ஃபுல்-சார்ஜில் 600கிமீ ஓடக்கூடிய டாடா எலெக்ட்ரிக் கார்! பெட்ரோல், டீசல் கார்களை விட அதிகமாக வாங்கும் மக்கள்
டாடா ஹாரியர் (Tata Harrier), டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தில் இருந்து விற்பனை செய்யப்படும் விலைமிக்க பிரீமியம் தரத்திலான 5-சீட்டர் எஸ்யூவி கார். பெட்ரோல் என்ஜின், டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் மட்டுமின்றி, எலெக்ட்ரிக் வெர்சனிலும் டாடா ஹாரியர் விற்பனை செய்யப்படுகிறது. பெட்ரோல், டீசல் என்ஜின் உடனான ஹாரியர் கடந்த சில வருடங்களாகவே விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், ஹாரியர் இவி எலெக்ட்ரிக் கார் (Electric Car) கடந்த 2025 ஜூன் மாதத்தில்தான் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.
இருப்பினும், குறுகிய காலத்தில் ஹாரியர் இவி மக்கள் மத்தியில் பெரிதும் கவனத்தை ஈர்த்துள்ளது. எந்த அளவிற்கு என்றால், ஹாரியர் பெட்ரோல் & டீசல் கார்களை காட்டிலும் ஹாரியர் இவி எலெக்ட்ரிக் கார்கள் அதிகமாக விற்பனை ஆகுகின்றன. ரூ.21.49 லட்சம் என்கிற எக்ஸ்-ஷோரூம் விலையில் 2025 ஜூன் மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்ட ஹாரியர் இவி, முதல் மாதத்திலேயே 475 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்தது.

அந்த மாதத்தில் பெட்ரோல், டீசல் என்ஜின் கொண்ட ஹாரியர் கார்கள் 784 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்தன. அந்த மாதத்தில் ஹாரியரின் மொத்த விற்பனை எண்ணிக்கையில் ஹாரியர் இவி 38% பங்கை பெற்றிருந்தது. அதற்கடுத்த 2025 ஜூலை மாதத்தில் 915 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்த ஹாரியர் பெட்ரோல் & டீசல் கார்களை காட்டிலும் அதிகமாக 1,301 ஹாரியர் இவி எலெக்ட்ரிக் கார்கள் விற்பனையாகின.
கடந்த ஆண்டு ஜூலையில் ஹாரியர் கார்களின் மொத்த விற்பனையில் ஹாரியர் இவி-இன் பங்கு மட்டும் 59% ஆகும். அதன்பின், ஹாரியர் இவி-இன் பங்களிப்பு எந்த மாதத்திலும் 54%-க்கும் கீழ் குறையவில்லை. அறிமுகம் செய்யப்பட்ட 2025 ஜூன் மாதத்தில் இருந்து கடந்த 2026 மார்ச் வரையிலான 10 மாத காலக்கட்டத்தில் மொத்தம் 17 ஆயிரத்து 592 ஹாரியர் இவி எலெக்ட்ரிக் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

அதுவே, இந்த 10 மாதங்களில் விற்பனை செய்யப்பட்ட ஹாரியர் பெட்ரோல் மற்றும் டீசல் கார்களின் விற்பனை எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா? வெறும் 13 ஆயிரத்து 416 மட்டுமே. அதாவது, இந்த 10 மாதங்களில் விற்பனையான மொத்த டாடா ஹாரியர் கார்களின் எண்ணிக்கையில் ஹாரியர் இவி எலெக்ட்ரிக் காரின் பங்களிப்பு மட்டும் 57% ஆகும்.
ஒட்டுமொத்தமாக இந்த 10 மாதங்களில் 31 ஆயிரத்து 8 ஹாரியர் கார்களை டாடா மோட்டார்ஸ் விற்பனை செய்துள்ளது. இது 2024 ஜூன்- 2025 மார்ச் வரையிலான காலக்கட்டத்தில் விற்பனையான ஹாரியர் பெட்ரோல் மற்றும் டீசல் கார்களின் எண்ணிக்கையை விட அதிகமாகும். ஹாரியர் பெட்ரோல், டீசல் கார்கள் மற்றும் ஹாரியர் இவி எலெக்ட்ரிக் கார்கள் என அனைத்தும் சேர்த்து அதிகப்பட்சமாக கடந்த 2025 அக்டோபர் மாதத்தில் 4 ஆயிரத்து 483 ஹாரியர் கார்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்தன.
இதற்கான காரணம், 2025 செப்டம்பரில் மத்திய அரசு கொண்டுவந்த புதிய ஜிஎஸ்டி (GST) திருத்தம் ஆகும். இதன் விளைவாக, குறிப்பாக ஹாரியர் இவி எலெக்ட்ரிக் காரின் விற்பனை வெகுவாக அதிகரித்தது. 2025 அக்டோபரில் மட்டும் 2,519 ஹாரியர் இவி கார்களை டாடா மோட்டார்ஸ் விற்பனை செய்தது.
அதேபோல், 2025 நவம்பர் மாதத்திலும் மொத்தம் விற்பனை செய்யப்பட்ட ஹாரியர் கார்களில் ஹாரியர் இவி-இன் பங்களிப்பு மட்டும் சுமார் 64% ஆகும். அந்த மாதத்தில் 2,398 ஹாரியர் இவி கார்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்தன. நடந்து முடிந்த 2026 மார்ச் மாதத்தில் 1,597 ஹாரியர் இவி எலெக்ட்ரிக் கார்களும், 1,229 ஹாரியர் பெட்ரோல், டீசல் கார்களும் என மொத்தம் 2,826 ஹாரியர் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ரூ.21.49 லட்சத்தில் இருந்து ரூ.21.49 லட்சம் வரையிலான எக்ஸ்-ஷோரூம் விலைகளில் விற்பனை செய்யப்படும் டாடா ஹாரியர் இவி ஆனது ஆல்-வீல்-டிரைவ் (AWD) வேரியண்ட்டிலும் விற்பனை செய்யப்படுவது அதன் முக்கிய பலமாகும். இருப்பினும், ஹாரியர் பெட்ரோல், டீசல் கார்களை காட்டிலும் ஹாரியர் இவி அதிகமாக விற்பனையாகுவதற்கு முக்கிய காரணம், அவற்றின் விலை ஆகும். பெட்ரோல், டீசல் வேரியண்ட்களுக்கு இணையான விலையில் ஹாரியர் இவி கிடைப்பதால் பலரும் ஹாரியர் இவி-இன் பக்கம் செல்கின்றனர்.


Click it and Unblock the Notifications








