ரூ.45 லட்சத்தில் வரும் டாடாவின் புதிய பிரிமீயம் எலெக்ட்ரிக் கார்?... டிசைன் வேற லெவல்!
இந்திய மின்சார கார் சந்தையில் அடுத்த பெரிய நகர்வுக்கு தயாராகி வருகிறது டாடா கார்ஸ் நிறுவனம். நெக்ஸான், பன்ச், கர்வ், சியாரா, ஹாரியர் உள்ளிட்ட மின்சார கார்களை விற்பனை செய்து வரும் அந்நிறுவனம், இனி அதிக விலை கொண்ட பிரீமியம் கார் பிரிவிலும் தனது கவனத்தை செலுத்த உள்ளது.
இதற்காக அவின்யா என்ற பிராண்டில் புதிய கார்களை டாடா கார்ஸ் அறிமுகம் செய்ய இருக்கிறது. மேலும், அவின்யா பிராண்டில் வர இருக்கும் முதல் கார் அவின்யா எக்ஸ் என்ற பெயரில் குறிப்பிடப்படுகிறது. இந்த புதிய கார் மின்சார வெர்ஷனாக இருப்பதுடன், ஜாகுவார் லேண்ட்ரோவர் நிறுவனத்தின் மின்சார கார் தயாரிப்பு கட்டமைப்பை பயன்படுத்தி உருவாக்க டாடா திட்டமிட்டிருந்தது.

ஆனால், தற்போது அந்த திட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன்படி, அவின்யா எக்ஸ் காருக்கு சீனாவின் செரி (Chery) மற்றும் ஜாகுவார் லேண்ட் ரோவர் இணைந்து உருவாக்கிய புதிய மின்சார வாகன தளம் பயன்படுத்தப்படலாம் என கூறப்படுகிறது. இந்த தளத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்படும் ஃப்ரீலேண்டர் (Freelander) உள்ளிட்ட மின்சார வாகனங்களுடன் அவின்யா எக்ஸ் தொழில்நுட்ப ரீதியாக தொடர்பு கொண்டிருக்கும்.
இதன் மூலம் புதிய காரை உருவாக்குவதற்கான காலத்தையும் செலவையும் மிச்சப்படுத்த டாடா கார்ஸ் நிறுவனம் முயற்சி செய்வதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில், இந்திய வாடிக்கையாளர்களின் தேவைக்கு ஏற்ப மென்பொருள் (Software), மின்னணு அமைப்புகள் (Electronics) மற்றும் வாகனத்தின் பிற முக்கிய தொழில்நுட்பங்களில் டாடா நிறுவனம் மாற்றங்களை செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அவின்யா எக்ஸ் காரின் பேட்டரி திறன், அதிகபட்ச பயண தூரம், மோட்டார் திறன் மற்றும் செயல்திறன் குறித்த முழுமையான விவரங்களை டாடா மோட்டார்ஸ் இதுவரை வெளியிடவில்லை. எனவே, தற்போது வெளியாகியுள்ள பேட்டரி மற்றும் பயண தூரம் தொடர்பான தகவல்களை உறுதி செய்யப்பட்ட விவரங்களாக எடுத்துக்கொள்ள முடியாது.
இந்த புதிய காரின் உற்பத்தி தமிழ்நாட்டின் பனப்பாக்கத்தில் உள்ள டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் தொழிற்சாலையில் நடைபெற உள்ளது. இதனால், அவின்யா எக்ஸ் மட்டுமின்றி எதிர்காலத்தில் அறிமுகம் செய்யப்படும் அவின்யா குடும்பத்தை சேர்ந்த மற்ற மின்சார கார்களும் இங்குதான் உற்பத்தி செய்யப்படும் என தெரிகிறது.
டாடாவின் தற்போதைய மின்சார கார்களைவிட அவின்யா எக்ஸ் எலெக்ட்ரிக் கார் பிரிமீயம் ரகத்தில் நிலைநிறுத்தப்பட உள்ளது. தனித்துவமான வடிவமைப்பு, உயர்தர உட்புற அமைப்பு, புதிய தலைமுறை தொழில்நுட்ப வசதிகள் மற்றும் நீண்ட பயண தூரம் ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் கொடுத்து இந்த கார்கள் உருவாக்கப்படும்.


Click it and Unblock the Notifications


