முதலமைச்சர் நேரில் வந்து கொடியசைத்து துவங்கி வைக்கும் அளவுக்கு முக்கியமான தருணம்! மொத்த மாநிலத்திற்கும் பெருமை
டாடா மோட்டார்ஸ் (Tata Motors), கார்களை விற்பனை செய்வதில் மட்டுமின்றி, கமர்ஷியல் வாகனங்களை விற்பனை செய்வதிலும் இந்திய அளவில் முன்னணியில் உள்ள நிறுவனம். இந்த நிறுவனத்திற்கு கமர்ஷியல் வாகனங்களை உற்பத்தி செய்ய உத்தர பிரதேசம் மாநில தலைநகர் லக்னோவில் கிட்டத்தட்ட 35 வருடங்களுக்கும் மேலாக தொழிற்சாலை உள்ளது.
இந்த தொழிற்சாலை எந்த அளவிற்கு பழமையானது என்றால், 35 வருடங்களுக்கும் மேலாக செயல்பட்டுவரும் இந்த தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்பட்ட வாகனங்களின் எண்ணிக்கை 10 இலட்சம் பிரம்மாண்ட மைல்கல்லை கடந்துள்ளது. 10 இலட்சமாவது வாகனத்தை உத்தர பிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் மற்றும் டாடா சன்ஸ் தலைவர் என்.சந்திரசேகரன் கொடியசைத்து தொழிற்சாலையில் இருந்து வெளியே அனுப்பி வைத்தனர்.

10 இலட்சமாவது கமர்ஷியல் வாகனத்தை உற்பத்தி செய்து வெளியே அனுப்பும் நிகழ்ச்சி லக்னோவில் உள்ள டாடா தொழிற்சாலையில் நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் உ.பி முதல்வர், டாடா சன்ஸ் தலைவர் மட்டுமின்றி, உ.பி துணை முதலமைச்சர் பிரஜேஷ் பதாக், டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனரும், சிஇஓ-வுமான கிரிஷ் வாக் உள்பட மாநில அரசாங்க மற்றும் டாடா குழுமத்தின் மூத்த அதிகாரிகளும் கலந்துக் கொண்டனர்.
1992ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட இந்த லக்னோ டாடா தொழிற்சாலையில் தற்சமயம் பேருந்துகள் மற்றும் லாரிகள் பல்வேறு விதமான பவர்டிரெயின் (Powertrain) ஆப்ஷன்களில் உற்பத்தி செய்யப்படுகின்றன. அதாவது, டீசல் வாகனங்களில் இருந்து எலெக்ட்ரிக் வாகனங்கள் வரையில் உற்பத்தி செய்யப்படுகின்றன. அளவில் பெரியதான டாடா கமர்ஷியல் வாகனங்களை இந்த தொழிற்சாலையில் வருடத்திற்கு 1 லட்சத்திற்கும் அதிகமான யூனிட்கள் உற்பத்தி செய்ய முடியும்.

உ.பி தலைநகர் லக்னோவில் சுமார் 600 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ள இந்த டாடா கமர்ஷியல் தொழிற்சாலையில் 8 ஆயிரத்திற்கும் அதிகமான பணியாளர்கள் பணியாற்றுகின்றனர். இங்கு உற்பத்தி செய்யப்படும் டாடா கமர்ஷியல் வாகனங்கள் இந்திய சந்தையில் விற்பனை செய்யப்படுவது மட்டுமின்றி, வெளிநாட்டு சந்தைகளுக்கும் கப்பல் மூலமாக ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
இந்த தொழிற்சாலை முழுக்க முழுக்க 100% புதுப்பிக்கத்தக்க மின்னாற்றலில் இயங்குகிறது. மேலும், இந்த தொழிற்சாலையில் வாகனங்களை உற்பத்தி செய்வதற்காக பயன்படுத்தப்படும் நீரை காட்டிலும் அதிக அளவிலான நீர் பொது பயன்பாட்டிற்கு விநியோகிக்கப்படுவதாக சான்றளிக்கப்பட்டு உள்ளது. உ.பி மாநில இளைஞர்களுக்கு தொழிற்சாலையில் பணியாற்றுவதற்கு கௌசல்யா, லக்சயா மற்றும் சக்ஷாம் என மூன்று விதமான பயிற்சி திட்டங்களை டாடா குழுமம் வழங்குகிறது.
டாடாவின் இந்த பயிற்சி திட்டங்கள் பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கும் வழங்கப்படுகின்றன. இந்திய அரசு 2045ஆம் ஆண்டிற்குள் நாட்டில் முற்றிலும் கார்பன் உமிழ்வு இல்லாத தொழில்துறையை கொண்டுவரும் முனைப்பில் உள்ளது. இதற்கு ஏற்ப மாற்றம் கண்டு இந்த லக்னோ தொழிற்சாலை தொடர்ந்து வாகனங்களை உற்பத்தி செய்யும் என்று டாடா தெரிவிக்கிறது.
இத்தகைய தொழிற்சாலையில் 10 இலட்சமாவது வாகன உற்பத்தி மைல்கல்லை டாடா எட்டியிருப்பது குறித்து உ.பி முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் பேசுகையில், "டாடா மோட்டார்ஸின் தொழிற்சாலையில் 10 இலட்சம் லாரிகள் மற்றும் பேருந்துகள் உற்பத்தி செய்யப்பட்டு வெளியேற்றப்பட்டு இருப்பது ஒட்டுமொத்த மாநிலத்திற்கும் பெருமையளிக்கும் விஷயம் ஆகும்" என கூறியுள்ளார்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் கமர்ஷியல் வாகனங்கள் விற்பனையில் பெரும் முன்னேற்றத்தை தொடர்ந்து பெற ஆரம்பித்த நம்பிக்கையில்தான் கடந்த 1998ஆம் ஆண்டில் டாடா குழுமம் கார்கள் உற்பத்தி & விற்பனையிலும் இறங்கியது. ஆதலால், கமர்ஷியல் வாகனங்கள் உற்பத்தி என்பது டாடா நிறுவனத்திற்கு நீண்ட வருடங்களாக பழக்கப்பட்ட ஒன்றே ஆகும். இன்னும் சொல்லப்போனால், லக்னோ ஆலையில் 10 இலட்ச கமர்ஷியல் வாகனங்கள் உற்பத்தி என்கிற மைல்கல்லை சற்று தாமதமாகவே டாடா எட்டியுள்ளது என்றே சொல்ல வேண்டும்.


Click it and Unblock the Notifications








