இந்திய மக்கள் கஷ்டத்துல இருக்கப்ப டாடா இப்படி செய்யும்னு நெனச்சு கூட பாக்கல! கொஞ்சம் யோசிச்சிருக்கலாம்!
இந்தியாவில் சமீப காலமாக பெட்ரோல், டீசல் விலை (Petrol, Diesel Price Hike) உயர்வு பிரச்சனை பொதுமக்களுக்கு மிகப்பெரிய தலைவலியாக மாறியுள்ளது. இதன் காரணமாக புதிய வாகனங்களை வாங்கும் முடிவை நிறைய பேர் கை விட்டு வருகின்றனர். நிலைமை இப்படி இருக்கும் சூழலில், கார் உற்பத்தி நிறுவனங்களும் தங்கள் பங்கிற்கு வாடிக்கையாளர்களை அதிர்ச்சியடைய வைத்து கொண்டுள்ளன.
புதிய கார்களின் விலை உயர்வு (Car Price Hike) பிரச்சனை பற்றிதான் நாங்கள் இங்கே பேசி கொண்டுள்ளோம். இந்தியாவில் மாருதி சுஸுகி நிறுவனத்தின் கார்கள் (Maruti Suzuki Cars) விலை கடந்த ஜூன் 1ம் தேதியில் இருந்து உயர்ந்தது. இந்த வரிசையில் டாடா மோட்டார்ஸ் (Tata Motors) நிறுவனமும் தனது கார்களின் விலையை உயர்த்தவுள்ளதாக தற்போது அறிவித்துள்ளது.

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் கார்களின் விலை உயர்வு வரும் ஜூலை 1ம் தேதியில் இருந்து அமலுக்கு வரவுள்ளது. டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் அனைத்து கார்களுக்கும் இந்த விலை உயர்வு பொருந்தும். அதாவது ஐசி இன்ஜின் (பெட்ரோல், டீசல், சிஎன்ஜி) மற்றும் எலெக்ட்ரிக் என்று அனைத்து கார்களுக்கும் இந்த விலை உயர்வு பொருந்தும் என டாடா மோட்டார்ஸ் அறிவித்துள்ளது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் கார்களின் விலை அதிகபட்சமாக 1.50 சதவீதம் வரை உயரவுள்ளது. ஆனால் இந்த விலை உயர்வானது கார்கள் மற்றும் அதன் வேரியண்ட்களை பொறுத்து மாறுபடும். இருப்பினும் டாடா மோட்டார்ஸ் நிறுவன கார்களின் விலை அதிகபட்சமாக 1.50 சதவீதம் வரை உயர்த்தப்படவுள்ளது. இது குறித்து ஹிந்துஸ்தான் டைம்ஸ் ஆட்டோ தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

இதன் காரணமாக டாடா டியாகோ (Tata Tiago), டாடா டிகோர் (Tata Tigor), டாடா அல்ட்ராஸ் (Tata Altroz), டாடா பன்ச் (Tata Punch), டாடா நெக்ஸான் (Tata Nexon), டாடா கர்வ் (Tata Curvv), டாடா சியரா (Tata Sierra), டாடா ஹாரியர் (Tata Harrier) மற்றும் டாடா சஃபாரி (Tata Safari) ஆகிய கார்களை வாங்கவுள்ள வாடிக்கையாளர்களுக்கு பாதிப்பு ஏற்படும்.
அத்துடன் டாடா டியாகோ இவி, டாடா டிகோர் இவி, டாடா பன்ச் இவி, டாடா நெக்ஸான் இவி, டாடா கர்வ் இவி மற்றும் டாடா ஹாரியர் இவி உள்ளிட்ட எலெக்ட்ரிக் கார்களை வாங்கவுள்ள இந்திய வாடிக்கையாளர்களுக்கும் இந்த விலை உயர்வு பாதிப்புகளை ஏற்படுத்தும். உற்பத்தி செலவு அதிகரிப்பு போன்ற காரணங்களால்தான், கார்களின் விலையை உயர்த்தியாக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக டாடா மோட்டார்ஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விலை உயர்வை தவிர்க்க விரும்பும் வாடிக்கையாளர்கள், முன்கூட்டியே (Bookings) முன்பதிவு செய்து கொள்வது நல்லது. டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் மற்ற செய்திகளை பொறுத்தவரை வரும் ஜூன் 30ம் தேதி சியரா இவி எலெக்ட்ரிக் காரை விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது. இது இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள எலெக்ட்ரிக் கார்களில் ஒன்றாகும்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: பெட்ரோல், டீசல் விலை உயர்வு மற்றும் பல்வேறு முன்னணி நிறுவனங்களின் கார்களின் விலை உயர்வு போன்ற காரணங்களால், வரும் மாதங்களில் இந்தியாவில் வாகனங்களின் விற்பனை குறைவதற்கான வாய்ப்புகள் உள்ளன. ஆனால் இதை நாம் சற்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.


Click it and Unblock the Notifications