இவ்ளோ பெரிய இந்திய மார்க்கெட்ல இந்த மாதிரி கார் ஒன்னே ஒன்னுதான் இருக்கு! அதிரடி காட்ட போகும் டாடா மோட்டார்ஸ்!
இந்திய வாடிக்கையாளர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட ஒரு கார் டாடா கர்வ் (Tata Curvv). இந்த கார் எலெக்ட்ரிக் மற்றும் ஐசி இன்ஜின் என 2 வெர்ஷன்களில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பொதுவாக டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ஒரு காரின் ஐசி இன்ஜின் வெர்ஷனைதான் முதலில் விற்பனைக்கு அறிமுகம் செய்யும். அதற்கு பிறகுதான் எலெக்ட்ரிக் வெர்ஷன் விற்பனைக்கு வரும்.
ஆனால் டாடா கர்வ் காரின் விஷயத்தில் அப்படி நடக்கவில்லை. அதற்கு மாறாக நடந்தது. அதாவது டாடா கர்வ் காரின் எலெக்ட்ரிக் வெர்ஷன் முதலிலும், அதன் ஐசி இன்ஜின் வெர்ஷன் பின்பும் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டன. டாடா கர்வ் காரின் எலெக்ட்ரிக் வெர்ஷன் கடந்த 2024ம் ஆண்டு ஆகஸ்ட் மாதமும், அதன் எலெக்ட்ரிக் வெர்ஷன் கடந்த 2024ம் ஆண்டு செப்டம்பர் மாதமும் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டன.

ஆனால் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் எதிர்பார்த்த அளவிற்கு கர்வ் காரின் விற்பனை சிறப்பாக இல்லை. கடந்த 2025ம் ஆண்டு ஜூன் மாதத்தில் இருந்து நடப்பு 2026ம் ஆண்டு மே மாதம் வரையிலான 12 மாத காலகட்டத்தில் ஒட்டுமொத்தமாக வெறும் 19,070 டாடா கர்வ் கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டுள்ளன.
இது டாடா பன்ச் அல்லது டாடா நெக்ஸான் காரின் கிட்டத்தட்ட ஒரு மாத விற்பனை எண்ணிக்கை ஆகும். டாடா கர்வ் காரின் விற்பனை எந்த அளவிற்கு மோசமாக உள்ளது? என்பதை இதன் மூலம் நீங்கள் புரிந்து கொள்ளலாம். எனவே டாடா மோட்டார்ஸ் நிறுவனம் கர்வ் காரின் விற்பனையை அதிகரிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை தீவிரமாக எடுக்க தொடங்கியுள்ளது.

இதன் ஒரு பகுதியாக டாடா கர்வ் காரின் ஐசி இன்ஜின் வெர்ஷனில் புதிதாக சிஎன்ஜி மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளதாக தற்போது வெளியாகி வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. டாடா கர்வ் காரின் ஐசி இன்ஜின் வெர்ஷனில் தற்போதைய நிலையில் 3 இன்ஜின் ஆப்ஷன்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
அவை 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல், 1.2 லிட்டர் TGDi டர்போ பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் ஆகியவை ஆகும். இந்த வரிசையில் டாடா கர்வ் காரின் ஐசி இன்ஜின் வெர்ஷன் புதிதாக சிஎன்ஜி மாடலை பெறவுள்ளதாக கூறப்படுகிறது. டாடா கர்வ் கார் இந்திய சாலைகளில் தற்போது சோதனை செய்யப்பட்டு வருகிறது.
இது டாடா கர்வ் காரின் சிஎன்ஜி மாடலாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒருவேளை இது சிஎன்ஜி மாடலாக இருக்கும்பட்சத்தில் 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன் வழங்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. தற்போதைய நிலையில் இந்தியாவில் ஒரே ஒரு காரில் மட்டுமே டர்போ பெட்ரோல்/சிஎன்ஜி ஆப்ஷன் வழங்கப்படுகிறது.
அது டாடா நெக்ஸான் ஆகும். டாடா நெக்ஸானை தவிர வேறு எந்தவொரு காரிலும் டர்போ பெட்ரோல்/சிஎன்ஜி ஆப்ஷன் இல்லை. எனவே டாடா நெக்ஸானுக்கு பிறகு டர்போ பெட்ரோல்/சிஎன்ஜி இன்ஜின் ஆப்ஷனை கொண்டிருக்கும் 2வது கார் என்ற பெருமையை டாடா கர்வ் பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.
இங்கே மற்றொரு விஷயத்தையும் நாங்கள் கண்டிப்பாக குறிப்பிட்டாக வேண்டும். இந்திய சந்தையில் தற்போது E85 மற்றும் E100 எரிபொருட்களில் இயங்க கூடிய ஃப்ளக்ஸ் ஃப்யூயல் வாகனங்கள் அதிக அளவில் விற்பனைக்கு வர தொடங்கியுள்ளன. மாருதி சுஸுகி மற்றும் ஹீரோ மோட்டோகார்ப் போன்ற நிறுவனங்கள் வெகு சமீபத்தில் புதிய ஃப்ளக்ஸ் ஃப்யூயல் வாகனங்களை இந்திய சந்தையில் களமிறக்கின.
ஆனால் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இன்னும் ஒரு ஃப்ளக்ஸ் ஃப்யூயல் வாகனத்தை கூட விற்பனைக்கு அறிமுகம் செய்யவில்லை. எனவே தற்போது சோதனை செய்யப்பட்டு வருவது டாடா கர்வ் காரின் ஃப்ளக்ஸ் ஃப்யூயல் வெர்ஷனாக கூட இருக்கலாம். எனவே அதிகாரப்பூர்வமான தகவல்களுக்கு நாம் சற்று காத்திருப்பது அவசியமாகிறது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: மாருதி சுஸுகி நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்திருப்பது வேகன் ஆர் காரின் ஃப்ளக்ஸ் ஃப்யூயல் வெர்ஷன் ஆகும். ஆனால் அதன் விற்பனை தற்போது அவ்வளவு சிறப்பாக இல்லை. எனவே கர்வ் காரின் விற்பனையை அதிகரிக்க வேண்டும் என்றால், அதன் ஃப்ளக்ஸ் ஃப்யூயல் வெர்ஷனை அறிமுகம் செய்வதை விட, சிஎன்ஜி வெர்ஷனை அறிமுகம் செய்வதுதான் மிகவும் சிறப்பாக இருக்கும் என நாங்கள் கருதுகிறோம்.


Click it and Unblock the Notifications