ஒட்டுமொத்த நாடே எதிர்பார்த்த டாடா கார் இருக்கும் இடம் தெரியாம போகுது... GST குறைத்து பார்த்தும் விற்பனை இல்லை!
டாடா கர்வ் (Tata Curvv), டாடா மோட்டார்ஸ் நிறுவனம் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் அறிமுகப்படுத்திய கூபே-ஸ்டைலிலான எஸ்யூவி (SUV) ரக கார். டாடா நெக்ஸான் (Nexon), பன்ச் (Punch) கார்களை போன்று இந்திய கார் மார்க்கெட்டில் பெரிய அளவில் ஆதிக்கம் செலுத்தும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கர்வ் கார்களின் விற்பனை மாதத்திற்கு மாதம் குறைந்துக் கொண்டே வருகிறது. அது கடந்த மார்ச் மாதத்திலும் தொடர்ந்துள்ளது.
நடந்து முடிந்த 2026 மார்ச் மாதத்தில் மொத்தமாகவே வெறும் ஆயிரத்து 602 கர்வ் கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டுள்ளன. கடந்த மாதத்தில் மொத்தம் 66 ஆயிரத்து 192 கார்களை டாடா மோட்டார்ஸ் விற்பனை செய்துள்ள நிலையில், அதில் 1,602 மட்டுமே கர்வ் கார்கள் ஆகும். அதாவது, டாடாவின் மொத்த விற்பனையில் 3 சதவீதம் கூட கர்வ் கார்களின் விற்பனை இல்லை.

அதுவே, கடந்த 2025ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் 3 ஆயிரத்து 785 கர்வ் கார்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்தன. இதனுடன் ஒப்பிடுகையில், கடந்த மார்ச் மாதத்தில் கர்வ் கார்களின் விற்பனை சுமார் 58% குறைந்துள்ளது. அதாவது, பாதிக்கும் மேல் குறைந்துள்ளது. அதேபோல், கடந்த 2026 பிப்ரவரி மாதத்துடன் ஒப்பிடுகையிலும் கர்வ் காரின் விற்பனை 9% குறைந்துள்ளது.
ஏனெனில், அந்த மாதத்தில் ஆயிரத்து 755 கர்வ் கார்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்தன. இருப்பினும், கடந்த 2025ஆம் ஆண்டின் கடைசி மூன்று மாதங்களுடன் ஒப்பிடுகையில் டாடா கர்வ் கார்களின் விற்பனை இந்த 2026ஆம் ஆண்டில் இருந்து ஓரளவிற்கு முன்னேற்றம் கண்டுள்ளது என்றுதான் சொல்ல வேண்டும்.

ஏனெனில், 2025 அக்டோபர்- டிசம்பர் வரையிலான மூன்று மாதங்களில் முறையே 1432, 1094 மற்றும் 1104 கர்வ் கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்தன. இத்தனைக்கும் 2025 செப்டம்பர் மாதத்தில் மத்திய அரசாங்கம் கொண்டுவந்த கார்களுக்கான ஜிஎஸ்டி (GST) திருத்தத்தால் டாடா கர்வ் காரின் விலைகள் ரூ.65,000 வரையில் குறைக்கப்பட்டன.
இதனால்தான், 2025 செப்டம்பர் (1,566), அக்டோபர் மாதங்களில் கர்வ் கார்களின் விற்பனை எண்ணிக்கை ஓரளவிற்கு அதிகரித்தது. இருப்பினும், அதற்கடுத்த நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் மீண்டும் குறைந்த நிலையில், கடந்த சில மாதங்களாக அதில் இருந்து கர்வ் மீண்டு வருவதுபோல் தெரிகிறது. இந்தியாவில் பெட்ரோல், டீசல் என்ஜின் ஆப்ஷன்களுடன், டாடா கர்வ் இவி எலெக்ட்ரிக் காரும் விற்பனை செய்யப்படுகிறது.
பெட்ரோல், டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் விற்பனை செய்யப்படும் கர்வ் காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.9.70 லட்சத்தில் இருந்து ரூ.19.10 லட்சம் வரையில் உள்ளன. ஸ்மார்ட், ப்யூர், க்ரேயேட்டிவ் மற்றும் அக்கம்ப்ளிஷ்டு என மொத்தம் 4 விதமான வேரியண்ட்களில் கர்வ் விற்பனை செய்யப்படுகிறது. இது இல்லாமல், கர்வ் டார்க் எடிஷனும் விற்பனை செய்யப்படுகிறது.
டாடா கர்வ் இவி எலெகட்ரிக் கார் ஆனது ரூ.17.49 லட்சத்தில் இருந்து ரூ.22.24 லட்சம் வரையிலான எக்ஸ்-ஷோரூம் விலைகளில் விற்பனை செய்யப்படுகிறது. கர்வ் இவி காருக்கு டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தற்சமயம் ரூ.3.45 லட்சம் வரையிலான சலுகைகளை வழங்கி வருகிறது. இருப்பினும், கர்வ் இவி எலெக்ட்ரிக் காரின் ஆரம்ப நிலை க்ரேயேட்டிவ் 45 வேரியண்ட்டிற்கு எந்த சலுகையும் அறிவிக்கப்படவில்லை. இந்த சலுகைகள் குறித்த கூடுதல் விபரங்களுக்கு அருகில் உள்ள டாடா டீலர்ஷிப் ஷோரூமை அணுகவும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவின் முதல் விலை குறைவான கூபே-ஸ்டைலிலான எஸ்யூவி காராக இருப்பினும், டாடா கர்வ் காரின் விற்பனை பெரிய அளவிற்கு இல்லாதது சற்று வருத்தத்தை ஏற்படுத்துகிறது. ஏனெனில், அந்த அளவிற்கு ஸ்டைலிஷான கார், கர்வ் ஆகும். அதிகப்படியான விலை தான் இந்த காரின் விற்பனை குறைவிற்கு காரணமாக உள்ளது. இருப்பினும், கடந்த சில மாதங்களாக கர்வ் கார்களின் விற்பனை அதிகரித்து வருவதால், இது வரும் மாதங்களுக்கும் தொடரும் என எதிர்பார்க்கிறோம்.


Click it and Unblock the Notifications








