ் வேரியண்ட்
கிரியேட்டிவ் வேரியண்ட்டில் இருந்து ஏரிஸ் காரின் பிரீமியம் அம்சங்கள் தொடங்குகின்றன. பெட்ரோல் மேனுவல் மாடல் ரூ.7.49 லட்சமும், சிஎன்ஜி மேனுவல் மாடலுக்கு ரூ.8.49 லட்சமும் விலை நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. எல்இடி ஹெட்லைட்டுகள், எல்இடி பகல்நேர விளக்குகள், எல்இடி கனெக்டெட் டெயில் லைட்டுகள், 15 அங்குல டைமண்ட் கட் அலாய் வீல்கள், பெரிய தொடுதிரை, 360 டிகிரி கேமரா, பிளைண்ட் வியூ மானிட்டர், ஆ
ஆட்டோமேட்டிக் வைப்பர்கள், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல் உள்ளிட்ட பல வசதிகள் இதில் இடம்பெறுகின்றன.
அக்கம்ப்ளிஷ்டு வேரியண்ட்
மிக உயர்ந்த விலை கொண்ட அகாம்ப்ளிஷ்டு வேரியண்ட்டில்தான் அனைத்து முக்கிய வசதிகளையும் ஒரே தொகுப்பில் வழங்குகிறது. பெட்ரோல் மேனுவல் ரூ.8.19 லட்சத்திலும், சிஎன்ஜி மேனுவல் மாடல் ரூ.9.19 லட்சத்திலும் தொடங்குகிறது. வென்டிலேட்டட் செயற்கை கொண்ட முன்புற இருக்கைகள், வயர்லெஸ் சார்ஜிங், டேஷ்கேம், டாடாவின் ஐஆர்ஏ கனெக்டெட் கார் தொழில்நுட்பம் உள்ளிட்ட கூடுதல் தொழில்நுட்ப வசதிகள் இதில் உள்ளன.
டாடா டிகோர் காரில் பயன்படுத்தப்பட்ட அதே 1.2 லிட்டர் மூன்று சிலிண்டர் பெட்ரோல் எஞ்சின்தான் புதிய ஏரிஸ் காரிலும் தொடர்ந்து பயன்படுத்தப்படுகிறது. இந்த எஞ்சின் பெட்ரோல் மாடலில் 86 பிஎஸ் பவரையும், 113 என்எம் டார்க்கையும் வழங்குகிறது. சிஎன்ஜி எரிபொருளில் இயங்கும்போது அதிகபட்சமாக 75 பிஎஸ் மற்றும் 96 என்எம் டார்க்கையும் வழங்குகிறது. இரண்டு பதிப்புகளிலும் 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் ஏஎம்டி தேர்வுகள் உள்ளன.
யாருக்கு எது பெஸ்ட்?
இங்கே கொடுக்கப்பட்டு இருக்கும் எக்ஸ்ஷோரூம் விலையுடன் கிட்டத்தட்ட ரூ.1 லட்சம் கூடுதலாக கணக்கிட்டால் ஆன்ரோடு விலை கிடைக்கும். இதில், உங்களால் 30 சதவீதம் டவுண்பேமண்ட் கட்டுவதற்கு எந்த வேரியண்ட் சரியாக இருக்கும் என்பதையும், மாதத் தவணை உங்களது சம்பளத்திற்கு ஏதுவாக எத்தனை ஆண்டுகள் திரும்பி செலுத்த வேண்டும் என்பதை கணக்கிட்டு முடிவு செய்ய வேண்டும்.
இதில், முன்பணம் செலுத்துவதற்கான பட்ஜெட் குறைவாக இருப்பவர்களுக்கு போதுமான வசதிகளை அளிக்கும் பியூர் வேரியண்ட் சிறந்ததாக இருக்கும். இது போதுமான அனைத்து அடிப்படை வசதிகளையும் அளிக்கிறது. அடுத்து, அதிக வசதிகளை எதிர்பார்ப்பவர்களுக்கு கிரியேட்டிவ் வேரியண்ட் சிறந்ததாக இருக்கும். பட்ஜெட் பிரச்னை இல்லை என்பவர்களுக்கு அக்கம்ப்ளிஷ்டு வேரியண்ட் சிறந்த அனுபவத்தையும், மதிப்பை வழங்கும்.
புதிய டாடா ஏரிஸ் கார் நவீன தொழில்நுட்ப அம்சங்களுடன் மிக சவாலான விலையில் மாருதி டிசையர், ஹோண்டா அமேஸ் மற்றும் ஹூண்டாய் ஆரா கார்களுடன் கடும் போட்டியை கொடுக்கும் வகையில் வந்துள்ளது. மேலும், இது தனிநபர் பயன்பாட்டு சந்தையில் மட்டுமே விற்பனை செய்யப்படும் என்றும், டாக்ஸி மார்க்கெட்டுக்கு விற்பனைக்கு கிடையாது என்றும் டாடா கார்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. எனவே, வரும் மாதங்களில் புதிய ஏரிஸ் கார் எந்தளவு வரவேற்பு பெறுகிறது, போட்டியாளர்களுக்கு எந்த அளவுக்கு நெருக்கடியை தரும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
This article has been updated with more information on verdict part.


Click it and Unblock the Notifications

