எம்ஜி விண்ட்சருக்கு 'டஃப்' கொடுக்க வரும் டாடாவின் புதிய எலெக்ட்ரிக் கார்! 2027ல் அறிமுகமாகிறது?
இந்தியாவில் எலெக்ட்ரிக் கார் விற்பனையில் டாடா மோட்டார்ஸ் தொடர்ந்து நம்பர் 1 இடத்தில் இருப்பதுடன் தனது ஆதிக்கத்தை தொடர்ந்து நிலைநாட்டி வருகிறது. ஏற்கனவே நெக்ஸான் EV, கர்வ் EV, சியரா EV என பல்வேறு மாடல்களை விற்பனை செய்து வரும் அந்நிறுவனம், தற்போது புதிதாக ஒரு மிட்-சைஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவியை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த புதிய கார் எம்ஜி விண்ட்சர் EVக்கு நேரடி போட்டியாக களமிறங்க உள்ளது.
இந்த புதிய எலெக்ட்ரிக் காருக்கு டாடா நிறுவனம் தற்காலிகமாக 'குனோ' (Kuno) என பெயரில் குறிப்பிடுகிறது. இது டாடா நிறுவனத்தின் உள்நாட்டு தயாரிப்பு குறியீட்டு பெயராகவும் கருதப்படுகிறது. விற்பனைக்கு வரும்போது வேறு பெயரில் அறிமுகம் செய்யப்பட வாய்ப்புள்ளது. இந்த புதிய மிட்சைஸ் எஸ்யூவி கார் 4.3 மீட்டர் நீளம் கொண்ட இந்த எலெக்ட்ரிக் எஸ்யூவி, அடுத்த தலைமுறை நெக்ஸான் EVக்கும் சியரா EVக்கும் இடையில் நிலைநிறுத்தப்பட உள்ளது.

(Render Image)
விசாலமான எலெக்ட்ரிக் எஸ்யூவி
தற்போது எம்ஜி விண்ட்சர் EV வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெறுவதற்கு முக்கிய காரணம் அதன் விசாலமான கேபின், பின்புற இருக்கைகளில் கிடைக்கும் வசதி மற்றும் குடும்பத்துடன் பயணிப்பதற்கு ஏற்ற நடைமுறைக்கு உகந்த வடிவமைப்பாக உள்ளது. இதே விஷயங்களை மனதில் வைத்து டாடா நிறுவனம் தனது புதிய குனோ எலெக்ட்ரிக் காரை உருவாக்கி வருவதாக கூறப்படுகிறது.
டாடா கர்வ் EV கூபே வடிவமைப்பிலும், சியரா EV தனித்துவமான தோற்றத்திலும் இருக்கும் நிலையில், இந்த புதிய கார் வழக்கமான எஸ்யூவி வடிவமைப்பில் அதிக இடவசதி மற்றும் பயணிகளின் சவுகரியத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கப்படுகிறது. இதன் மூலம் தினசரி அலுவலக பயணம் மட்டுமின்றி குடும்பத்துடன் நீண்ட தூரம் பயணிப்பவர்களையும் டார்கெட் செய்ய டாடா திட்டமிட்டுள்ளது.
ஆக்டி.EV பிளாட்பார்ம்
இந்த புதிய எலெக்ட்ரிக் எஸ்யூவி டாடா நிறுவனத்தின் ஆக்டி.EV (Acti.ev) என்ற பிரத்யேக எலெக்ட்ரிக் வாகன பிளாட்பாரத்தில் உருவாக்கப்பட உள்ளது. இந்த பிளாட்பாரம் முன்பக்க வீல் டிரைவ் (FWD), பின்பக்க வீல் டிரைவ் (RWD), ஆல் வீல் டிரைவ் (AWD) என பல்வேறு டிரைவ் அமைப்புகளுக்கு ஏற்ற வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதன் தரைத்தளம் தட்டையாக இருப்பதாலும், பேட்டரியை சரியான முறையில் பொருத்த முடிவதாலும் காரின் உட்புறத்தில் அதிக இடவசதியை ஏற்படுத்த முடியும். இதனால் பின்புறம் அமர்பவர்களுக்கு அதிக கால் இடவசதி, பெரிய பூட் ஸ்பேஸ் உள்ளிட்ட அம்சங்கள் கிடைக்க வாய்ப்புள்ளது. இருப்பினும், இதில் என்னென்ன தொழில்நுட்ப வசதிகள் இடம்பெறும் என்பது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.
பேட்டரி, ரேஞ்ச் எப்படி இருக்கும்?
டாடா நிறுவனம் இந்த புதிய காரின் பேட்டரி திறன், மோட்டார் பவர் மற்றும் ரேஞ்ச் உள்ளிட்ட விபரங்களை இதுவரை வெளியிடவில்லை. ஆனால் ஏற்கனவே விற்பனையில் உள்ள கர்வ் EV மற்றும் சியரா EV ஆகிய கார்களில் பயன்படுத்தப்படும் பேட்டரி மற்றும் மோட்டார் தொழில்நுட்பங்களை இதில் பயன்படுத்த வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
டாடா கர்வ் EV காரில் 55 kWh பேட்டரி வழங்கப்படுகிறது. இது 167 எச்பி பவரையும் 215 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் மோட்டாருடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த கார் ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 502 கிமீ வரை பயணிக்கும் என நிறுவனம் தெரிவித்துள்ளது. மறுபுறம், டாடா சியரா EV காரில் 65 kWh மற்றும் 75 kWh பேட்டரி ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன. இதில் அதிகபட்சமாக 665 கிமீ ரேஞ்ச் கிடைக்கும் என கூறப்படுகிறது. இந்த பேட்டரி மற்றும் மோட்டார் ஆப்ஷன்களில் சிலவற்றை புதிய குனோ EV காரிலும் டாடா நிறுவனம் பயன்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
சனந்த் ஆலையில் உற்பத்தி
இந்த புதிய எலெக்ட்ரிக் எஸ்யூவி குஜராத் மாநிலத்தில் உள்ள டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் சனந்த் ஆலையில் உற்பத்தி செய்யப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த காருக்காக ஆண்டுக்கு சுமார் 80,000 முதல் 1 லட்சம் யூனிட்டுகள் வரை உற்பத்தி செய்யும் திறனை ஏற்படுத்த நிறுவனம் திட்டமிட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
டாடா நிறுவனம் வரும் 2031 நிதியாண்டிற்குள் தனது எலெக்ட்ரிக் வாகனங்களின் எண்ணிக்கையை 6ல் இருந்து 10 ஆக அதிகரிக்க திட்டமிட்டுள்ளது. இந்த புதிய கார் அந்த விரிவாக்க திட்டத்தில் முக்கிய பங்கு வகிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைய தகவல்களின்படி, டாடா குனோ எலெக்ட்ரிக் எஸ்யூவி 2027-2028 காலகட்டத்தில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும்.
டாடா கர்வ் EV மற்றும் சியரா EV கார்களின் விலை வரம்பை கருத்தில் கொண்டால், இந்த புதிய காரும் ரூ.17 லட்சம் முதல் ரூ.22 லட்சம் வரையிலான விலையில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எம்ஜி விண்ட்சர் EV ஏற்கனவே குடும்பங்களுக்கான நடைமுறைக்கு ஏற்ற எலெக்ட்ரிக் காராக நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், அதற்கு போட்டியாக டாடாவின் புதிய குனோ EV களமிறங்குவது மிட்-சைஸ் எலெக்ட்ரிக் கார் சந்தையில் போட்டியை மேலும் அதிகரிக்கும் என்பதில் சந்தேகமில்லை.
Source: Autocarindia


Click it and Unblock the Notifications


