சீன நிறுவனத்தின் உதவியுடன் தயாராகும் டாடா சொகுசு எலெக்ட்ரிக் கார்கள்! அடுத்த வருஷம் சரவெடியாய் வெடிக்க போகுது!
உலகில் ஒரு சில நிறுவனங்கள் வெவ்வேறு பிராண்டுகளின் கீழ் வாகனங்களை விற்பனை செய்து வருகின்றன. உதாரணத்திற்கு ஹீரோ மோட்டோகார்ப் (Hero MotoCorp) நிறுவனத்தை எடுத்து கொள்ளலாம். ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் விடா (Vida) என்ற பிராண்டின் கீழ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை (Electric Scooters) விற்பனை செய்து கொண்டுள்ளது.
அதேபோல் டொயோட்டா (Toyota) நிறுவனம் லெக்ஸஸ் (Lexus) என்ற பிராண்டின் கீழ் சொகுசு கார்களை (Luxury Cars) விற்பனை செய்து வருகிறது. இந்த வரிசையில் கூடிய விரைவில் டாடா மோட்டார்ஸ் (Tata Motors) நிறுவனமும் இணையவுள்ளது. ஆம், டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அவின்யா (Avinya) என்ற பிராண்டின் கீழ் சொகுசு எலெக்ட்ரிக் கார்களை விற்பனை செய்யவுள்ளது.

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தற்போதே எலெக்ட்ரிக் கார்களை விற்பனை செய்து கொண்டுதான் உள்ளது. ஆனால் சொகுசு எலெக்ட்ரிக் கார்களை விற்பனை செய்வதற்கு என்று தனியாக அவின்யா என்ற பிராண்டை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் உருவாக்கியுள்ளது. தற்போதைய நிலையில் அவின்யா பிராண்டில் மொத்தம் 5 சொகுசு எலெக்ட்ரிக் கார்கள் உருவாக்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதில் முதலாவது சொகுசு எலெக்ட்ரிக் கார் அடுத்த ஆண்டு அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சூழலில், அவின்யா பிராண்டின் கீழ் விற்பனைக்கு வரவுள்ள சொகுசு எலெக்ட்ரிக் கார்கள் சீன (China) நிறுவனத்தின் பிளாட்பார்ம் அடிப்படையில் உருவாக்கப்படவுள்ளது தற்போது அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

டாடா மோட்டார்ஸ் பயணிகள் வாகனங்கள் மற்றும் டாடா பயணிகள் எலெக்ட்ரிக் மொபிலிட்டி நிர்வாக இயக்குனரும் மற்றும் தலைமை செயல் அதிகாரியுமான சைலேஷ் சந்திரா இந்த தகவலை உறுதி செய்துள்ளார். இது குறித்து கார்டாக் தளம் செய்தி வெளியிட்டுள்ளது. சீனாவை சேர்ந்த செரி (Chery) நிறுவனத்தின் பிளாட்பார்ம் அடிப்படையில்தான் டாடா அவின்யா சொகுசு எலெக்ட்ரிக் கார்கள் தயாரிக்கப்படவுள்ளன.
இங்கிலாந்தை சேர்ந்த ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனமும், செரி நிறுவனமும் மிக நீண்ட காலமாகவே கூட்டணியில் இருந்து வருகின்றன. இதில், ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனமானது, இந்தியாவை சேர்ந்த டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் ஒரு அங்கமாக இயங்கி வருகிறது. அதாவது டாடா மோட்டார்ஸ் நிறுவனம்தான், ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனத்தின் தாய் நிறுவனமாகும்.
எனவே ஜாகுவார் லேண்ட் ரோவர்-செர்ரி இடையேயான கூட்டணியின் மூலமாகவே, டாடா அவின்யா சொகுசு எலெக்ட்ரிக் கார்கள், செர்ரி நிறுவனத்தின் பிளாட்பார்ம் அடிப்படையில் உருவாக்கப்படுவது சாத்தியமாகியுள்ளது. ஆரம்பத்தில் ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனத்தின் இஎம்ஏ (EMA - Electrified Modular Architecture) பிளாட்பார்ம் அடிப்படையில்தான் அவின்யா சொகுசு எலெக்ட்ரிக் கார்கள் உருவாக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் அந்த முடிவில் மாற்றம் செய்யப்பட்டு, செர்ரி பிளாட்பார்ம் அடிப்படையில், அவின்யா சொகுசு எலெக்ட்ரிக் கார்கள் உருவாக்கப்படுவது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது. முதலில் கடந்த 2025ம் ஆண்டிலேயே அவின்யா சொகுசு எலெக்ட்ரிக் கார்கள் விற்பனைக்கு வருவதாக இருந்தது. ஆனால் இந்த பிளாட்பார்ம் மாற்றம் காரணமாகவே அவின்யா சொகுசு எலெக்ட்ரிக் கார்களின் அறிமுகம் தள்ளி போய், வரும் 2027ம் ஆண்டில் வரவுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: தாமதமாகி இருந்தாலும் கூட, கூடிய விரைவில் அவின்யா சொகுசு எலெக்ட்ரிக் கார்கள் விற்பனைக்கு அறிமுகம் செய்யயப்படவிருப்பது மிகவும் சிறப்பான ஒரு விஷயம் என்பதில் துளியும் சந்தேகம் இல்லை. இந்தியாவை சேர்ந்த ஒரு நிறுவனம் சொகுசு எலெக்ட்ரிக் கார் சந்தையில் நுழையவிருப்பது வரவேற்க கூடியது


Click it and Unblock the Notifications