Tesla, BYD நிறுவனங்களை பின்னுக்குத் தள்ளிய டாடா EV கார்கள்.. மின்சார பயன்பாட்டுத் திறனில் உலகளவில் முதலிடம்
மின்சார கார்கள் குறித்து சர்வதேச அளவில் நடத்தப்பட்ட ஆய்வில், மின்சார பயன்பாட்டுத் திறன் பிரிவில் டாடா எலெக்ட்ரிக் கார்கள் முதலிடத்தை பிடித்து அசத்தி உள்ளது. இரண்டாவது இடத்தை மஹிந்திரா எலெக்ட்ரிக் கார்கள் பிடித்துள்ளன. இந்த விஷயத்தில் உலகின் மிகச் சிறந்த பிராண்டுகளாக கருதப்படும் டெஸ்லா மற்றும் பிஒய்டி ஆகிய நிறுவனங்கள் அடுத்தடுத்த இடங்களை பெற்றன.
அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் சர்வதேச பசுமை போக்குவரத்து கவுன்சில் (ICCT) அமெரிக்கா, சீனா, இந்தியா, ஐரோப்பா, ஜப்பான் மற்றும் தென்கொரியா என ஆறு முக்கிய கார் சந்தைகளின் தரவுகளை எடுத்து மதிப்பீடு செய்தது.

இதில், 22 மின்சார கார் நிறுவனங்களின் தயாரிப்புகளை 10 அளவுகோல்களை அடிப்படையாக வைத்து ஆய்வு நடத்தியது. மின்சார கார்களின் விற்பனை எண்ணிக்கை, மின்சார பயன்பாட்டுத் திறன், தொழில்நுட்பம் மற்றும் சந்தை ஆதிக்கம் உள்ளிட்ட பல விஷயங்கள் குறித்து ஆய்வு நடத்தப்பட்டது.
இதன் அடிப்படையில் உலக வாகனத் தயாரிப்பாளர் ரேட்டிங் 2025 என்ற பெயரில் அந்த அமைப்பு ஆய்வு அறிக்கையை வெளியிட்டுள்ளது. இதில், குறிப்பிட்ட ஒரு முக்கிய விஷயத்தில் டாடா மற்றும் மஹிந்திரா நிறுவனங்கள் முதல் இரண்டு இடங்களை பிடித்து அசத்தி உள்ளன.
அதாவது, டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் மின்சார கார்களில் சராசரி மின்சார பயன்பாடு என்பது 106 Wh/km என்று கணக்கிடப்பட்டுள்ளது. இதனை எளிமையாக சொல்ல வேண்டுமானால், 100 கிமீ தூரம் செல்வதற்கு 10.6 யூனிட்டுகள் மின்சாரம் பயன்படுகிறது. இதில் ஆய்வு செய்யப்பட்ட பிற பேட்டரி வாகனங்களை விட டாடா மின்சார வாகனங்கள் மிக குறைவான மின்சாரத்தை பயன்படுத்துவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேபோன்று, மஹிந்திரா நிறுவனத்தின் பேட்டரி கார்களின் மின்சார பயன்பாட்டு திறன் 113 Wh/km என்று குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, 100 கிமீ செல்வதற்கு 11.3 யூனிட்டுகள் மின்சாரம் பயன்படுத்துகிறது. இந்த விஷயத்தில் மட்டும் டாடா மற்றும் மஹிந்திரா நிறுவனங்கள் முதல் இரண்டு இடங்களை பிடித்து மின்சார பயன்பாட்டு திறனில் உலகின் சிறந்த பேட்டரி கார்களாக பெயர் பெற்றுள்ளன.
அடுத்து டெஸ்லா நிறுவனத்தின் எலெக்ட்ரிக் கார்களின் மின்சார பயன்பாட்டுத் திறன் 119/km என்றும், BYD நிறுவனத்தின் மின்சார பயன்பாட்டுத் திறன் 125/km என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது, 100 கிமீ செல்வதற்கு டெஸ்லா கார்களுக்கு 11.9 யூனிட்டுகளும், பிஒய்டி கார்களுக்கு 12.5 யூனிட்டுகளும் மின்சாரம் செலவாகும். ஒட்டுமொத்தமாக சர்வதேச அளவிலான சராசரி 131/km என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இந்திய நிறுவனங்களின் மின்சார கார்கள் மின்சார பயன்பாட்டுத் திறன் பிரிவில் முதலிடத்தை பெற்றிருப்பது பெருமைக்குரிய விஷயமாக பார்க்கப்படுகிறது.

அதேநேரத்தில், ஒட்டுமொத்த அளவுகோள்களின் அடிப்படையில் அமெரிக்காவை சேர்ந்த டெஸ்லா நிறுவனம் முதலிடத்தையும், சீனாவை சேர்ந்த பிஒய்டி நிறுவனம் இரண்டாவது இடத்தையும் பிடித்துள்ளன. விற்பனைப் பங்கு, சார்ஜிங் வேகம், ரேஞ்ச், பேட்டரி மறுசுழற்சி, எதிர்கால திட்டங்கள் போன்ற அனைத்து பிரிவுகளின் கீழ் டெஸ்லா மற்றும் பிஒய்டி ஒட்டுமொத்தப் பிரிவில் முன்னிலை வகிக்கின்றன.
டாடா மற்றும் மஹிந்திரா நிறுவனங்களின் பேட்டரி வாகனங்கள் மின்சார பயன்பாட்டுத் திறனில் மிகவும் செம்மையாக இருப்பது வரவேற்கத்தக்க விஷயம். குறிப்பாக, எரிபொருள் சிக்கனம், செலவு போன்றவற்றில் அதிக கவனம் செலுத்தும் இந்தியர்களின் மனதை புரிந்து கொண்டு நம் நாட்டு நிறுவனங்கள் சிறப்பான தயாரிப்புகளை உருவாக்க முனைவது தெரிகிறது.

இந்த மதிப்பீட்டில், டாடா, மஹிந்திரா கார்களின் சார்ஜிங் வேகம், ரேஞ்ச் உள்ளிட்ட பல முக்கிய அம்சங்களில் பின்தங்கி இருப்பது தெரிகிறது. இதன் அர்த்தம், குறைந்த மின்சாரத்தை பயன்படுத்தி அதே தூரத்தை கடக்கும் திறனில் இந்திய நிறுவனங்கள் சிறப்பாக செயல்பட்டுள்ளன என்பதுதான். ஆனால் ஒரு காரின் மொத்த ரேஞ்சை பேட்டரி திறன், வாகன எடை, ஓட்டும் முறை உள்ளிட்ட பல காரணிகள் தீர்மானிப்பதால், இந்த திறன் மதிப்பீட்டை வைத்து அதிக ரேஞ்ச் கிடைக்கும் என்று மட்டும் முடிவு செய்ய முடியாது.
This article has been updated with additional information.


Click it and Unblock the Notifications


