ஒரு மணிநேரத்தில் 80% சார்ஜ் ஆகக்கூடிய டாடா பிக்-அப் டிரக்! பெட்ரோல் பங்க்களை இழுத்து மூடினாலும் கவலை இல்ல!
டாடா மோட்டார்ஸ் வணிக வாகனங்கள் (Tata Motors Commercial Vehicles) நிறுவனத்தில் இருந்து 'இண்ட்ரா இவி பிக்-அப்' (Intra EV Pick-up) என்கிற பெயரில் புதிய எலெக்ட்ரிக் கமர்ஷியல் வாகனம் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ரூ.11.95 லட்சம் என்கிற விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய டாடா இண்ட்ரா இவி பிக்-அப் டிரக் வாகனத்தை பற்றிய விரிவான விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.
1990களில் முதல்முறையாக கார்களை விற்பனை செய்ய துவங்கியதற்கு முன்பாகவே டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அதன் வணிக வாகனங்கள் எனப்படும் கமர்ஷியல் வாகனங்களில் கொடிக்கட்டி பறந்துக் கொண்டிருந்தது. டாடாவின் கமர்ஷியல் வாகனங்கள் கரடுமுரடான சாலைகளிலும் கடுமையான சூழ்நிலைகளிலும் அதிக சுமைகளை சுமந்து செல்லக்கூடியவைகளாக உள்ளன. குறிப்பாக, டாடாவின் அளவில் சிறியதான பிக்-அப் டிரக் வாகனங்கள் இந்தியாவின் ஏற்றுமதி & இறக்குமதி சேவைகளில் முக்கிய உயிர்நாடியாக திகழ்கின்றன.

டாடா ஏஸ் (Ace) பிக்-அப் டிரக் வாகனத்தை போன்று, டாடா இண்ட்ரா பிக்-அப் டிரக்கும் அதன் கடினமான உழைக்கும் திறனினால் பலரால் பாராட்டப்படுகிறது. இதனாலேயே டாடா ஏஸ் இவி எலெக்ட்ரிக் வாகனத்தை போன்று, இண்ட்ரா இவி எலெக்ட்ரிக் பிக்-அப் டிரக் வாகனத்தை தற்போது டாடா மோட்டார்ஸ் விற்பனைக்கு அறிமுகப்படுத்தி உள்ளது.
டாடாவின் சிறிய அளவிலான எலெக்ட்ரிக் கமர்ஷியல் வாகனங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் விதமாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய இண்ட்ரா இவி பிக்-அப் ஆனது இந்தியா முழுவதும் உள்ள டாடா மோட்டார்ஸின் அனைத்து கமர்ஷியல் வாகன டீலர்ஷிப் ஷோரூம்களிலும் கிடைக்கும். வழக்கமான இண்ட்ரா வாகனத்தை போன்று, புதிய இண்ட்ரா இவி வாகனமும் அதிக சுமைகளை சுமந்து செல்லக்கூடியதாக உள்ளது.
எந்த அளவிற்கு என்றால், அதிகப்பட்சமாக 1,750 கிலோ வரையில் எடை கொண்ட பொருட்களை கொண்டுச் செல்லலாம். இதற்கேற்ப வாகனத்தின் பின்பக்க லோடு பாடியை 10 அடி 2 இன்ச் வரையில் அதிகரித்து பெற முடியும். அதேபோல், நீண்ட தூர பயணங்களையும் அடிக்கடி மேற்கொள்ளலாம். அதேநேரம், நகரத்திற்குள் போக்குவரத்து நெரிசல்களுக்கு மத்தியிலும் அன்றாட போக்குவரத்து சேவைகளுக்கு பயன்படுத்தலாம்.
இவை எல்லாவற்றையும் விட சிறப்பம்சமாக, இண்ட்ரா இவி பிக்-அப் டிரக் வாகனத்தில் இயக்க செலவானது மிகவும் குறைவாக இருக்கும். புதிய இண்ட்ரா இவி பிக்-அப் டிரக்கின் முக்கிய சிறப்பம்சங்கள் என்று பார்த்தால், இதில் 72 கிலோவாட்ஸ் எலெக்ட்ரிக் மோட்டார் வழங்கப்பட்டுள்ளது. இது அதிகப்பட்சமாக 230 என்.எம் வரையிலான டார்க் திறனை வாகனத்திற்கு வழங்கக்கூடியது.
13 டிகிரி ஏறுமுகமான சாலைகளிலும் இந்த புதிய எலெக்ட்ரிக் வாகனத்தை கொண்டுச் செல்ல முடியும். இண்ட்ரா இவி பிக்-அப் எலெக்ட்ரிக் வாகனத்தின் எலெக்ட்ரிக் மோட்டாரில் ஐபி67 சான்றளிக்கப்பட்ட 28.2kWh திறன் கொண்ட பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இதனை முழுவதுமாக சார்ஜ் நிரப்பினால் அதிகப்பட்சமாக 211கிமீ தொலைவிற்கு பயணிக்க முடியும்.
சிசிஎஸ்2 (CCS2) சார்ஜர் மூலமாக புதிய இண்ட்ரா இவி பிக்-அப் டிரக் வாகனம் ஃபாஸ்ட் சார்ஜிங்கை ஏற்கக்கூடியதாக உள்ளது. இதன் மூலமாக, வாகனத்தின் பேட்டரியை வெறும் 55 நிமிடங்களில் 10%-இல் இருந்து 80% சார்ஜ் நிரப்பிவிட முடியும். புதிய இண்ட்ரா இவி பிக்-அப் டிரக் வாகனத்தின் பேட்டரிக்கு 6 வருடங்கள்/ 2 லட்சம் கிமீ உத்தரவாதத்தை டாடா மோட்டார்ஸ் அறிவித்துள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: கனரக வாகனங்களை எலெக்ட்ரிக்கில் பயன்படுத்துவதில் உள்ள பிரச்சனை என்னவென்றால், அவற்றை சார்ஜ் செய்வதாகும். ஆனால், டாடா மோட்டார்ஸ் நிறுவனம் நாடு முழுவதும் சுமார் 25 ஆயிரத்திற்கும் அதிகமான சார்ஜிங் பாயிண்ட்கள் மற்றும் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு என்றே பிரத்யேகமாக 200 இவி சர்வீஸ் செண்டர்களை கொண்டுள்ளதால், புதிய இண்ட்ரா இவி பிக்-அப் டிரக் வாகனத்தை பயன்படுத்துவதில் பெரியதாக எந்த பிரச்சனையும் இருக்காது.


Click it and Unblock the Notifications








